இந்த ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரை அழகியாக டி.வி., நடிகை லீலாவதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிஸ் சின்னத்திரை என்ற பெயரில் ஆண்டுதோறும் டிவி நடிகைகளுக்கான அழகிப் போட்டி நடக்கிறது. விஷன் ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்டும், காஸ்மிக் டவுனும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. விவெல் ஆக்டிவ் பேர் சின்னத்திரை விருது 2011 என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான போட்டி சென்னையில் நடந்தது. இதில் சின்னத்திரை நடிகைகள் சபர்ணா, ஸ்ரீதுர்கா, சபானா, ஜூலி, ஸ்ரவாணி, தரிஷினி, ஸ்ரீலட்சுமி, சக்தி, கவிபிரசாந்தினி, லீலாவதி என 10 சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளினிகள் பங்கேற்றனர்.
ஆடல், பாடல், கேட் வாக்கிங், அறிவுத்திறன் போட்டி என பல சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் முதலிடம் பிடித்து மிஸ் சின்னத்திரை 2011 ஆக லீலாவதி தேர்வு பெற்றுள்ளார். அவருக்கு சென்ற ஆண்டின் சின்னத்திரை அழகி ஸ்வேதா கிரீடம் சூட்டினார். இரண்டாம் இடத்தை ஸ்ரவாணியும் மூன்றாம் இடத்தை சபர்ணாவும் பெற்றனர். விஜய் ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.