
பேரன்பும் பெருங்கோபமும்
விமர்சனம்
தயாரிப்பு : இ5 என்டர்டைன்மென்ட்
இயக்கம் : சிவப்பிரகாஷ்
நடிகர்கள் : விஜித் பச்சன், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், தீபா, கீதா கைலாசம், சாய் வினோத், சுபத்ரா ராபர்ட், லோகு, பாவா சந்திரசேகர்
இசை : இளையராஜா
வெளியான தேதி : 06.06.2025
நேரம் : 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
கதைக்களம்
அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் விஜித் பச்சனை குழந்தை கடத்தல் வழக்கில் போலீஸ் கைது செய்கின்றனர். அவரிடம் போலீஸ் அதிகாரி சாய் வினோத் விசாரணை நடந்தும் போது 25 ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவிக்கு நடந்த கொடூர சம்பவம் பற்றி சொல்கிறார். போலீசாரையே திடுக்கிட வைத்த அந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் படத்தின் மீதி கதை.
தமிழ் சினிமாவில் ஜாதிய படங்களுக்கும், ஆணவக் கொலை சம்பவம் தொடர்பான படங்களுக்கும் குறைவிருக்காது. அந்த வகையில் இந்தப் படமும் ஆணவக் கொலை பற்றி பேசும் படமாகவும், அதை அரங்கேற்றும் ஜாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பேசி இருக்கிறது. ஆணவக் கொலையை தடுப்பது பற்றி சமூகத்திற்கு பாடமாக உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் சிவபிரகாஷ். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருந்தால் மேலும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.
இயக்குனர் மற்றும் நடிகர் தங்கர்பச்சானின் மகனான விஜித் பச்சான் நடித்துள்ள இரண்டாவது படம் இது. அவருடைய நடிப்பு மற்றும் அதை வெளிப்படுத்தும் திறமை முதல் படத்திற்கும், இந்த படத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது. ஹீரோயினாக வரும் ஷாலி அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு காதல் மற்றும் எமோஷன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். அமைச்சராக வரும் மைம் கோபி வில்லன் சுதாபாத்திரத்தில் மிரட்ட அவருக்கு அருள்தாஸ், லோகு ஆகியோர் தோள் கொடுக்கின்றனர். ஜாதி வெறி பிடித்த அம்மா கேரக்டரில் சுபத்ரா நடிப்பு வியக்க வைக்கிறது. நீதிபதியாக வரும் கீதா கைலாசம் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக பின்னனி இசையில் புதிய பரிமாணத்தை வழங்கி உள்ளார். தேனி மற்றும் கேரளாவின் அழகை திறம்பட ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜே பி.
பிளஸ் & மைனஸ்
ஜாதி கொடுமையால் நிகழும் ஆணவக் கொலைகளை கோபத்துடன் உரக்க சொல்கிறது இந்த படம். இருப்பினும் படத்தில் பேரன்பு குறைவாகவும் பெருங்கோபம் அதிகமாகவும் இருக்கிறது. பார்த்து பழகிய கதை என்றாலும் அதை புதிய கோணத்தில் சுவாரசியமான திரைக்கதையுடன் கொடுத்திருந்தால் இன்னும் ரசிக்கும் படியாக இருந்திருக்கும். இயக்குனருக்கு இரண்டு கண்களாக உதவி செய்திருப்பது இளையராஜாவின் இசை மற்றும் ஜேபியின் அழகான ஒளிப்பதிவு.
பேரன்பும் பெருங்கோபமும் - ரசிகர்களுக்கும் பொருந்தும்