பாவக் கதைகள்,paava kadhaigal

பாவக் கதைகள் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஆர்எஸ்விபி மூவீஸ், பிளையிங் யுனிகார்ன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சுதா கோங்கரா, கௌதம் மேனன், வெற்றிமாறன், விக்னேஷ் சிவன்
வெளியான தேதி - 18 டிசம்பர் 2020 (ஓடிடி தளம்)
ரேட்டிங் - 2.5/5

சினிமாவில் சென்சார் இருப்பதால் ஒரு வரையறைக்குள்தான் படங்களை எடுக்க முடியும். கதைகள், காட்சிகள், வசனங்கள் என எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால், ஓடிடி தளங்களில் எந்தவிதமான சென்சாரும் இல்லாத காரணத்தால் தாங்கள் நினைப்பதை படங்களாக எடுக்க சிலர் முயற்சிப்பது ஆபத்தில் முடியவும் வாய்ப்பிருக்கிறது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எல்லைகளை மீறும் போது அது திருப்பி அடிக்கும் பந்தாகவும் மாற வாய்ப்புள்ளது. அதை நமது இயக்குனர்கள் புரிந்து கொண்டால் நல்லது. இந்த பாவக் கதைகள், ஆணவக் கொலைகளைப் பற்றிய நான்கு கதைகளைக் கொண்ட ஒரு ஓடிடி திரைப்படம்.

பெற்ற மகள்களையே, (அதில் ஒருவர் திருநங்கை) தங்கள் கவுரவத்திற்காக கொலை செய்யும் நான்கு பெற்றோர்களைப் பற்றிய கதை. பெற்று வளர்த்து ஆளாக்கிய மகள்களை அவர்கள் கொடூரமாகக் கொலை செய்வதைப் பார்க்கும் மன தைரியம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இதைப் பார்க்கலாம்.

பார்த்து முடித்த பின் கொஞ்ச நேரம் மனவலியுடன் தான் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு காலத்தில் மதுரையை மையமாக வைத்த படங்கள் என்றாலே அதில் ரவுடியிசம் தான் மையக் கருவாக இருக்கும். அதனால் மதுரை என்றாலே இப்படித்தானோ என்ற ஒரு தவறான பார்வை பரவியது. அது போல ஓடிடியில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என இப்படி வந்தால் அது ஒட்டு மொத்த தமிழ்நாடு மீதான பார்வையை தவறாகப் புரிந்து கொள்ள வைக்கவும் வாய்ப்புள்ளது.

நான்கு கதைகளிலுமே ஒரு பிற்போக்கான பார்வை தான் அதிகம் இருக்கிறது. சாதி வெறி பிடித்த பெற்றோர்களை எதிர்த்து அவர்கள் வாழ்ந்து சாதிக்கிறார்கள் என பாசிட்டிவ்வாக வாழ வைத்து காட்டியிருக்கலாமே ?.

தங்கம்

இயக்கம் - சுதா கோங்கரா
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - சாந்தனு, காளிதாஸ், பவானிஸ்ரீ
நேரம் - 33 நிமிடங்கள்
ரேட்டிங் - 3/5

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1981ம் ஆண்டில் நடக்கும் கதை. மளிகைக் கடை வைத்திருப்பவரின் மகனான சாந்தனு, அவனது பால்ய கால நண்பனான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த காளிதாஸ் சகோதரி பவானிஸ்ரீயைக் காதலிக்கிறார். காளிதாஸ் ஒரு திருநங்கை, மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக பணத்தைச் சேர்க்கிறார். ஆனால், அவரை பெற்றோரும், ஊர் மக்களும் வெறுக்கிறார்கள். தனது நண்பன் சாந்தனு மீதே காதலில் இருக்கும் காளிதாஸ், நண்பன் தங்கையைக் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் சிறு வருத்தத்திற்குப் பின் அவர்கள் ஊரை விட்டு ஓட உதவி செய்கிறான். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் தங்கம் கதை.

சாந்தனு, காளிதாஸ், பவானிஸ்ரீ ஆகிய மூவரில் காளிதாஸ் சர்வ சாதாரணமாக நடிப்பில் ஸ்கோர் செய்துவிடுகிறார். ஆணாக இருந்து கொண்டே பெண்களைப் போல நடந்து கொள்வது, பேசுவது, உடல்மொழி என அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். சாந்தனு, பவானிஸ்ரீ இருவரும் கூட இயல்பாய் நடித்திருக்கிறார்கள். கதைக்களம், பின்னணி, மற்ற கதாபாத்திரங்கள் என பலவும் இயல்பாய் இருந்தாலும் கிளைமாக்சில் காளிதாஸுக்கு நடக்கும் கொடுமை அச்சு அசல் சினிமாத்தனமாக அமைந்து 25 நிமிடங்கள் உணர்வு பூர்வமாய் ரசிக்க வைத்ததை இரண்டே நிமிடத்தில் மாற்றிவிட்டது. நடிகர்களை இயல்பாக நடிக்க வைத்த விதத்தில் மட்டும் பாராட்டுக்களைப் பெறுகிறார் இயக்குனர் சுதா கோங்கரா,

லவ் பண்ணா உட்ரணும்

இயக்கம் - விக்னேஷ் சிவன்
இசை - அனிருத்
நடிப்பு - அஞ்சலி, கல்கி கோச்சலின், பதம்குமார்
நேரம் - 37 நிமிடங்கள்
ரேட்டிங் - 2/5

கிராமத்தில் பெயருக்கு கலப்புத் திருமணம் செய்து வைத்தாலும் உள்ளுக்குள் சாதி வெறி பிடித்த சாதிக் கட்சித் தலைவராக இருக்கிறார் பதம்குமார். அவருக்கு இரட்டை மகள்களாக இரண்டு அஞ்சலி. ஒருவர் அப்பா உடனே இருக்கிறார். மற்றொருவர் அப்பாவின் செயல்கள் பிடிக்காமல் வெளியூரில் தோழி கல்கி கோச்சலின் உடன் தங்கியிருக்கிறார். இரண்டு அஞ்சலிகளும் ஒரு வருடமாக பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் அப்பாவுடன் இருக்கும் அஞ்சலி, அவர்கள் வீட்டு கார் டிரைவரைக் காதலிப்பதாக அப்பாவிடம் சொல்கிறார். அவர்களது காதலை ஏற்பதாகச் சொல்லும் சாதி வெறி பிடித்த அப்பா பதம்குமார் அடுத்த என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

ஓடிடி படங்களுக்கு சென்சார் ஏன் அவசியம் தேவை என்பதற்கு இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு நன்றாகவே புரியும். அஞ்சலி, கல்கி கோச்சலின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொள்ளும் நீண்ட காட்சி, கல்கியும் பதம்குமாரின் வலது கரமாக இருக்கும் ஒருவரும் பேசிக் கொள்ளும் மிக மிக மோசமான கெட்ட வார்த்தைகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டவையாக இருக்கின்றன. அந்தக் கெட்ட வார்த்தைகளில் ஒன்றை வைத்துத்தான் இந்தக் கதையையும் முடித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அஞ்சலி சினிமாவில் கூட இவ்வளவு தா......ராளமாக நடித்ததில்லை. இந்த சிறு படத்தில் நடித்ததன் காரணம் என்னவோ ?.

வான்மகள்

இயக்கம் - கவுதம் மேனன்
இசை - கார்த்திக்
நடிப்பு - கவுதம் மேனன், சிம்ரன், ஆதித்யா பாஸ்கர்
நேரம் - 38 நிமிடங்கள்
ரேட்டிங் - 2.5/5

கவுதம் மேனன், சிம்ரன் கணவன் மனைவி. இவர்களுக்கு மூத்த மகன் ஆதித்யா மற்றும் இரண்டு மகள்கள். பன்னிரண்டே வயது ஆன கடைசி மகள் ஒரு நாள் காணாமல் போகிறாள். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரே திரும்பி வருகிறார். அவரை சில காம வெறியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார்கள். அதைப் பற்றி வெளியில் சொன்னால் அவமானம் என அம்மா சிம்ரன் நினைக்கிறார். அதனால் கணவர் கவுதமை போலீசிலும் புகார் கொடுக்க விடாமல் தடுக்கிறார். அடுத்த சில நாட்கள் குடும்பத்தில் கடுமையான சூழல் நிலவுகிறது. தன் தங்கையை யார் அப்படி செய்தது என கண்டுபிடிக்கிறார் அண்ணன் ஆதித்யா. தங்கையைக் சீரழித்தவனுக்குக் கடுமையான தண்டனையை அவரும் தரும் நேரத்தில் மானத்திற்குப் பயந்து அம்மா சிம்ரன் வேறு ஒரு முடிவு எடுக்கிறார், அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தை கவுதம், சிம்ரன், ஆதித்யா அப்படியே கண்முன் காட்டியிருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கு சற்றும் சளைக்காமல் அந்த கடைசிப் பெண் தனக்கு நடந்த துயரத்தை, அந்த சோகத்தை தன் நடிப்பில் காட்டுவது நம்மை கலங்க வைக்கிறது. ஆதித்யா கொடுக்கும் தண்டனைக்கு நாம் பாராட்டு தெரிவிக்கும் அதே சமயம் கல்நெஞ்சக் காரர்களும் செய்யத் துடிக்கும் ஒரு செயலை சிம்ரன் செய்வதைக் கண்டு அதிர்ச்சிதான் வருகிறது. எப்படி இப்படியெல்லாம் ஒரு கிளைமாக்சை உங்களால் படமாக்க முடிகிறது கவுதம் மேனன் ?.

ஓர் இரவு

இயக்கம் - வெற்றி மாறன்
இசை - சிவாத்மிகா
நடிப்பு - பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி, ஹரிகிருஷ்ணன்
நேரம் - 37 நிமிடங்கள்
ரேட்டிங் - 2.5/5

கிராமத்தில் ஒரு பெரிய குடும்பம் பிரகாஷ்ராஜுடையது. அவருடைய மகள் சாய் பல்லவி வேறு ஒரு சாதி இளைஞரைத் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடிவிடுகிறார். பெங்களூருவில் வசிக்கும் மகள் கர்ப்பமாக இருக்கிறார் எனத் தெரிந்ததும் மனம் மாறி மகளை வீட்டுக்கு அழைத்து வந்து வளைகாப்பு செய்ய ஏற்பாடு செய்கிறார். இரண்டு வருடங்களாக தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த சாய் பல்லவி அப்பா, அம்மா, அக்கா, தம்பி, தங்கைகள் என அனைவரிடமும் இழந்த பாசத்தை மீட்டெடுத்து மகிழ்கிறார். ஆனால், அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாமல் கடும் அதிர்ச்சி ஒன்றைத் தருகிறார் சாதி வெறி பிடித்த பிரகாஷ்ராஜ்.

37 நிமிடக் கதையில் முதல் 22 நிமிடங்கள் படத்தில் அப்படி ஒரு யதார்த்தம். சாய் பல்லவி, பிரகாஷ்ராஜ் இருவருமே அப்பா, மகளாக அவரவர் கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். சாய் பல்லவி - பிரகாஷ்ராஜ் இருவரின் மகள், அப்பா பாசம், சாய் பல்லவி - ஹரி இருவரிடையேயான அந்த சில நிமிடங்களில் வெளிப்படும் கணவன், மனைவி பாசம், அடுத்து சாய் பல்லவி - அவரது குடும்பத்தினரின் பாசம் என நம்மை நெகிழ வைக்கிறார் இயக்குனர் வெற்றி மாறன். ஆனால், அடுத்த பதினைந்து நிமிடங்களில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்க பிரகாஷ்ராஜுக்கு இருக்கும் கல் நெஞ்சத்தை விட நமக்கு கல்நெஞ்சமாக இருக்க வேண்டும். ஓருயிர் அல்ல ஈருயிரைத் துடிக்கத் துடிக்கத் துடிக்கக் காட்டுவதெல்லாம் ரொம்பவே ஓவர். காட்சிகளில்தான் காட்டுகிறோம் என்றாலும் ஒரு கனிவு வேண்டாமா ?.

நான்கு கதைகளிலும் இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய பங்கை முழு ஈடுபாட்டுடன் செய்துள்ளார்கள். உணர்வு பூர்வமான இந்தக் கதைகளுக்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக வெற்றிமாறன் இயக்கிய ஓர் இரவு கதையின் கடைசி நிமிடங்களில் தனது ஒளியமைப்பையும் ஒரு பாத்திரமாகவே மாற்றிவிட்டார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா.

நாளிதழ்களில் எப்போதோ ஒரு முறை செய்தியாகக் கடந்து போன விஷயங்களைப் படிக்கவே ஒரு தைரியம் வேண்டும். இப்படியெல்லாம் கூட செய்வார்களா, இருப்பார்களா என நாம் அந்த செய்திகளைப் படித்துப் பார்த்து யோசிப்போம். அவற்றை இப்படி காட்சிப்படுத்திக் காட்டுவது கலங்க வைக்கிறது.

முதல் இரண்டு கதைகளான தங்கம், லவ் பண்ணா உட்ரணும் ஆகியவற்றில் காட்டப்படும் கொலைகள் காட்சிப்படுத்தப்படாமல் சொல்லப்படுகின்றன. மாறாக வான்மகள், ஓர் இரவு ஆகியவற்றில் முதல் இரண்டில் காட்டாத கொலைக் காட்சிகளுக்கும் சேர்த்து காட்டிவிட்டார்கள்.

ஓடிடி தளங்களில் இப்படியான படங்கள் உலகம் முழுவதும் பார்க்கும் வசதியும் வாய்க்கும் போது நம் மீதான பார்வை இந்த உலகிற்கு வேறு விதமாகவும் எடுத்துச் சொல்லப்பட வாய்ப்புகள் உண்டு.

திரையில் பார்ப்பதை எல்லாம் நிஜமென்று நம்பும் மக்கள் இருக்கும் வரை ஒரு எச்சரிக்கையுடனே கதைகளைச் சொல்வது நன்று.

பாவ கதைகள் - பரிதாபம்

 

பட குழுவினர்

பாவக் கதைகள்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓