கேணி,Keni

கேணி - பட காட்சிகள் ↓

கேணி - சினி விழா ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜெயப்பிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனுஹாசன், பார்வதி நம்பியார்
இயக்கம் - எம்.ஏ. நிஷாத்
இசை - ஜெயச்சந்திரன், பின்னணி இசை - சாம் சி.எஸ்.
தயாரிப்பு - பிராகிரன்ட் நேச்சர் பிலிம் கிரியேஷன்ஸ்

தண்ணீர் பிரச்சினையை மையமா வைத்து சில படங்கள் வந்துள்ளன. ஏரி, ஆறு, அணை ஆகியவற்றால்தான் தண்ணீர் பிரச்சினை அதிகமாக வரும். ஆனால், இந்த கேணி படத்தில் கிணற்றையும், இரு மாநில எல்லையையும் மையமாக வைத்து உணர்வுபூர்வமான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம். படத்தின் ஆரம்பக் காட்சிகள் கேரளாவில் நடப்பதால் பெரும்பாலான வசனங்கள் மலையாளத்தில் உள்ளன. அதை ரசிகர்களுக்கு வசதியாக தமிழிலேயே படமாக்கியிருக்கலாம். அதுவே முதலில் ஒரு மலையாளப் படத்தைப் பார்க்கிறோமா என்ற உணர்வைத் தருகிறது.

அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்டு பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார் ஜெயப்பிரதாவின் கணவர். அவர் அங்கேய மரணமும் அடைகிறார். அதன்பின் ஜெயப்பிரதா கணவரது ஆசைப்படி அவர்களது ஊருக்கு வருகிறார். தமிழ்நாடு, கேரள மாநில எல்லையில் இருக்கும் அவர்களது வீட்டிற்குச் சொந்தமான கிணறு, மாநிலப் பிரிவினையின் போது கேரளாவிற்குச் சென்று விடுகிறது. அந்தக் கிணற்றுத் தண்ணீரை தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் ஜெய்பிரதாவும், அவரது ஊர் மக்களுக்கும் பயன்படுத்த தடை உள்ளது. அதை எதிர்த்து ஊர் மக்களின் ஆதரவுடன் போராடுகிறார் ஜெயப்பிரதா. அதில் அவர் வெற்றி பெற்றாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்த மாதிரியான கதையில் கொஞ்சம் வயது முதிர்ந்த ஜெயப்பிரதாவை கதையின் நாயகியாக இயக்குனர் நடிக்க வைத்ததன் காரணம் ஏன் எனத் தெரியவில்லை. முன்னணி நாயகிகள் நடித்திருந்தால் இந்தப் படம் அறம் படம் போலப் பேசப்பட்டிருக்கலாம். ஜெயப்பிரதாவின் வெள்ளை வெளேர் தோற்றமும், அந்தத் தோற்றத்திற்குப் பொருந்தாத காட்டன் புடவையும் அவரது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகவே அமையவில்லை. ஆனாலும், நடிப்பைப் பொறுத்தவரையில் ஜெயப்பிரதாவிடம் அவரது அனுபவம் வெளிப்படுகிறது.

அனுஹாசன் ஊர் பெண்களில் ஒருவராக சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இவரையும் முடிந்த அளவிற்கு கிராமத்துப் பெண்ணாக மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். நடிப்பில் மிக இயல்பாக நடித்திருக்கிறார் அனுஹாசன்.

அரசு அதிகாரியாக ரேவதி, சில காட்சிகள் மட்டுமே வருகிறார். ஊர் தலைவராக பார்த்திபன். அவருக்கே உரிய நக்கலான வசனங்கள் இந்தப் படத்திலும் உண்டு. வக்கீலாக நாசர், எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பாக வந்து போகிறார். ஊரில் இருக்கும் நாயர் டீக்கடை அங்கு இருக்கும் முதலாளி, டீ மாஸ்டர், நண்பர் ஆகியோர் படத்தின் கலகலப்புக்கு கொஞ்சம் உதவுகிறார்கள். மந்திரியாக தலைவாசல் விஜய். அதிகாரத் தோரணையை அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.

படத்தில் இளமையான நட்சத்திரங்கள் அதிகம் இல்லை என்பது பெரும் குறை. எல்லாருமே சீனியர் நடிகர்கள் தான். ஜெயப்பிரதா ஆதரவளித்து அழைத்து வரும் அந்த முஸ்லிம் பெண்ணாக பார்வதி நம்பியார். இவர் மட்டுமே படத்தில் இளம் நடிகை. அழகாக இருக்கிறார், இவருக்கு இன்னும் சில காட்சிகளையாவது வைத்திருக்கலாம்.

ஜெயச்சந்திரன் இசையில் படத்தின் டைட்டில் பாடலாக ஒலிக்கும், மலையாளமும், தமிழும் கலந்த பாடலை யேசுதாஸ், எஸ்பிபி இணைந்து பாடியிருக்கிறார்கள். சாம் சி.எஸ். பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

படத்தின் முக்கியப் பிரச்சினையான கிணற்றுப் பிரச்சனை படம் ஆரம்பித்த அரை மணி நேரம் கழித்தே வருகிறது. அதற்கு முன்னதாக ஜெயப்பிரதா கணவர், பார்வதி நம்பியார் கணவர் ஆகியோரது பிரச்சினைகள், அவர்களது கைது ஆகியவை என கேணிக்கு சம்பந்தமில்லாத வேறு பிரச்சனைகள் படத்தை ஆக்கிரமிக்கிறது.

கிணற்றின் மூலம் ஊர் மக்களுக்கு தண்ணீர் தர ஜெயப்பிரதா போராட்டம் நடத்துவதுதான் கதை. ஆனால், ஒரே ஒரு முறை மட்டும் மந்திரியை ஊர் பெண்களுடன் சேர்ந்து மறித்து வீர வசனம் பேசுகிறார். அது போன்று வேறு எந்த காட்சிகளும் படத்தில் இல்லை. பல கதாபாத்திரங்கள் மீதும் கதை நகர்வது மையப் பிரச்சனையை விட்டு விலகுவதாக உள்ளது.

இடைவேளைக்குப் பின் படம் நீ.....ண்டு கொண்டே போகிறது. இருந்தாலும் தண்ணீர் பிரச்சினையை மையப்படுத்திய படத்தில் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொன்னதற்குப் பாராட்டுக்கள். குறிப்பாக டீக்கடையில் நாயரை அடிக்க வரும் தமிழ் மக்களிடம் பார்த்திபன் பேசுவது, தண்ணீர் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது போன்றவரை படத்தில் குறிப்பிட வேண்டியவை.

கேணி - முக்கால் கிணறு

 

பட குழுவினர்

கேணி

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓