ஒம் வெள்ளிமலை,Om Vellimalai
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சூப்பர்ப் கிரியேஷன்ஸ்
இயக்கம் - ஓம் விஜய்
நடிப்பு - சூப்பர்குட் சுப்பிரமணி, வீர சுபாஷ், அஞ்சு கிருஷ்ணா
வெளியான தேதி - 24 பிப்ரவரி 2023
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் நடித்த படங்கள், அடுத்த கட்ட கதாநாயகர்கள் நடித்த படங்கள், புதுமுக நடிகர்கள் நடித்த படங்கள் வருவது வழக்கம். ஆனால், சிறு சிறு வேடங்களில் நடித்த ஒருவரை கதையின் நாயகனாக நடிக்க வைத்து ஒரு படம் வருவது என்பது மிக மிக ஆச்சரியமான ஒன்று.

பல படங்களில் கான்ஸ்டபிளாக, ஊரில் உள்ள நபர்களில் ஒருவராக நீங்கள் பார்த்திருக்கும் நடிகர் 'சூப்பர் குட் சுப்பிரமணி'. அவரை கதையின் நாயகனாக நடிக்க வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஓம் விஜய்.

கீழ் வெள்ளிமலை என்ற கிராமத்தில் இருக்கும் பரம்பரை சித்த வைத்தியர் சூப்பர் குட் சுப்பிரமணி. அவர் சிறுவயதில் தவறான சிகிச்சை அளித்து ஒருவர் மரணமடைய காரணமானார் என்பதால் அவரது வைத்தியத்தை பல வருடங்களாக ஊரால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். தங்களது பாரம்பரிய வைத்தியத்தை மக்கள் இப்படி ஏற்காமல் இருக்கிறார்களே என்ற கடும் வருத்தத்தில் இருக்கிறார் சுப்பிரமணி. இந்நிலையில் ஊரில் ஒரு விதமான அரிப்பு நோய் அனைவருக்கும் வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட ஒருவரை குணப்படுத்துகிறார் சுப்பிரமணி. மற்றவர்களையும் குணப்படுத்த அந்த மூலிகையைத் தேடி மலைக்குச் செல்கிறார். அதைக் கொண்டுவந்து எஞ்சிய மக்களைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆங்கில வைத்திய முறை இப்போது அதிகமாகிவிட்டாலும் பாரம்பரிய சித்த வைத்தியத்தை பின்பற்றுபவர்கள் பலரும் இருக்கிறார்கள். எந்த பக்க விளைவும் இல்லாத அந்த வைத்திய முறையை இன்றைக்கும் பலர் உதாசீனப்படுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பாடமாக இந்தப் படத்தைக் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் ஓம் விஜய்.

பரம்பரை சித்த வைத்தியராக அந்தக் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார் சூப்பர் குட் சுப்பிரமணி. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த போது கூட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் அவர். ஒரு முழு படத்தையும் தன் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார். தங்களது பாரம்பரிய வைத்தியத்தை இந்த ஊர் மக்கள் ஏற்க மறுக்கிறார்களே என்ற வேதனையுடனும், என்றாவது ஒரு நாள் தங்கள் வைத்தியத்தின் மகிமை அவர்களுக்குப் புரிய வரும் என்ற நம்பிக்கையுடனும் இருக்கும் கதாபாத்திரம்.

படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திர நடிகர்கள், நடிகைகள் அனைவருமே பொருத்தமான தேர்வாக இருந்து அந்த மலைவாழ் கிராமத்து மக்களாக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

அந்த மலை கிராமத்தைச் சுற்றிச் சுற்றி அழகுடன் பதிவு செய்திருக்கிறது மணி பெருமாள் ஒளிப்பதிவு. என்ஆர் ரகுநந்தன் பின்னணி இசையில் முடிந்தவரை பக்கபலமாய் இருந்திருக்கிறார்.

சில காட்சிகள் பாராட்டும்படி இருந்தால், அடுத்து சில காட்சிகள் அமெச்சூர்த்தனமாக இருப்பது படத்தின் குறையாக உள்ளது. நல்ல கதையைத் தேர்வு செய்த இயக்குனர் தொடர்ச்சியாக அனைத்து காட்சிகளிலும் 'மேக்கிங்'ல் இன்னும் கூடுதல் கவனத்தை செலுத்தியிருக்கலாம்.

ஓம் வெள்ளிமலை - வெள்ளி

 

பட குழுவினர்

ஒம் வெள்ளிமலை

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓