
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித் நடித்த ஆவணப்படம்
இந்த ஆவணப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. பல தியேட்டர்களில் அது தனி ஷோ மாதிரி திரையிடப்பட்டது. டிரைலருக்கு முன்னதாக அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் மற்றும் அவரின் பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன. சென்னையில் தனியார் தியேட்டரில் நடந்த டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஏ.எல். விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஏ.எல்.விஜய் பேசுகையில், ‛‛உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு திரைப்படத்தின் டிரைலருக்கு மட்டும் தனியாகத் திரையரங்கில் ஷோ திரையிடப்பட்டு ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கும் புதிய சாதனை நிகழ்ந்திருக்கிறது இது ஒரு புது ஐடியாவாக இருக்கிறது. இவ்வளவு பெரிய படத்திற்கு இத்தகைய வித்தியாசமான மார்க்கெட்டிங் அணுகுமுறை கண்டிப்பாக தேவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும் சிறுவயதில் நாம் செய்யத் தவறிய அல்லது விட்டுச் சென்ற விஷயங்களைத் தேடி அலைவது தான்.
இந்த ஆவணப்படமும் அதுபோன்ற ஒரு கதைக் களத்தைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அஜித் குமாருக்கு மோட்டார் ரேசிங் மீதிருந்த ஆர்வம் நேற்று இன்று வந்ததல்ல அது அவரது சிறுவயதுக் கனவு. நீண்டகாலமாக அவருக்குள் மறைந்திருந்த அந்தத் தீவிர ஆசை சமீபகாலமாகத்தான் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ள இந்தச் சிறப்பு ஆவணப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்றார்.
மற்ற படங்களை போல இந்த ஆவணப் படத்தையும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கிளாடியேட்டர்ஸ் ஆவணப்பட டிரைலரில் அஜித், ஷாலினியின் மகன், மகள் பேசியிருக்கிறார்கள். இன்னும் சிலர் பேசுவது, இன்னும் சில விஷயங்கள் சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளதாம். நவம்பரில் இந்த படம் ரிலீஸ் என்று சொன்னாலும், நவம்பர் 10ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இதை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்கள் வரவில்லை. ஜீத்து மாதவன் நடிப்பில் சூர்யா நடித்த படமும், பிரபுதேவா, யோகிபாபு நடித்த மூன் வாக் படமும் வருகின்றன. அதனால், தீபாவளி தேதியை பயன்படுத்தலாமா என கிளாடியேட்டர்ஸ் குழு யோசிக்கிறதாம். இதை அஜித் சார்பில் அவர் மனைவி ஷாலினி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!