
ஜீவி 3ம் பாகம்: இயக்குனர் தகவல்
முதல் பாகத்தின் நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா உள்ளிட்ட அனைவரும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தனர். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இதன் 3ம் பாகத்தையும் இயக்க இருப்பதாக இயக்குனர் வீ.ஜே.கோபிநாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஜீவி முதல் பாகம் வெளியான மறுநாளே நடிகர் விஷ்ணு விஷாலின் படத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டேன். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. வேறு ஒரு படம் கூட இயக்கி விட்டு வந்து விடுங்களேன் என அவர் கூறிய சமயத்தில், தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் கார்த்திக் தான், நீங்கள் ஏன் ஜீவி 2வை உருவாக்க கூடாது என இரண்டாம் பாகத்திற்கான விதையை போட்டார்.
இப்போது இரண்டாம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்ததாக விஷ்ணு விஷால் படத்தை இயக்குவீர்களா? எனப் பலரும் கேட்கிறார்கள்.. இப்போதும் அவருடன் தொடர்பில் தான் இருக்கிறேன். அதேசமயம் அவர் முடிக்க வேண்டிய படங்களும் தாமதமாகி, இப்போதுதான் அந்த படங்களின் படபிடிப்பில் நடித்து வருகிறார். அதனால் அடுத்த படம் பற்றி எந்த யோசனையும் இல்லை.
அதேசமயம் அடுத்தடுத்த படங்களுக்கான சில கதைகள் தயாராக இருக்கின்றன. அவற்றுக்கு பொருத்தமான நடிகர்களும் தயாரிப்பாளரும் கிடைக்கும்போது அதைத் துவங்கி விடுவேன். ஜீவி படம் வெளியானபோது, ஜீவி 2 உருவாகும் என கனவில் கூட நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. ஆனால் ஜீவி 2 படத்தின் பல காட்சிகளில் மூன்றாம் பாகத்திற்கான லீட் வைத்து தான் கதையை உருவாக்கி இருக்கிறேன். இதனால் ஜீவி 3ம் பாகத்தை உருவாக்குவது உறுதியானது. வேறு படங்கள் கமிட் ஆனால் ஜீவி 3ம் பாகம் தள்ளிப்போகும் இல்லாவிட்டால் உடனே ஆரம்பித்து விடுவேன். இவ்வாறு வீ.ஜே.கோபிநாத் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!