
பிளாஷ்பேக்: எம் ஜி ராமச்சந்திரன் என பெயரிட்டு வெளிவந்த முதல் எம் ஜி ஆர் திரைப்படம் “அந்தமான் கைதி”
1938ம் ஆண்டு இதே பெயரில் கவிஞர் கு ச கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாடகம்தான் “அந்தமான் கைதி”. அதே பெயரில் திரைப்படமாக எடுத்தபோது, படத்தின் கதை மற்றும் வசனத்தை எழுதியதோடு, படத்தின் பாடல்கள் அனைத்தையும் அவரே எழுதியிருந்தார். “காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்” என்ற பாடலைத் தவிர, தந்தை சிதம்பரம் பிள்ளையைக் கொன்று, குடும்பத்தை வஞ்சித்த தனது தாய்மாமனை தீர்த்துக்கட்டி, அதனால் அந்தமான் சிறைக்கு சென்ற நடராஜ் என்ற இளைஞன், விடுதலை பெற்று வெளிவரும்போது, தன்னுடன் விடுதலையாகி வெளிவந்த சக கைதியிடம் தனது கடந்த கால கதையை சொல்வதாக நகரும் இத்திரைப்படத்தில் நடராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எம் ஜி ஆர்.
ஆரம்பத்தில் இயக்குநர் கே சுப்ரமணியம் இப்படத்தை இயக்கி வந்த நிலையில், திடீரென அவர் இத்திட்டத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட்டு, பின்னர் ஒளிப்பதிவாளர் வி கிருஷ்ணன் படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார். இத்திரைப்படத்திலிருந்துதான் டைட்டிலிலும், பாட்டுப் பாட்டுப் புத்தகத்திலும் எம் ஜி ராம்சந்தர் என்பதற்குப் பதிலாக எம் ஜி ராமச்சந்திரன் என பெயர் போடப்பட்டு, முதன் முதலாக அடையாளப்படுத்தப்பட்டார் எம் ஜி ஆர். திக்குரிசி சுகுமாறன், கே சாரங்கபாணி, டி எஸ் பாலையா, டி என் சிவதாணு, பி கே சரஸ்வதி, எம் எஸ் திரௌபதி ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்த இத்திரைப்டத்தில் “அஞ்சு ரூபா நோட்ட கொஞ்சமுன்னே மாத்தி மிச்சமில்லே! காசு மிச்சிமில்லே! கத்திரிக்கா விலை கூட கட்டு மீறலாச்சு காலங்கெட்டுப் போச்சு. காலணா வித்தது இப்போ நாலணாவாப் போச்சுது, கருப்பட்டி வெல்லத்துக்கும் கடும் பஞ்சமாச்சுது எப்படி பிழைப்பதிந்த நாட்டிலே?” என விலைவாசி உயர்வையும், மக்களின் ஏழ்மையையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்த இந்தப் பாடல் அந்நாளில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது என்றாலும், எம் ஜி ஆர் நாயகனாக நடித்து, 1952ம் ஆண்டு மார்ச் 14 அன்று வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்களின் மனங்களை ஈர்க்கத் தவறிய எம் ஜி ஆரின் ஆரம்பகால தோல்விப் படங்களின் பட்டியலில் ஒன்றாகத்தான் இடம்பிடித்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!