யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
தாமரை, பொன்னூஞ்சல், சந்திரலேகா, தேவதை, என் இனிய தோழி என பல மெகா சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அகிலா. நான் சின்னத்திரை நடிகை என்றாலும், வெள்ளித்திரை நடிகை விஜயசாந்தி தான் எனது ரோல்மாடல் என்கிறார் அவர். தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...
* எந்தமாதிரி கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
எனக்கு நெகட்டீவ் வேடங்களே அதிகமாக பிடிக்கும் என்றாலும், கிடைத்த பாசிட்டீவ் வேடங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறேன். தற்போது தேவதை சீரியலில் எனது கேரக்டர் பழிவாங்குவது போல் மாறியிருக்கிறது. கதைப்படி நான் நல்ல பெண்தான். சூழ்நிலை காரணமாக அப்படி மாறியிருக்கிறேன். கேரக்டரின் போக்கு மாறும்போது நடிப்பும் மாறுகிறது. இது ஆடியன்ஸ் மட்டுமின்றி நடிக்கும் எனக்கும் புதிய அனுபவமாக இருக்கிறது.
* எதற்காக வில்லி வேடம் பிடிக்கும் என்கிறீர்கள்?
வில்லி வேடம்தான் என் முகத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். சீரியலைப் பொறுத்தவரை எனது சொந்த விருப்பம் என்பதை விட மற்றவர்கள் என்னை எந்தமாதிரி பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதோடு, நான் மன்னன் படத்தில் நடித்த விஜயசாந்தி, படையப்பாவில நடித்த ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் ரசிகை. இதில் விஜயசாந்தி என்னை அதிகமாக இம்ப்ரஸ் செய்தவர். அவர் போலீஸ் வேடங்களில் நடித்த போட்டோக்களை சேகரித்து வைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு என்னை வெகுவாக பாதித்திருக்கிறார். அதனால் மன்னன் படத்தில் அவர் நடித்தது போன்று ஒரு வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாகியிருக்கிறது. மேலும், காரைக்காலில் உள்ள லோக்கல் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் மெய் மறந்தேன் என்ற சீரியலில் வில்லியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறேன்.
* உங்களது நடிப்பு பற்றி நட்பு வட்டாரம் கொடுக்கும் கமெண்ட்ஸ் என்ன?
என் வீட்டில் இருப்பவர்கள் தொடங்கி எனது தோழிகள் என நிறைய பேர் எனக்காகவே நான் நடிக்கும் சீரியல்களை தவறாமல் பார்த்து வருகிறார்கள்.அப்போது என் நடிப்பில் உள்ள நிறை குறை இரண்டையுமே சொல்வார்கள். அப்படி அவர்கள் குறை என்று சொல்லும்பட்சத்தில் அதை சரி செய்து கொள்ள நான் முயற்சி செய்கிறேன்.
* சினிமா ஆசை உள்ளதா?
சமீபத்தில் வெளியான கதகளி படத்தில் இன்ஸ்பெக்டரின் மனைவியாக நடித்தேன். மற்றபடி சினிமாவில் பெரிதாக எனக்கு ஆசை இல்லை. அதனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. மேலும், சீரியல்களே திருப்தியாக உள்ளன. ஒரு சீரியலில் கமிட்டானால் ஐந்து வருடங்கள் வரை போகிறது. தினமும் வீடு தேடி செல்கிறோம். இதனால் எங்களை அவர்களது குடும்பத்தில் ஒருவர் போல் நினைக்கிறார்கள். நாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பார்த்து கலங்குகிறார்கள். அந்த அளவுக்கு சீரியல் நடிகைகளுக்கான உறவுகள் தமிழகமெங்கும் உள்ளது. அதனால் தொடர்ந்து சீரியல்களில் நடித்து தமிழ்நாட்டு மக்களின் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக உள்ளது.
* சீரியல்கள் அவசரகதியில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறதே?
ஒருநாளைக்கு இவ்வளவு புட்டேஜ் கொடுக்க வேண்டும் என்கிற நிலை இருப்பதினால்தான் டைரக்டர்கள் அவசரம் காட்டுகிறார்கள். இது ஒன்றும் தப்பில்லையே. அதனால் அதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடிகர் நடிகைகள் தங்களை தயார்படுத்திக்கொண்டு நடிக்க வேண்டும். மேலும், ஒரு வேலையை விரும்பி செய்யும்போது அது கஷ்டமாக தெரியாது. அந்த வகையில் நான் நடிப்பை விரும்பி செய்கிறேன். அதனால் எவ்வளவு வேகமாக படப்பிடிப்பு நடத்தினாலும் என்னால் அதற்கு ஈடுகொடுக்க முடியும்.
* நீங்கள் அதிகம் ரசித்து நடித்த வேடம் எது?
என் இனிய தோழியே தொடரில் ஜமீந்தார் மகளாக நடித்தேன். 30 வருடத்துக்கு முந்தைய பிளாஷ்பேக் ரோல். அதில் அருந்ததி கெட்டப்பில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்து நடித்தேன். அது நல்ல ரீச் ஆனது. அந்த மாதிரி வெரைட்டியாக பண்ணும்போது அந்த ரோல் மீது ஈடுபாடு அதிகமாகும். அதனால் அதை நான் மிகவும் ரசித்து நடித்தேன். மேலும், சீரியல்களில் நிறைய மாற்றம் வர வேண்டும். ட்ரெண்டு மாறிக்கொண்டு வருகிறது. அதோடு, சமீபகாலமாக இந்தி சீரியல்கள் ஆக்ரமித்து வருகின்றன. இந்த நேரத்தில் தமிழ் சீரியல்களில் நிறைய வித்தியாசம் காட்ட வேண்டும். அப்போதுதான் போட்டிகளை சமாளிக்க முடியும்.
* பெண்கள் நடிப்பை மட்டும்தான் ரசிக்கிறார்களா? இல்லை உங்களது காஸ்டியூம் களையும் ரசிக்கிறார்களா?
இரண்டையுமே ரசிக்கிறார்கள். அதாவது முதலில் நடிப்பைதான் பார்ப்பார்கள் எ ன்றாலும் கூடவே எங்களது புடவை மற்றும் காது, கழுத்தில் அணியும் நகைகளையும் கவனிக்கிறார்கள். என்னோட பாட்டிகூட சில சீரியல்களில் நடிப்பவர்கள் அணியும் புடவைகளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார். அந்த அளவுக்கு நடிப்பு, புடவை இரண்டையுமே நேயர்கள் கவனிக்கிறார்கள். அதனால் நடிப்பைப்போலவே டிரஸ் விசயத்திலும் நான் அதிக ஆர்வம் காட்டி வருகிறேன். கதாபாத்திரங்களுக்கேற்ப என்னை பக்காவாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் என்கிறார் அகிலா.