2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சாந்தன்குமார், ஐஸ்வர்யா அர்ஜுன், கே.விஸ்வநாத், சுஹாசினி
இயக்கம் - அர்ஜுன்
இசை - ஜாசி கிப்ட், சாது கோகிலா
தயாரிப்பு - ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்

தேசப்பற்றுடன் கூடிய படங்களைத் தொடர்ந்து இயக்குபவர் அர்ஜுன். வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் வைக்காமல் அவருடய படங்களில் தாய்நாடு, நாட்டுப்பற்று, சமூக அக்கறை என கருத்தையும் சொல்லுவார். ஆக்ஷன் படங்களை மட்டுமே இயக்கிய அர்ஜுன் 'சொல்லிவிடவா' படத்தில் காதலையும், தேசப்பற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார்.

1999ல் கார்கில் யுத்த சமயத்தில் நடக்கும் கதை. ஏ - 3 டிவியில் வேலை பார்ப்பவர் ஐஸ்வர்யா அர்ஜுன். டிவி 6 டிவியில் வேலை பார்ப்பவர் சாந்தன் குமார். பெற்றோர் இல்லாமல், தாத்தா அரவணைப்பில் வளரும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும், அவருடைய குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்கும் சுஹாசினி மகனுக்கும் திருமண நிச்சயம் நடக்கிறது. கார்கில் போர் பற்றிய நிகழ்வுகளை நேரடியாகப் பதிவு செய்ய ஐஸ்வர்யா அர்ஜுன், சாந்தன் குமார் அவரவர் டிவி சார்பாக செல்கிறார்கள். சென்ற இடத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அதை சொல்லாமல் இருக்கிறார்கள். கார்கில் போர் முடிந்ததால் சென்னை திரும்பும் ஐஸ்வர்யாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அந்த சூழ்நிலையிலாவது காதலர்கள் அவர்களது காதலை வெளியில் சொன்னார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

அறிமுக நாயகனாக சாந்தன் குமார். நல்ல உயரம், அழகான தோற்றம், இயல்பான நடிப்பு என முதல் படத்திலேயே கவனிக்க வைக்கிறார். தொடர்ந்து முயற்சித்தால் இளம் நடிகர்களுக்குப் போட்டியாகவும் வரலாம்.

மகள் ஐஸ்வர்யாவிற்காகவே அர்ஜுன் இயக்கியிருக்கும் படம் போலத் தெரிகிறது. சமீப காலத்தில் ஒரு நாயகிக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படம் வந்தது இல்லை. ஐஸ்வர்யாவும் அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சில காட்சிகளில் ஓவராகவும் நடித்திருக்கிறார். வாரிசு நடிகர்களில் சினிமாவில் வளர்ந்துள்ள அளவிற்கு வாரிசு நடிகைகள் ஏன் முன்னணிக்கு வராமல் இருக்கிறார்கள் ?.

படத்தில் ஆரம்பக் காட்சிகளில் மட்டும் யோகி பாபு, சதீஷ் ஆகியோரின் 'மொக்கை' நகைச்சுவை கொஞ்சமே கொஞ்சம் வருகிறது. நல்லவேளையாக அதிலிருந்து சீக்கிரமே தப்பித்துவிடுகிறோம். அதன் பின் அவர்களும் படத்தில் இல்லை.

மற்ற கதாபாத்திரங்களில் இயக்குனர் கே. விஸ்வநாத், ஐஸ்வர்யாவின் தாத்தாவாக கண்கலங்க வைக்கிறார். சுஹாசினிக்கு கிளைமாக்சில் மட்டுமே அழுத்தமான நடிப்பு. ஒரு பாடலுக்கு வந்து ஆடும் அர்ஜுன், மீண்டும் கிளைமாக்சிலும் வந்து தலை காட்டுகிறார். நாயகனுக்கு அப்பாவாக மொட்டை ராஜேந்திரன் என்பதெல்லாம் ஓவர்.

சென்னையை விட்டு கார்கில் பகுதிக்கு சாந்தன்குமார், ஐஸ்வர்யா சென்ற பின் படம் அப்படியே தேங்கி விடுகின்றன. கார்கில் என்று காட்டிவிட்டு சென்னையில் உள்ள கல் குவாரியில் பல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். படத்திற்கு 'டி.ஐ.' கூடப் பண்ணவில்லை போலிருக்கிறது, டல்லடிக்கிறது.

ஜாசி கிப்ட் இசையில், 'உயிரே...உயிரே..' பாடல் மட்டுமே உருக வைக்கிறது.

இரு கதாபாத்திரங்களை மட்டும் சுற்றியே மொத்த கதையும் நகர்கிறது. அவர்கள் காதலை சொல்வார்களா, சொல்ல மாட்டார்களா என்பதெல்லாம் முரளி காலத்திலேயே பல படங்களில் பார்த்த அரதப் பழசான மேட்டர். தேசப்பற்று காட்சிகளில் மட்டும் இயக்குனர் அர்ஜுன் தெரிகிறார். காதலும், காதல் படங்களும் 'ரூட்' மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது அர்ஜுன் சாரே...

சொல்லிவிடவா - கார்கில் யுத்தப் பின்னணியில் ஒரு காதல் யுத்தம்!

 

பட குழுவினர்

சொல்லிவிடவா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓