டோலிவுட் இயக்குநர் தேஜா புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கும் படம் ஹோரா ஹோரி. படத்தின் கதைப்படி பாஸ்வா (சஸ்வா) ஒரு ஊரில் இருக்கும் வில்லன், ஒரு நாள் நாயகி மைதிலியை(தக்ஷா) கண்டு காதலில் விழுகிறான். அதனால் அவளுக்கு நடக்கும் திருமண ஏற்பாடுகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடுகிறான். இவ்வாறு நடப்பதால் அந்த பெண்ணின் உடல் நலம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.இதை எல்லாம் சரி செய்ய அவளின் அண்ணன் தன் குடும்பத்துடன் வேறு ஒரு கிராமத்திற்கு குடி பெயர்கிறான், அங்கே சிறியதாக தொழில் செய்யும் ஸ்கந்தாவைப் (திலீப்) பார்த்து அவன் மீது காதல் கொள்கிறாள் மைதிலி. ஸ்கந்தாவும் மைதிலியை காதலிக்கின்றான்.
கதையில் திருப்பம் இப்போது வருகிறது.பாஸ்வாவும் அதே கிராமத்திற்கு வருகிறான்.இவர்களின் காதல் விவகாரம் தெரிகிறது. அப்புறம் காதல் ஜோடிக்கு என்ன ஆனது? காதலில் எப்படி ஜெயித்தார்கள் என்பது தான் ஹோரா ஹோரி படத்தின் கதை. தெலுங்கு திரை உலகின் முக்கியமான இயக்குநர் தேஜா இயக்கி இருக்கும் புதிய படம் தான் இது. படத்தின் நயாகியாக நடித்திருக்கும் தக்ஷா நடிப்பால் தன் கதாபாத்திரத்திற்கும் படத்திற்கும் உயிர் ஊட்டுகிறார். உணர்வுகளை மிக மிக அழகாக வெளிப்படுத்தி அறிமுக படத்திலேயே அசத்தியிருக்கிறார். வரும்காலத்தில் தக்ஷாவை அனேக படங்களில் பார்க்கலாம்.
திலீப்பும் நன்றாக நடித்திருக்கிறார், அவருக்கு பெரிதாக நடிப்பை வெளிப்படுத்த காட்சிகள் ஏதும் இல்லை.ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்,அனேக காட்சிகள் மிக அழகாக காட்டப்படிருக்கிறது குறிப்பாக மழைக்காட்சிகள். கல்யாணின் பின்னணி இசை படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதல் பாதியில் பரபரக்க வைக்க சில காட்சிகள் வருகிறன. அதோடு அழகாக நகைச்சுவை காட்சிகளும் இணைக்கப்பட்டிருக்கிறது. சஸ்வாவின் கதாபாத்திரமும் படத்தில் முக்கிய பங்க்கு வகிக்கிறது. மிக அழுத்தமாக ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தை பதிவுசெய்கிறார் தேஜா.
அதே தேஜா சிறிது இடைவெளிக்கு பிறகு அந்த வில்லன் கதாபாத்திரத்தை மெல்ல மெல்ல சிதறடிக்கிறார். படம் ஒரு ஏற்ற இறக்கத்துடனே செல்கிறது, சுவாரஸ்யமான காட்சிகள் வந்தாலும் அதை தொடர்ந்தார் போல் வழக்கமான பழக்கப்பட்ட காட்சிகள் வந்து எரிச்சல் அடைய செய்கிறது.படத்தில் ஏகப்பட்ட காட்சிகளில் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பிருந்தும் அதை சரியாக இறுதிவரை எடுத்து செல்ல திரைக்கதை தவறி விடுகிறது. படத்தின் வேகம் சற்று குறைவு தான். பழக்கப்பட்ட கிளைமேக்ஸ் படத்தை பாதிக்கவே செய்கிறது.மொத்தமாக அதே பழைய காதல், அதே வில்லன் யூகிக்க முடிந்த திருப்பங்கள் என சாதாரணமாக செல்கிறது படம்.
ஹோரா ஹோரி - பழக்கப்பட்ட காதல் கதை