மின்மினி,Minmini

மின்மினி - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷு புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஹலிதா ஷமீம்
இசை - கதீஜா ரஹ்மான்
நடிப்பு - பிரவீன் கிஷோர், கவுரவ் காளை, எஸ்தர் அனில்
வெளியான தேதி - 9 ஆகஸ்ட் 2024
நேரம் - 2 மணிநேரம் 23 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் சில வித்தியாசமான முயற்சிகள் எப்போதோ ஒரு முறை நடப்பதுண்டு. இந்தப் படத்திற்காக எட்டு ஆண்டுகள் காத்திருந்து நாயகன், நாயகி சம்பந்தப்பட்ட டீன் ஏஜ் மற்றும் இளமைக் கால காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம். ஒரு படத்திற்காக இத்தனை வருடக் காத்திருப்பு உலகில் வேறு எந்த சினிமாவிலும் நடைபெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.

ஊட்டி கான்வென்ட்டில் கால்பந்து வீரராக அனைவருக்கும் பிடித்தமானவராக இருக்கிறார் கவுரவ் காளை. அந்த கான்வெட்டில் புதிதாக வந்து சேர்கிறார் பிரவீன் கிஷோர். பிரவீனை அடிக்கடி வெறுப்பேற்றிக் கொண்டே இருக்கிறார் கவுரவ். பின்னர் அவர் மீது நட்பு கொள்கிறார். இருவரும் நண்பர்களாக நெருங்கும் வேளையில் பள்ளி பேருந்து விபத்தில் பிரவீனைக் காப்பாற்றிவிட்டு கவுரவ் இறந்து போகிறார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. கவுரவ்வின் இதயத்தைத் தானமாகப் பெற்ற எஸ்தர் அனில், அந்தப் பள்ளியில் படிக்க விரும்பி வந்து சேர்கிறார்.

கவுரவ்வின் ஆசைகள் என்ன என்பதைத் தெரிந்து அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார். கவுரவ் உடன் நட்பாகப் பழக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தவிக்கிறார் பிரவீன். எட்டு வருடங்கள் கடக்கிறது. காஷ்மீர் மலையில் எஸ்தர் அனிலும், பிரவீனும் பைக் பயணத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருமே தனித் தனியாக, கவுரவ்வின் ஆசைகளில் ஒன்றான பைக் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்தப் பயணத்தில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் முதல் பாதி ஊட்டி கான்வென்ட், கவுரவ், பிரவீன் இடையேயான குறும்பான மோதல்களால் மட்டுமே கடந்து போகிறது. அந்த டீன் ஏஜ் வயதில் இருவரது நடிப்பும் மிக இயல்பாக அமைந்துள்ளது. குறிப்பாக கவுரவ் நடிப்பு அந்தக் கால 'மௌன ராகம்' கார்த்திக் கதாபாத்திரம் போல குறைவாக வந்தாலும் நிறைவாக அமைந்துள்ளது. அப்பாவி மாணவனாக பிரவீன், பயந்து நடுங்கி ஒதுங்கி ஒதுங்கி செல்வது யதார்த்தமாக உள்ளது. இடைவேளைக்கு முன்பாக எஸ்தர் அனில் காட்சிகள் குறைவுதான். இடைவேளைக்குப் பின் இளம் வயதுப் பெண்ணாக எஸ்தர், இளைஞனாக பிரவீன் ஆகியோர் காஷ்மீர் பைக் பயணத்தில் கிளைமாக்ஸ் வரை தனித் தனியே பைக்கிலேயே பயணிக்கிறார்கள்.

அவர்கள் இடையே மெல்ல உருவாகும் நெருக்கம், பின்னர் பிரிவு, எஸ்தர் ஏன் தன் பின்னால் வருகிறார் என கேள்வியுடனேயே நகரும் பிரவீன் என பைக் பயணம் செல்லும் சாலை போல கரடு முரடாகவும், சம நிலையாகவும், திருப்பங்களுடனும் திரைக்கதை நகர்கிறது. அவர்கள் வயதுக்கேற்ற கதாபாத்திரம் என்பதால் பிரவீன், எஸ்தர் இருவருமே அவர்களாகவே தெரிகிறார்கள்.

படத்தின் கதைக்களம் ஊட்டி, காஷ்மீர் என விரிந்து நிற்கிறது. ஒரு ஒளிப்பதிவாளருக்கு அந்த கதைக்களம் 'ஆப்பிள்' சாப்பிடுவது போல. அதிலும் இடைவேளைக்குப் பிறகான காஷ்மீர் பயணத்தில் நாயகன், நாயகி செல்லும் பைக் உடனேயே நாமும் பைக் ஓட்டிச் செல்வதைப் போன்ற ஒரு உணர்வைத் தருகிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். பின்னணி இசை, காட்சிகளுக்குப் பொருத்தமாய் அமைந்து திரையில் காணும் அந்த உணர்வுகளை நமக்கும் சேர்த்து கடத்துகிறது.

பிரவீன், எஸ்தர் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தாலும் எஸ்தர் யார் என்பதே தெரியாமல் பிரவீன் இருக்கிறார் என்பது ஆச்சரியமாக மட்டுமல்ல அதிர்ச்சியாகவும் இருக்கிறது. குறைந்தபட்சம் எஸ்தரை வேறு ஒரு வகுப்பில் படிப்பவர் என்றாவது சொல்லி இருக்கலாம். என்னதான் கவுரவ் நினைப்பாகவே பிரவீன் இருந்தாலும் பக்கத்து டேபிளில் இருப்பவரைக் கூடத் திரும்பிப் பார்க்க மாட்டாரா என்ன ?. இன்னும் சில கேள்விகளை சினிமாத்தனம் என நினைத்து புறந்தள்ளினாலும் இந்த ஒன்றையாவது மாற்றியிருக்கலாம்.

மென்மையான காதல் படங்களை ரசிப்பவர்களுக்கும், பைக் பயணத்தை செய்ய விரும்புபவர்களுக்கும் படம் பிடிக்கலாம்.

மின்மினி - வெளிச்சம்

 

மின்மினி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மின்மினி

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓