சிக்லெட்ஸ் 2கே கிட்ஸ்,chiclets 2k kids
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எஸ்எஸ்பி பிலிம்ஸ்
இயக்கம் - முத்து எம்
இசை - பாலமுரளி பாலு
நடிப்பு - நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா
வெளியான தேதி - 2 பிப்ரவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
குறிப்பு - 'ஏ' சான்றிதழ் திரைப்படம்

தலைமுறை மாற மாற இளம் வயதினரின் எண்ணங்களிலும் மாற்றங்கள் வரும். அந்தக் கால இளம் வயதினருக்கும், இந்தக் கால இளம் வயதினருக்குமான வித்தியாசங்கள் நிறையவே உண்டு. அந்த விதத்தில் இன்றைய '2 கே கிட்ஸ்'களில் சிலர் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி சொல்லியிருக்கும் படம். மகள்களைப் பெற்றவர்களுக்குத்தான் அதன் பயம் என்ன என்பது புரியும்.

தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் சாயல்தான் இந்தப் படத்தின் கதையும். அந்தப் படம் வெளிவந்த போது பிறந்த 2 கே கிட்ஸ்கள் இந்தப் படத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை 'ஏ' சான்றிதழ் பெற்ற படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் முத்து.

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா மூவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய தோழிகள். நயன் மீது அவரது அம்மா சுரேகா வாணி, அம்ரிதா மீது அவரது அப்பா ஸ்ரீமன், மஞ்சீரா மீது அவரது அப்பா ராஜகோபால் அதிக பாசம் வைத்துள்ளார்கள். தங்களது மகள்களை நன்றாகப் படிக்க வைத்து நல்ல வேலையில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், நயன், அம்ரிதா, மஞ்சீரா ஆகியோர் அவர்களது ஆண் நண்பர்களுடன் வீட்டில் பொய் சொல்லிவிட்டு உடல் ரீதியாக அனுபவிக்க வேண்டும் எனச் செல்கிறார்கள். மகள்கள் இப்படி சென்ற விஷயம் தெரியவர சுரேகா, ஸ்ரீமன், ராஜகோபல் மகள்களைத் தேடிச் செல்கிறார்கள். மகள்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். இதன் பின் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக் கதை.

மதுப் பழக்கம், போதைப் பழக்கம், புகைப் பழக்கம் என இன்றைய இளம் தலைமுறை ஒரு பக்கம் சீரழிந்து கொண்டுள்ளதாக சமூக அக்கறை உள்ள பலரும் கவலைப்படுகிறார்கள். படிக்கும் வயதில் காதல் என்பதையும் தாண்டி உடல் ரீதியிலான உறவு என்பதையும் கேள்விப்படுகிறோம். அப்படியான சிலரைப் பற்றிய விஷயங்களை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அப்படியான காட்சிகள்தான் இந்தப் படத்தில் நெருடலாக இருக்கின்றன. ஆனால், அவற்றைக் காட்டினால் மட்டுமே இந்தப் படத்தில் இயக்குனர் சொல்ல நினைக்கும் விஷயமும் புரியும். இவற்றோடு தன்பாலின ஈர்ப்புள்ள ஒரு மகள் என்று வேறு ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்.

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா மூவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஆனால், அவர்களது ஆடைகள்தான் குறைவாக உள்ளது. தங்கள் மகள்களைப் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடையும் அவர்களது பெற்றோர்களாக சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் அவ்வளவு பதட்டத்துடன் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீமன் மட்டும் வழக்கம் போல கொஞ்சம் ஓவராக நடித்துள்ளார். நயன் நண்பராக சாத்விக் வர்மா, அம்ரிதா நண்பராக ஜேக் ராபின்சன், மஞ்சீரா நண்பராக ரசீம் நடித்திருக்கிறார்கள். மனதைப் பார்த்து காதலிக்காமல் உடலைப் பார்த்து காதலிப்பவர்கள்.

'ஏ' சான்றிதழ் படங்களின் இசையமைப்பாளர் என்ற முத்திரை வராமல் பாலமுரளி பாலு பார்த்துக் கொள்ள வேண்டும். லைட்டிங்கில் தனி கவனம் செலுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார்.

கிளைமாக்சில் எப்படியும் மகள்கள் திருந்துவது போலத்தான் காட்சிகள் இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. இருந்தாலும் தங்களது தவறுகளை அவர்கள் எப்படி உணர்ந்து கொண்டார்கள் என்பதை அதன் போக்கிலேயே சரியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

சிக்லெட்ஸ் - இனிப்பல்ல…

 

பட குழுவினர்

சிக்லெட்ஸ் 2கே கிட்ஸ்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓