
அப்போ யுடியூப் அலப்பறை... இப்போ சினிமாவில் கலக்கல்... சொல்கிறார் அருண் குமார்
ஆக 30, 2026
Advertisement
யு டியூப்களில் அரசியல், நகைச்சுவை உட்பட பல்வேறு பிரிவுகளில் அலப்பறைகள் செய்தவர். தனது திறமையால் சினிமாவில் பன்முக கலைஞராக உயர்ந்துள்ள நடிகர் அருண்குமார் நம்முடன் பகிர்ந்தது.
சொந்த ஊர் கோவை. சிறுவயது முதல் சினிமாவிற்கு செல்ல ஆசை இருந்தது. குடும்பத்தில் என்ன சொல்வார்கள் என்பதற்காக முதலில் நம்மை தயார்படுத்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தேன். பின் இயக்குனர் பாலு மகேந்திராவின் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தேன்.
ஆனால் குடும்ப சூழ்நிலையால் மீண்டும் கோவைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டு தனியார் நிறுவனத்தில் ஓராண்டு பணிபுரிந்தேன். அதில் சம்பாதித்த பணத்தை குடும்பத்தினருடன் கொடுத்து விட்டு மீண்டும் சினிமாவிற்குள் நுழைவதற்காக சென்னை சென்றேன். டைரக்டர், கதை, வசனம், நடிப்பு குறித்து கற்றுக்கொண்டே வாய்ப்புக்காக முயற்சி செய்தேன். 3 ஆண்டுகள் எப்படி சினிமாவிற்குள் நுழைவது என தெரியாமல் இருந்தேன்.
அப்போது உறவினரான பிரசன்னா பாலசந்திரனை திருமண நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவரும் என்னை போலவே உறவினர்களிடம் திட்டு வாங்கி கொண்டு இருந்தார். இருவருக்கும் சினிமாவிற்குள் நுழைய எண்ணம் இருந்ததால், அவரின் நண்பரான "குடும்பஸ்தன்" படத்தின் இயக்குனர் ராஜேஷ்வர், நாங்கள் நண்பர்களாக இணைந்து 5 பேர் சேர்ந்து "ஆண்ட பரம்பரை" படத்தை எடுத்து யுடியூப் வலைதளத்தில் பதிவிட்டோம்.
அதன் பின் "நக்கலைட்ஸ்" என்ற யுடியூப் சேனல் துவங்கி அரசியல் தொடர்பான வீடியோக்கள் பதிவு செய்து தொடர்ந்து வெளியிட்டோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் உறவுகளுக்குள் ஏற்படும் விவாதங்களை "அலப்பறைகள்" என்ற பெயரில் சேனலில் பதிவிட்டோம்.
மக்களை ஈர்ப்பதற்காக "பேக் டூ ஸ்கூல்" என்ற வெப்சீரிஸ் இயக்கி நாங்களே நடித்து, வசனம் எழுதி நடித்தோம். அதிக வரவேற்பு கிடைத்து பிரபலமானோம். இதனால் கோவையில் இருந்து இயங்கிய எங்களை சென்னையில் இருந்த சினிமாக்காரர்கள் திரும்பி பார்த்தனர். இதற்கு முக்கிய காரணம் சினிமாவை போலவே தனித்தனி குழு அமைத்தும், முதல் முதலாக யுடியூப் சேனலில் இசையமைத்து இயங்கியது.
சினிமாவில் புது நடிகர்களாக நடிக்கும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது. எனது முதல் படம் "பேச்சுலர்". இப்படத்தின் இயக்குனர் என்னை அழைத்து கதை சொல்லியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பின் "சபாநாயகன்" படத்தில் சின்ன கதாபாத்திரத்திற்கு நடிக்க சென்றேன். ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்திற்கும், நான் நடித்த கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படங்களை தேர்வு செய்து நடிக்க முடிவு எடுத்தேன். "மாங்க், மிஸ்யூ, கொம்பு சீவி, சீயூ" உள்பட பல்வேறு படங்களில் நடித்து வருகிறேன்.
யுடியூப் சேனலில் பணிபுரிந்த போதே வெறும் வீடியோவாக இல்லாமல் சினிமா அமைப்பு போன்று இயங்கியதால் கேமராவை கண்டு பயம் இல்லாமல் இருந்தது. ஆனால் சினிமாவில் நடிக்க துவங்கிய போது முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்டில் அதிக பணியாளர்கள், சப்தம் இருந்ததால் சற்று தயங்கினேன்.
அங்கிருந்த லைட்மேன், நாங்கள் எல்லோருமே கேமராவுக்குள் என்ன இருக்கிறது என்பதற்காகவும், உங்களுக்காகவும் பணிபுரிகிறோம் என என்னிடம் தெரிவித்தார். அதன் பின் அந்த தயக்கமும் விலகி இயல்பாக நடிக்க துவங்கினேன்.
நமக்கு உள்ள திறமையை வெளிப்படுத்த அடிப்படை விஷயங்களை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். இன்ஸ்டாகிராம், யுடியூப்களில் பிரபலமாக வேண்டும் என்பதாக இல்லாமல் நமக்கான திறமையை கண்டறிந்து தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!