கணம்,Kanam
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - ஸ்ரீகார்த்திக்
இசை - ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு - ஷர்வா, அமலா, சதீஷ், ரமேஷ் திலக், நாசர், ரிது வர்மா
வெளியான தேதி - 9 செப்டம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

'சயின்ஸ் பிக்ஷன்' எனப்படும் அறிவியல் புனைவுக் கதைகள் தமிழ் சினிமாவில் அதிகம் வருவதில்லை. எப்போதோ ஒரு முறைதான் வரும். அப்படிப்பட்ட படங்களுக்கு மிகப் பெரும் பட்ஜெட் தேவைப்படும். ஆனாலும், தகுந்த பட்ஜெட்டில் நமது தமிழ் சினிமா ரசிகர்களைக் கவரும் விதத்தில் அப்படி சில படங்கள் வந்துள்ளன.

'டைம் மிஷின், டைம் டிராவல்' எனப்படும் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்குச் செல்லும் அதீத கற்பனை கதைகளும் சயின்ஸ் பிக்ஷனில்தான் அடங்கும். இதற்கு முன்பு 'இன்று நேற்று நாளை, 24' ஆகிய படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள படம் 'கணம்'.


ஒரு அறிவியில் புனைவுக் கதையில் ஒரு அம்மா சென்டிமென்ட்டை இந்த அளவிற்கு இணைத்து ரசனையுடனும், நெகிழ்ச்சியுடனும் சொல்ல முடியுமா என வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகார்த்தி. அவருடைய அறிமுகப்படத்திலேயே இப்படி ஒரு சோதனையான முயற்சியில் தைரியமாக இறங்கி வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அம்மாவை இழந்தவர்களுக்கு, அதிலும் சிறு வயதிலேயே அம்மாவை இழந்தவர்களுக்கு அந்த வலி என்றும் தீராத ஒன்று. அம்மாவை மீண்டும் பார்க்க மாட்டோமா, அம்மா மீண்டும் நமக்கு வந்து அன்பைப் பொழிய மாட்டாரா என்று ஏங்க வைக்கும். அந்த வலி இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்குக்கும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால்தான் இப்படி ஒரு நெகிழ்வான படத்தை அவரால் கொடுக்க முடிந்துள்ளது.


சிறு வயதிலேயே அம்மாவை இழந்தவர் ஷர்வா. சிறு வயது நண்பர்கள் சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோருடன் ஒன்றாக அறையில் இருக்கிறார். இசைக் கலைஞராக வேண்டும் என்பது அவரது லட்சியம். இந்த சூழ்நிலையில் டைம் மிஷின் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள விஞ்ஞானியான நாசரை சந்திக்க வேண்டிய சூழல் வருகிறது. அம்மா ஏக்கத்தில் இருக்கும் ஷர்வா நாசர் கண்டுபிடித்துள்ள டைம் மிஷின் மூலம் தனது அம்மா இறந்த 1998ம் ஆண்டிற்குச் சென்று விபத்தில் இறந்த அம்மா அமலாவிவின் மரணத்தைத் தடுக்க முயற்சிக்கிறார். அவருடன் நண்பர்கள் சதீஷ், ரமேஷ் திலக்கும் அந்த கடந்த காலத்திற்குப் பயணிக்கிறார்கள். அம்மாவின் விபத்தை ஷர்வா தடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


டைம் மிஷின் கதைகளுக்கான திரைக்கதை மிகவும் முக்கியம். ரசிகர்களை எந்த விதத்திலும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது. இந்தப் படத்தில் மிகத் தெளிவான திரைக்கதையை எழுதியிருக்கிறார் ஸ்ரீகார்த்திக். 2019லிருந்து இளைஞர்களாக இருக்கும் ஷர்வா, சதீஷ் ரமேஷ் திலக் 1998க்குச் செல்ல, 1998ல் சிறுவர்களாக இருக்கும் அவர்கள் 2019க்குள் எதிர்பாராமல் வர எந்த குழப்பமும் இல்லாமல் நகர்கிறது படம்.

'எங்கேயும் எப்போதும்' படத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷர்வா தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். அம்மா இல்லாத ஏக்கத்திலிருந்து கடந்த காலத்தில் அம்மாவை சந்திக்கச் சென்று அவரைப் பார்த்ததும் அவருக்கு ஏற்படும் அந்த உணர்வு நம்மையும் தொற்றிக் கொள்ளும். எப்படியாவது அம்மாவை மரணத்திலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார். உணர்வுகளின் குவியலால் இருக்கும் படத்தில் அவரது நடிப்பு தூணாக இருந்து படத்தைத் தாங்குகிறது.

30 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் அமலா. 90களின் இளைஞர்களுக்கு அமலாவை அம்மா கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்பது தியேட்டர்களில் தெரிகிறது. ஆனாலும், அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையிலும் அவருடைய அந்த அன்புச் சிரிப்பு மட்டும் மாறவேயில்லை.

ஷர்வாவின் ஜோடியாக சில காட்சிகளில் வந்தாலும் முக்கியத்துவமான காட்சிகளில் இருக்கிறார் நாயகி ரிது வர்மா. சதீஷ், ரமேஷ் திலக் இருவரும் நகைச்சுவைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை வைத்து இன்னும் காமெடியை சேர்த்திருக்கலாம். ஆனால், இயக்குனர் சென்டிமென்ட் போதும் என நினைத்திருக்கிறார். விஞ்ஞானியாக நாசர், அமலாவின் கணவராக ரவி ராகவேந்தர். சிறு வயது ஷர்வா, சதீஷ், ரமேஷ் கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாஸ்டர் ஜெய், ஹிதேஷ், நித்யா ஆகியோரும் பொருத்தமான தேர்வு.


ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையில் அம்மா பாச உணர்களை தன் இசையால் மேலும் கடத்துகிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு இயக்குனருக்கு பலமாகக் கை கொடுத்திருக்கிறது.

இடைவேளை வரை சில காட்சிகளின் நீளம் அதிகம். இடைவேளைக்குப் பின்பு படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஒரு மாறுபட்ட படத்தைப் பார்க்கும் திருப்தி ரசிகர்களுக்குக் கிடைக்கும்.

கணம் - கனமான 'கணம்'

 

கணம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கணம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓