செஞ்சி,Gingee
Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஏலியன் பிக்சர்ஸ்
இயக்கம் - கணேஷ் சந்திரசேகர்
இசை - எல்.வி.முத்து கணேஷ்
நடிப்பு - கணேஷ் சந்திரசேகர், கெசன்யா
வெளியான தேதி - 18 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2/5

சினிமாவில் நடிக்க வேண்டும், ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது பலருக்கும் ஆசையாக, லட்சியமாக இருக்கும். ஆனால், ஆசைப்படும் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது. சிலருக்கு உடனே கிடைக்கலாம், சிலருக்கு பல வருடங்கள் கழித்து கூட கிடைக்கலாம். இந்தப் படத்தின் இயக்குனர், நடிகர் கணேஷ் சந்திரசேகர் இளம் வயதில் ஆசைப்பட்டதை பல வருடங்கள் கழித்து அறுபது வயதில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அவரே தயாரித்து, எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து தனது மூதாதையர்கள் வாழ்ந்த புதுச்சேரிக்கு வருகிறார் கெசன்யா. பழங்காலப் பொருட்கள் அந்த வீட்டின் பாதாள அறையில் உள்ளன. அந்த இடத்தில் ஏதோ ஒரு அனுமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார். அங்கு இருக்கும் ஒரு ஓலைச் சுவடியைத் திறந்து பார்த்த போது சில ஆவிகள் அதைச் சுற்றி வருவதையும் பார்க்கிறார். இது பற்றி தொல்லியல் துறை ஆய்வாளரான கணேஷ் சந்திரசேகரிடம் ஆலோசித்து அவரை வீட்டிற்கு வரவழைக்கிறார். அந்த ஓலைச் சுவடியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதையல் ஒன்று பற்றிய தகவல் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார் கணேஷ். தன் உதவியாளர், கெசன்யா ஆகியோருடன் அந்தப் புதையலைத் தேடிச் செல்கிறார் கணேஷ். புதையல் அவர்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்த மையக் கதையுடன் கிளைக்கதைகளாக ஒரு கிராமத்தில் இருந்து காட்டிற்குள் செல்லும் சிறுவர்கள், சிறுமி மற்றும் அந்தக் காட்டில் திரியும் தீவிரவாதிகள் என அவையும் புதையல் கதையுடன் சேர்ந்து நகர்கிறது.

படத்தின் பல காட்சிகள் ஒரு டாகுமெண்டரி படம் போலவே நகர்கின்றன. ஆங்கிலத்தில் வசனம் பேசும் காட்சிகளுக்கு பின்னணியில் தமிழிலும் ஒலிப்பதிவு செய்து ஆங்கிலமும், தமிழும் கலந்து ஒலித்து குழப்புகின்றன. சினிமாவுக்குரிய இலக்கணமாக திரைக்கதையை மட்டும் புதையல், காடு, தீவிரவாதிகள், சிறுவர்கள் வீட்டை விட்டு காட்டிற்குள் சென்று தவிப்பது, என ஓரளவிற்கு யோசித்திருக்கிறார் இயக்குனர் கணேஷ். அதைக் காட்சிப்படுத்துவதிலும், விறுவிறுப்பாக நகர்த்துவதிலும் தடுமாறியிருக்கிறார். சிறுவர்களிடம் மட்டும் இயல்பான நடிப்பை வரவழைத்திருக்கிறார். அவர் உட்பட ரஷிய நடிகை கெசன்யா, மற்ற நடிகர்களுக்கு எப்படி நடிப்பது என்பது தெரியாமல் வசனத்தை பாடம் படிப்பது போல ஒப்பித்துப் பேசியிருக்கிறார்கள்.

காடும், காடு சார்ந்த இடங்களிலும் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் ஜின்டே ஒரு சில பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த லொகேஷன்கள் அருமையான தேர்வு. புதையலைத் தேடி பல இடங்களுக்கு திரைக்கதை நகர்வதால் அனைத்து இடங்களையும் நன்றாகப் பதிவு செய்ய வேண்டும் என ஒளிப்பதிவாளரின் ஆர்வம் தெரிகிறது. சில காட்சிகளில் காடு போன்ற அரங்குகளை இயற்கையாகத் தெரிவது போல அமைத்திருக்கிறார் கலை இயக்குனர்.

சிறுவர்களுக்கான பிரத்யேகப் படமாக எடுத்து அதைச் சுற்றி புதையல், தீவிரவாதிகள் என கிளைக் கதைகளை சேர்த்திருந்தால் குழந்தைகளுக்கான படமாகவாவது ரசித்திருக்க முடியும்.

செஞ்சி - 'சிறுவர்' கோட்டை

 

செஞ்சி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

செஞ்சி

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓