ஈகோ ராமன்,Ego Raman
Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : அஸ்ருதா புர டக் ஷன்ஸ்
இயக்கம் : கணேசன் நாச்சிமுத்து
நடிப்பு : ரோபோ சங்கர், சிபி புவனசந்திரன், கீர்த்தனா, கவிதாரமேஷ்
ஒளிப்பதிவு : ஜினோபாபு
இசை : ரெய்மன் ராட்ரிக்ஸ்
வெளியான தேதி : மே 29, 2026
நேரம் : 1 மணிநேரம் 57 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

கோவை அருகே உள்ள கிராமத்து அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் ரோபோ சங்கர். ரொம்பவே ஈகோ, ஜாதிவெறி, பொறமை பிடித்த மனிதர். எப்போதும் தான் மட்டுமே ஜெயிக்கணும், தானே உயர்வானவன் என நினைத்து, அதை மீறுபவர்களை மறைமுகமாக பழிவாங்குகிறார். அவரால் உயிர் பிழைக்கப்பட்டு, அவரை ரோல்மாடலாக நினைக்கும் முன்னாள் மாணவரான ஹீரோ சிபிபுவனசந்திரன் அவர் மகளை காதலிக்கிறார். ஈகோ, ஜாதி வெறியால் ரோபோ ஆட, என்ன நடக்கிறது. கடைசியில் ஜெயித்தது ஆசிரியரா? மாணவரா? இதுதான் ஈகோராமன் கதை.

இதுவரை காமெடியனாக நடித்து வந்த மறைந்த நடிகர் ரோபோ சங்கர், முதன்முறையாக இதுவரை நடித்திராத சீரியசனான வேடத்தில், அதிலும் வில்லத்தனம் கொண்டவராக வருகிறார். ஒரு இடத்தில் கூட அவரின் வழக்கமான கிண்டல், கேலி, பழைய பாடிலாங்குவேஜ், ஏன் அவர் ஸ்டைலில் ஒரு டயலாக் கூட இல்லை. அப்படியே சுந்தரராமன் வாத்தியாராக முழுவதுமாக மாற்றியிருக்கிறார் இயக்குனர். தனது கேரக்டர் தன்மை உணர்ந்து ரோபோவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். சில இடங்களில் நம்மை எரிச்சல், கோபப்படுத்தும் அளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக, தன் மாணவன் தன் மகளை காதலிப்பது அறிந்து ஜாதி வெறியால் பொங்குகிற காட்சிகளில், சக ஊழியர்களிடம் வெறுப்பை உமிழ்கிற சீன்களில், ஒரு நாயை அடிக்கிற இடங்களில் சபாஷ் வாங்குகிறார். என்ன, இந்த படத்தை பார்க்க அவர் இல்லாதது பெரும் சோகம். சில இடங்களில் கொஞ்சம் நாடகத்தன்மை இருந்தாலும், ஈகோ ராமன் அவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம்.

அரசு வேலைக்கு தயார் ஆகிற கேரக்டரில் ஹீரோ சிபிபுவனசந்திரன் வருகிறார். அவரின் வறுமை, காதல், பணத்துக்காக திண்டாடுகிற சீன் ஓகே. தனது வாழ்க்கையை மாற்றிய ரோபோ சங்கரை பார்த்து அவர் உருகுகிற காட்சிகளிலும், அவரால் புறக்கணிக்கப்படும்போது பதறுகிற காட்சிகளிலும் ஓரளவு நடித்து இருக்கிறார். கிளைமாக்சில் ஜெயித்துவிட்டு மாவட்ட கல்வி அதிகாரியாக ரோபோ தலைமை ஆசிரியராக இருக்கும் பள்ளிக்கே அவர் வந்து பேசுவது தன்னம்பிக்கை சீன்கள். மாணவன், ஆசிரியர் உறவு அருமையாக சொல்லப்பட்டு இருக்கிறது. காதல் காட்சிகள் ஓகே.

ஹீரோயினாக வரும் கீர்த்தனா சில சீன்களில் வந்தாலும், சினிமாதனம் இல்லாமல் நடித்து இருக்கிறார். ஹீரோ அம்மாவாக வரும் கவிதா ரமேஷ் நடித்து தள்ளியிருக்கிறார். அவர் நடிப்பில் அவ்வளவு செயற்கை தனம். ரோபோவின் சக ஆசிரியர், ஊழியர், அந்த ஊர் சிறுவர்கள் நடிப்பு பரவாயில்லை ரகம்.

படத்தின் பட்ஜெட் காரணமாக ஒளிப்பதிவு, சீன்களில் நேர்த்தி குறைவாக இருக்கிறது. ரெய்மன் ராட்ரிக்ஸ் இசை, பாடல்கள் பெரிதாக செட்டாகவில்லை. இப்படிப்பட்ட கதை விறுவிறுப்புடன், திருப்பங்களுடன் நகர்ந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முந்தைய பார்மட்டில் மெதுவாக செல்கிறது. கிளைமாக்ஸ் உள்ளிட்ட முக்கியமான காட்சிகளை இன்னும் அழுத்தமாக எடுத்து இருக்கலாம். அதுவும் மிஸ்சிங். நல்ல கதை. ஆனால், திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார்கள்.

ஈகோ ராமன் - இந்த படத்தை பார்க்க ரோபோ சங்கர் இல்லையே என்ற சோகம் வருகிறது.

 

பட குழுவினர்

ஈகோ ராமன்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓