விமர்சனம்
வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக தாதாவின் வலக்கையாக ஹரீஷ்., தன் உருவத்திற்கு தாண்டிய வேலைகளில் ஈடுபட்டு நாயகியை மட்டுமின்றி ரசிகர்களையும் ஈர்க்க முயற்சித்திருக்கிறார். ஏதோ, பாகுபலி பிரபாஸின் தம்பி உறவுக்காரராம் மனிதர்.. அவர் செய்யும் சாகசங்களை அதனால் பார்க்கலாம். ஆனாலும், அந்த போலீஸுக்கு பழிப்பு காட்டி ஆம்புலன்ஸில் பணம் கடத்துவது, மட்டுமின்றி, அந்த அதிகாரி முன்பே ஆப்ரேஷன் சக்ஸஸ் என்பது... போலீஸ் முன் மீன் சாப்பிட்டபடி, மீன் சூப்பர்... என்று போலீஸை வெறுப்பேற்றுவது உள்ளிட்ட கோமாளி தனங்கள் கொஞ்சமே கொஞ்சம் ரசிகனின் பொறுமையை சோதிக்கின்றன.
கல்லூரி மாணவியாக கதாநாயகரின் காதலியாக யாமினி பாஸ்கர் ஒரு சில பிரேம்களில் அழகாகவும், ஒரு சில பிரேம்களில் அய்யோ பாவமென்றும் இருக்கிறார்.
தாதாவாக வரும் முரட்டுத்தனமுக அர்ஜூனாவை ஏற்கனவே ஒரு சில படங்களில் பார்த்திருந்தாலும், இந்தப் படத்தில் மனிதர் கூடுதல் மிரட்டல். அதுவும் அந்த கோயில் கொலை வெறி பைட் மிரட்டலோ, மிரட்டல்!
மாஜிநாயகி சித்தாரா நீண்ட இடைவெளிக்குப் பின் பாசக்காரத் தாயாக வாழ்ந்திருக்கிறார். தாதாவின் மனைவியாக, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக சுஜாவாரூனி வசீகரிக்கிறார். மலையாளவாடை வீசப் பேசும் அந்த மிடுக்கு போலீஸ் அதிகாரி, தாதாவின் சாதிவெறி மைத்துனர் உள்ளிட்டோரும், அவர்களது நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
சுதாவின் படத்தொகுப்பு ப்ச். அதற்கு நேர்மாறாக, வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளும், படக்காட்சி களும் பளிச்!
பிரபுசங்கர் இசையில், முட்டைக் கறி முட்டைக் கறி, என்னதிது... என்னதிது...., தெய்வம் தந்த செந்தம் ஒன்று, இன்று..., அக்கம் பக்கம்... உள்ளிட்ட பாடல்கள் பலே சொல்லி தாளம் போடும் ரகம். அதிலும் அந்த சிஜி ஒர்க் காட்சிகள் நிரம்பிய அக்கம் பக்கம்... பாடல் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுசு என்பதற்காகவே முன்னோடி படத்தை ஒருவாட்டி பார்க்கலாம்!
எஸ்.பி.டி.ஏ.குமார் எழுத்து, இயக்கத்தில் ஆரம்ப காட்சிகள் ஆமை வேகத்தில் நகர்ந்தாலும், தாய், தம்பி, சென்டிமென்ட்... கலந்து ஒரு முழுநீள ஆக்ஷன் படம் தந்திருப்பதற்காக முன்னோடி-யை முன்னாடி வந்த படங்களோடு ஒப்பிட்டு பார்க்காமல் பார்ப்பதென்றால் பார்க்கலாம்!
மேலும், முன்னோடி - பல படங்களில் பார்த்த நெடி - என்பது மட்டுமே குறை என்றாலும், இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பைக்ல கூட 6 இன்ச் பின்னாடி சீட் தூக்கி இருந்தா தான் கூட வாராங்க..., அருணால்டு பாடி எல்லாம் வேஸ்ட் இப்போ பொண்ணுங்களுக்கு அனிருத் தான் டேஸ்ட்..., ஒரு சம்பவம் பண்ணினோம்னா, ஒரு வெட்டு கூடுனா இன்னொரு வெட்டு 17, 18 வெட்டுன்னு... என்ன பெருமை வேண்டி கிடக்கு.?, உள்ளிட்ட பளிச், பளிச் ... வசனங்களுக்காகவும், இப்பட பாடல் காடசிகள், படமாக்கப்பட்டிருக்கும் விதம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுசு என்பதற்காகவும் முன்னோடி படத்தை பார்க்கலாம் ஒருவாட்டி!















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!