தி பட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில், ஜி.என்.கிருஷ்ணராஜன் தயாரிக்கும் படம் "கருத்த மச்சான்". இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார் கனிஷ்கர். கதாநாயகியாக புதுமுகம் ஷாசனா நடிக்கிறார். இவர்களுடன் சிவா, பவானி, இந்திரன், கோகுல் மற்றும் பலர் நடிக்கின்றனர். படம் குறித்து நம்மிடம் பேசிய கனிஷ்கர், ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் எழுதி பல வருஷமாச்சு. ஆனாலும் ஜாதிகள் ஒழிந்தபாடில்லை. அவ்வப்போது சில காதலர்கள் மட்டும் பாரதியாரின் கூற்றை மெய்ப்பித்து வருகிறார்கள். அதற்கு விலையாக சிலர் உயிரையும் கொடுத்து வருகிறார்கள். பாரதியாரின் கருத்தினை மையமாக வைத்து உருவாக்கி வரும் படம் இது. கதைப்படி ஓட்டப் பந்தய விளையாட்டு வீராங்கனையை ஒரு முரட்டு கிராமத்து இளைஞன் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான். அவன் எப்படி அவள் மனதில் இடம் பிடிக்கிறான் என்பதனை கிராமத்துப் பின்னணியில் புதிய கோணத்தில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறோம். கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. இப்படத்திற்கு சரண் பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை செல்லத்துரை எழுதியுள்ளார். குமரன் ஒளிப்பதிவு செய்ய, பவர் சிவா நடனக் காட்சிகளை அமைத்துள்ளார்.