ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்,Spiderman No Way Home

ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம் - பட காட்சிகள் ↓

Advertisement
4

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கொலம்பியா பிக்சர்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸ், பாஸ்கர் பிக்சர்ஸ்
இயக்கம் - ஜோன் வாட்ஸ்
நடிப்பு - டாம் ஹாலந்த், ஜென்டயா, பெனெடிக்ட் கம்பர்பாட்ச்
வெளியான தேதி - 16 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 4/5

'ஸ்பைடர்மேன், ஹோம் கம்மிங், ஸ்பைடர்மேன், பார் பிரம் ஹோம்' படங்களின் தொடர்ச்சியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 27வது படம் இது.

தான்தான் ஸ்பைடர்மேன் என்ற உண்மை இந்த உலகத்திற்குத் தெரிந்துவிட்டதால் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் ஸ்பைடர்மேன். அதனால், டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்-ஐ சந்தித்து தன்னைப் பற்றிய நினைவுகளை இந்த உலக மக்களின் நினைவுகளிலிருந்து எடுக்கச் சொல்கிறார். அதற்கு டாக்டர் ஸ்ட்ரேஜ்-ம் சம்மதிக்கிறார். இந்த நிலையில் ஸ்பைடர்மேனை தாக்குவதற்காக டாக்டர் ஆக்டோபஸ் வருகிறார். அவரிடமிருந்து தப்பிக்கும் ஸ்பைடர் மேன், ஆக்டோபஸை டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் உதவியால் சிறைபிடிக்கிறார். அது போல சான்ட் மேன், எலக்ட்ரோ, க்ரீன் காப்ளின் ஆகியோரையும் சிறைபிடிக்கிறார்கள்.

ஸ்பைடர்மேன் கேட்டுக் கொண்டபடி உலக மக்களின் நினைவுகளிலிருந்து ஸ்பைடர்மேனைப் பற்றி அழிக்கும் போது சிறைபிடிக்கப்பட்டவர்களில் சிலர் இறக்க நேரிடும் என்கிறார் டாக்டர். ஆனால், அவர்கள் அப்படி இறக்கக் கூடாது என ஸ்பைடர்மேன் கேட்கிறார். அதற்கு டாக்டர் உடன்படவில்லை. எனவே, மந்திரம் செய்யும் பெட்டியை தூக்கிக் கொண்டு சென்றுவிடுகிறார் ஸ்பைடர்மேன். ஆக்டோபஸ், சான்ட் மேன், எலக்ட்ரோ, க்ரீன் காப்ளின் ஆகியோரை தனது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை பழைய நிலைக்கு மாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அது தோல்வியில் முடிகிறது. அவர்கள் நால்வருமே ஸ்பைடர்மேனுடன் சண்டை போட ஆரம்பிக்கிறார்கள். அந்த சண்டையில் தனது அத்தையை பறி கொடுக்கிறார் ஸ்பைடர்மேன். பின்னர், இந்த ஸ்பைடர்மேனுக்கு உதவியா முந்தைய பாக ஸ்பைடர்மேன்களும் வருகிறார்கள். மூன்று ஸ்பைடர்மேன்களும் பிரச்சினையை எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

3 டி படம் என்பதால் ரசிகர்கள் ரசிப்பதற்காக பல பிரம்மாண்ட கிராபிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் படம் முழுவதும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் இடையில் நடக்கும் சண்டையை 3 டியில் பார்ப்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல கிளைமாக்சுக்கு முன்பாக 3 ஸ்பைடர்மேன்களும் ஒருவர் மாற்றி மற்றொருவர் ஸ்டன்ட் செய்து ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளிக் கொள்கிறார்கள்.

ஒரு ஸ்பைடர்மேன் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கம். அதிலும் எதிர்பாராமல் திடீரென மேலும் இரண்டு ஸ்பைடர்மேன்கள் வர ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டர்களில் அதிகம் கேட்கிறது. படத்தில் வில்லன்கள் என்ட்ரி ஆனால் கூட ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். தமிழ்ப் பட ஹீரோக்களுக்குக் கூட இப்படி ஒரு கரகோஷத்தை தியேட்டர்களில் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

இயக்குனர் ஜோன் வாட்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரப்பும், விறுவிறுப்பும், அசத்துலமாக படம் நகர்கிறது.

ஸ்பைடர் மேன் ஆக டாம் ஹாலந்து. வழக்கம் போல காட்சிக்குக் காட்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறார். பாசமாக வளர்த்த அத்தையைப் பறி கொடுக்கும் காட்சியில் ரசிகர்களின் கண்களை சென்டிமென்ட்டில் கலங்க வைக்கிறார்.

முந்தைய ஸ்பைடர்மேன்களான ஆன்ட்ரூ கர்பீல்ட், டோபி மகூரி இருவரும் எதிர்பாராத என்ட்ரி கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். மூன்று பேரும் சேர்ந்து நியூயார்க் சுதந்திர தேவி சிலையில் போடும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கிறது. முந்தைய ஸ்பைடர்மேன்களையும் நமது ரசிகர்கள் மறக்காமல் அவர்களுக்கும் சேர்த்து கைத்தட்டுகிறார்கள்.

அவஞ்சர்ஸ் நாயகர்களில் ஒருவரான டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் அவரது மந்திர வித்தைகளுக்கு ரசிகர்கள் கட்டுண்டு போகிறார்கள்.

ஸ்பைடர்மேன் காதலியான எம்ஜே மற்றும் நண்பர் நெட் லீட்ஸ் இருவரும் வழக்கம் போல உதவி செய்து மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

தமிழ் டப்பிங்காகப் பார்ப்பதில் பெரிய வித்தியாசம் இல்லை. நேரடி தமிழ்ப் படம் பார்ப்பது போன்ற உணர்வை வசனங்கள் ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இந்த 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' உள்ளது.
'ஸ்பைடர்மேன்' - 'ஹோம்'-ல் உள்ளவர்களோடு பார்க்கலாம்

 

ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓