
ஒரு மதுரை நாயகன் உதயமாகிறான்... நடிகர் யஷ்வந்த்ராஜ்
மதுரையில் இருந்து சினிமா கனவுடன் சென்னைக்கு சென்ற இந்த இளைஞரின் பயணம், ஒரே நாளில் நடந்த அதிசயம் அல்ல; யுடியூப் தொடர்கள், குறும்படங்கள், சிறு கதாபாத்திரங்கள் என படிப்படியாக முன்னேறி, இன்று "வதந்தி" சீசன் 2 தொடரில் "முடக்கத்தான் மணி என்னும் கதை நாயகனாக இடம்பெற்றுள்ளார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் நம்மிடம் பகிர்ந்தது..
அம்மா அமிர்தலட்சுமி, அப்பா கார்த்திகேயன் காதல் திருமணம் என்பதால் ஆரம்பத்தில் இருவீட்டாரும் எதிர்ப்பு காரணமாக உறவினர் வீட்டிற்கு செல்ல முடியாது; நேரம் கிடைக்கும் போதெல்லாம் சினிமா பார்க்க தியேட்டர்களுக்கு மட்டுமே செல்வோம். அப்படி தான் எனக்குள் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. குடும்ப சூழ்நிலையால் பிளஸ் 2 படித்த பின்பு இரு ஆண்டுகள் கிராபிக் டிசைனராக வேலைக்கு சேர்ந்தேன். பின் அந்த அனுபவத்தை குறிப்பிட்டு சென்னையில் விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பில் சேர்ந்தேன்.
சென்னையில் உடன் படித்த நண்பர்களுடன் குறும்படங்கள் நடித்து அதன் மூலம் வாய்ப்பு தேடினேன். நாங்கள் எடுக்கும் குறும்படங்களுக்கு டப்பிங் செய்ய ஸ்டூடியோ செல்வதற்கு கூட பணம் இருக்காது. தங்கியுள்ள அறையின் ஜன்னல்களை மூடி, தலையணை, போர்வைகளை சுவர்களில் அடுக்கி எதிரொலி வராமல் டப்பிங் செய்வோம். என் சினிமா ஆசை வீட்டில் தெரிந்தால் உடனே மதுரைக்கு கூப்பிட்டுப்பார்கள். சினிமாவில் சாதித்த பிறகுதான் வீட்டில் சொல்ல வேண்டும் என முடிவு செய்தேன்.
ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக தினமும் ரூ.250 முதல் ரூ.300 வரை சம்பளம் கிடைக்கும். பெரிய சம்பளம் இல்லை. ஆனால் அன்றாட செலவுகளை சமாளிக்க உதவியது.
"ஜெயிலர்" படத்தின் பாடல் காட்சியில் ரஜினிகாந்துடன் தியேட்டரில் அமர்ந்திருக்கும் காட்சி கிடைத்தது. திரையில் அவுட் ஆப் போகஸில் தான் வருவேன். ஆனாலும், அந்தக் காட்சியை நண்பர்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து "நம்ம பையன் வந்துட்டான்" என சந்தோஷப்பட்டபோது, நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது.
யாராவது உதவி இயக்குநர் கண்ணில் பட வேண்டும்; கேமராமேன் பார்த்தால்கூட போதும்; வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றுவோம். "நீங்கள் போங்கள்" என்று சொன்னாலும், அங்கேயே இருப்போம். அந்தக் காத்திருப்புதான் இன்று இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
"வதந்தி" சீசன்-2 மதுரை பகுதிகளில் நடக்கும் கதை. இதன் ஆடிஷனில் வேறு கதாபாத்திரத்துக்கான வசனங்கள் கொடுத்தார்கள். அதில் மதுரை வட்டார மொழியில் நன்றாக நடித்ததால், இக்கதை நாயகனான "மணி" கதாபாத்திரத்துக்கான வசனத்தை நடிக்கச் சொன்னார்கள். நான் மணி கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போகிறேன் என சொன்னவுடன் என்னால் நம்ப முடியவில்லை. இயக்குநர் ஆண்ட்ரூ லுாயிஸ் "வதந்தி" சீரிஸ் மூலம் எனக்கு வாய்ப்பை மட்டும் தரவில்லை; வாழ்க்கையையே கொடுத்தார் என்பேன்.
என் மதுரை வட்டார மொழி உச்சரிப்புகளை மாற்றச் சொல்லவில்லை. அதையே கதாபாத்திரத்தின் பலமாக மாற்றினார். நான் சொன்ன சிறிய ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டார். ஒரு புதிய நடிகருக்கு அதைவிட பெரிய நம்பிக்கை வேறு என்ன இருக்க முடியும்.
இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். ஆடிஷனில் தோல்வி வந்தாலும் முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள். ஒரு நாள் நமக்கான கதவு நிச்சயமாக திறக்கும் என உற்சாகமாக பேசி முடித்தார் யஷ்வந்த்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!