கட்ஸ்,Guts
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ஓபிஆர்பி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : ரங்கராஜ்
நடிகர்கள் : ரங்கராஜ், சுருதி நாராயணன், நான்சி, டெல்லி கணேஷ், பிர்லா போஸ், சாய்தீனா, ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா
வெளியான தேதி : 13.06.2025
நேரம் : 2 மணி நேரம் 11 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5

கதைக்களம்

கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி சுருதி நாராயணனை பிரசவத்திற்காக ரங்கராஜ் (அப்பா) அழைத்து செல்லும் போது ஒரு கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதனால் பிறக்கும் போதே தந்தையை இழந்த ரங்கராஜ் (மகன்), தாயையும் சிறு வயதிலேயே இழக்கிறார். இந்நிலையில் தாய் சுருதி நாராயணன் விருப்பப்படி போலீஸ் அதிகாரி ஆகிறார் ரங்கராஜ். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரங்கராஜ், மனைவி நான்சி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். திடீரென ரங்கராஜ் மனைவி நான்சி வீட்டில் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். மனைவியை பறி கொடுத்த ரங்கராஜ் வாழ்க்கையையே வெறுத்த நிலையில் அவருக்கு தனது மனைவியையும், தந்தையையும் கொலை செய்த கொலையாளி பற்றி தகவல் தெரிய வருகிறது. அந்த கொலையாளி யார்? எதற்காக கொலை செய்தார்? அதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை.

முதல் படத்திலேயே தந்தை, மகன் என்ற இரட்டை கேரக்டரில் நடித்து இயக்கி உள்ளார் ரங்கராஜ். நடிகர், இயக்குனர் என ரயில் - தண்டவாளம் போல் இருந்தாலும் கதை என்ற ரயிலை சரியாக அந்த தண்டவாளத்தில் இயக்கி இருக்கிறார். ஆனாலும் வேகம் என்ற திரைக்கதையில் பேசஞ்சர் ரயிலை போல் மெதுவாக இயக்கி பயணிகளின் (ரசிகர்களை) பொறுமையை சோதித்துள்ளார் ரங்கராஜ். இருப்பினும் தனது 'கட்ஸ்' படத்தை தாங்கி பிடிக்கிறார்.
தந்தையாக மீசையை முறுக்கி விட்டபடி மிரட்டலான தோற்றத்திலும், நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், கதைக்கேற்ற கச்சித நடிப்பை கொடுத்து உள்ளார். மனைவியுடன் பாசமழை பொழிவது, மனைவி இறந்ததும் கதறி அழுவது எனகாட்சிகளில் அவரது நடிப்பு நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் ஒரு இயக்குனராக இன்னும் அவர் இந்த கதைக்காக ஜெயிக்க வேண்டி இருக்கிறது.

கிராமத்தில் உள்ள கர்ப்பிணி பெண்ணாக சுருதி நாராயணன். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதேநேரம் அவரது கேரக்டர் அழுத்தமாகவும் இருக்கிறது. அதேபோல் மனைவியாக வரும் நான்சி, ஒருசில காட்சிகளே வந்தாலும் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது. போலீசாக வரும் டெல்லி கணேஷ், சப்-இன்ஸ்பெக்டராக வரும் பிர்லா போஸ், சாய் தீனா, ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோரின் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

மனோஜ் ஒளிப்பதிவு கிராமத்தை அழகாக காட்டி இருப்பதுடன் காட்சிகளும் பளிச்சுடுகிறது. ஜோஸ் பிராங்க்ளின் இசை படத்தை ரசிக்க வைக்கிறது. பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

பிளஸ் & மைனஸ்

முதல் படத்தில் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்கு இயக்குனர் ரங்கராஜிற்கு வாழ்த்துக்கள். இருப்பினும் திரைக்கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கும் அவர், எமோஷன் காட்சிகளிலும் உணர்வு கலந்த நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்து இருக்கிறார். நடிகராக ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும், இயக்குனராக இன்னும் கொஞ்சம் அனுபவத்தோடு அவர் பயணிக்க வேண்டி இருக்கிறது. திரைக் கதையில் ஏற்பட்டுள்ள தேக்கம் மற்றும் வசனங்கள் ரசிகர்களை சோர்வடைய செய்கிறது.

கட்ஸ் - துணிவு

 

பட குழுவினர்

கட்ஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓