இயக்குநர் சிகரம் பாலசந்தர்
பயோகிராபி

பயோடேட்டா
- இயற்பெயர்
- கே பாலசந்தர்
- சினிமா பெயர்
- கே பாலசந்தர்
- பிறப்பு
- 09-ஜுலை-1930
- இறப்பு
- 23-டிசம்பர்-2014

புதுமை விரும்பி

கே பாலசந்தர் அவர்களின் போட்டோ தொகுப்புகள்














1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார் கே.பாலசந்தர். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை நாடகங்களை நடத்தினார்.
அப்போதைய தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டாராக விளங்கிய தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்டார். 12 வயதிலேயே சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதன் மூலம் அவர் மனதில் சினிமா ஆசை வளரத் தொடங்கியது.பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். கல்லூரிகளில் விழா என்றால் அதில் பாலச்சந்தரின் நாடகம் கண்டிப்பாக இடம்பெறும். பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரிலேயே முடித்த பாலசந்தர், 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார்.
1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார்.
இவர் முதலில் எழுதிய நாடகம் 'சினிமா விசிறி'. பாலசந்தரின் மற்றொரு நாடகமான 'மெழுகுவர்த்தி' என்ற நாடகத்திற்கு தலைமை தாங்கிய எம்ஜிஆர், பாலசந்தர் போன்ற இளைஞர்கள் திரைப்பட உலகிற்கு தேவை, அவர் ஆசைப்பட்டால் நானே அழைத்து செல்வேன் என்று சொன்னது மட்டுமல்லாமல் தன்னுடைய படமான 'தெய்வத்தாய்' படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தார். முதலில் தயங்கிய இவர், பின் சம்மதித்தார். இதன்பின் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார்.
நடிகர் நாகேஷை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு எழுதிய நாடகம் 'நீர்க்குமிழி'. இந்த நாடகத்தை பார்த்த பிரபல இயக்குநர் வேலன், படமாக எடுக்க ஆசைப்பட்டு, பாலசந்தரை அணுகி, அவரையே திரைப்படத்தையும் இயக்குமாறு கேட்டுக்கொண்டார். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத நம்மால் முதன் முறையாக ஒரு திரைப்படத்தை இயக்க முடியுமா என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் சம்மதம் தெரிவித்து படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்ப உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்னைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின் பல படங்களை இயக்கினார். தொடர்ந்து 'நாணல்', 'பாமா விஜயம்', 'தாமரை', 'நெஞ்சம்' 'எதிர் நீச்சல்', 'பூவா தலையா', 'காவியத் தலைவி', 'எதிரொலி', 'பத்தாம் பசலி', 'நூற்றுக்கு நூறு', 'புன்னகை', 'வெள்ளி விழா', 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'அவள் ஒரு தொடர்கதை', 'நான் அவனில்லை', 'மூன்று முடிச்சு' என்று 'பார்த்தாலே பரவசம்' வரை 100 படங்களை இயக்கி இமாலய சாதனை புரிந்து, 'இயக்குநர் இமயம்' என்ற அடைமொழியோடு உயர்ந்து நிற்கின்றார்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 15 டிசம்பர் 2014 அன்று அனுமதிக்கப்பட்ட பாலசந்தர், சிகிச்சை பலனின்றி 23 டிசம்பர் 2014-ல் காலமானார்.