
எப்போதும் மனதில் நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திருங்கள் : சூர்யா பேச்சு
"ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மனதுக்குள் ஆழமாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது சீன் படம் மூலமாக இப்போது நடந்திருக்கிறது. பொதுவாக கதைக் கேட்கும்போது நான் அமைதியாகக் கவனிப்பேன், ஆனால் இந்த படத்திற்காகக் கதை சொல்லத் தொடங்கிய 5-வது நிமிடத்திலிருந்தே சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். "சீன்" படத்திற்காக ஒரு தனித்துவமான உலகத்தையே அவர் உருவாக்கியிருக்கிறார். இதில் நஸ்ரியா நடித்திருக்கும் "மாயா" கதாபாத்திரம் மிகவும் நிறைவாக வந்துள்ளது.
இங்கு நஸ்லன் வந்திருக்கிறார், இது அவருடைய முதல் தமிழ்ப் படம்; நீங்கள் தமிழில் இன்னும் பல படங்கள் பண்ண வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல், இது இசையமைப்பாளர் சுஷினின் முதல் தமிழ்ப் படம். கேரளா குழுவினர் இணைந்து இந்த சீன் படத்தை உருவாக்கியிருப்பதால், எனக்கு இது முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாக இருந்தது.
திரைத்துறைக்கு வந்து 28 வருடங்கள், 48 படங்கள் ஆகிவிட்டன; ஆனாலும் இந்த பயணம் எனக்கு மிகவும் புதுமையான ஒன்றாக அமைந்திருக்கிறது. கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களை நீங்கள் எந்தளவுக்கு விரும்பினீர்களோ, அதேபோல் இந்த தீபாவளிக்கும் இது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.
பொதுவாக என்னுடைய படங்கள் ரசிகர்கள் எளிதில் யூகிக்கும்படி இருக்கக் கூடாது என்று நினைப்பேன். இது ஒரு கிரைம் த்ரில்லர் அல்லது மர்டர் மிஸ்ட்ரி படம்; ஆனால் ஜித்துவின் நகைச்சுவை அதைத் தூக்கி நிறுத்தும். திரையரங்குகளில் இதைப் பார்ப்பது ஒரு அருமையான அனுபவமாக இருக்கும்.
சீன் படத்தில் ஒரு வசனம் வரும். "நீங்கதான் பெஸ்ட், உங்களால் எதையும் செய்ய முடியும்". திரையரங்குகளில் படம் பார்க்கும்போது இந்த வசனத்துடன் உங்களால் எளிதாக ஒன்றிவிட முடியும். ஈர்ப்பு விதி மற்றும் நம் எண்ணங்களின் வலிமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. நான் ஜித்துவுடன் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன், அது உண்மையாகவே நடந்தது. உதாரணமாக, இன்ஸ்டாகிராமில் ஒரு விஷயத்தைப் பார்த்தால், அது நல்லதோ கெட்டதோ, அதேபோன்ற 15 ரீல்ஸ்கள் நம் டைம்லைனில் வரிசையாக வரும். எனவே, எப்போதும் உங்கள் மனதில் நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திருங்கள்; உங்கள் வாழ்க்கையிலும் நல்ல விஷயங்களையே ஈர்த்துக் கொள்ளுங்கள்"
இவ்வாறு அவர் பேசினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!