வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
மண் வாசனை படங்களில் நடிகராகவும், எழுத்தாளராகவும், வெற்றி வாகை சூடி வரும் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியைச் சேர்ந்தவர். எழுத்துக்கள் என்னுடையது அல்ல; அது சமூகத்தின் சொத்து என்று கூறியவர். இலக்கியவாதிகளின் பிதாமகன் என்று சொல்லப்படும் எஸ்.ஏ.பெருமாளால் வளர்க்கப்பட்டவர்.எழுத்தில் படைக்கும் பாத்திரமாக ஊடுருவியதால் என்னமோ, எழுத்தாளருக்கு நடிப்பு வரும் என்பதை வெளி உலகுக்கு அழுத்தமாக எடுத்துரைத்தவர். ராமநாதபுரம் சேது மண்ணை சார்ந்து எழுதிய இவரது எழுத்து, தமிழில் அவருக்கு தனித்த இடத்தை கொடுத்துள்ளது. மதயானை கூட்டத்தில் தன் சினிமா பிரவேசத்தை துவக்கினார். பாயும்புலி, சேதுபதி, கொம்பன், ரஜினி முருகன், கிடாரி, சேதுபதி என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக:
* எழுத்துலக அங்கீகாரம் என்று எதை கருதுகிறீர்கள்?
எழுத்துக்கான அங்கீகாரம் என்பது இன்னும் இளைஞனாக இருக்கிறேன். அதைவிட இன்னும்
மனிதனாக இருக்கிறேன். தோல்வியை சந்தித்ததாக கருதவில்லை. எல்லா வெற்றி, தோல்வியையும் வருகிற, கடந்து போகிற விஷயமாக பார்க்க எழுத்து கற்று கொடுத்திருக்கிறது. மக்களுக்கான எழுத்து எழுதியவன். இந்த பெருமை எனக்குரிய அங்கீகாரம்.
* படைப்பில் உங்களுக்கு பிடித்தது?
என் கதைகள் அனைத்தும் நான் பிறப்பதற்கு முன்பு நடந்ததாக பெரியோர் சொல்ல கேள்விப்பட்டது. 40, 50 ஆண்டுக்கு முன்பு உள்ள சம்பவங்கள் தான் கதை. உடனே எழுதிவிட மாட்டேன். மனதில் போட்டு உணர்வுகளாக மாற்றி, வெளிவரும் வார்த்தைகளை கதையாக ஒரு நாளில் எழுதி விடுவேன். பெற்ற பிள்ளைகள் பிடிக்காது என்று சொல்ல முடியாது. எல்லாமே பிடிக்கும்.
* எது எழுத்து?
வாசகனின் கபாலத்தை திறந்து புத்திமதியை கொட்டுவது எழுத்தல்ல. உணர்வை கொட்டுவது தான் எழுத்து.
* மிரட்டும் தோற்றம்?
படிப்பால், நாகரிகத்தால் வருவது தோற்றமல்ல. தாய், தந்தை வழி வருவது தான் தோற்றம். என் தோற்றத்துக்கு காரணம் என்னுடைய அப்பா மற்றும் குலதெய்வம் இருளப்பசாமி. அவர்களை நினைப்பதால், என் தோற்றம் முரடாக இருக்கலாம். உண்மையில் நான் ஒரு குழந்தை.
* எப்போதும் எழுத்தாளர், இப்போது நடிகர் என்ன செய்து கொண்டிருக்கிறார்
தனுஷ் அப்பாவாக என்னை நோக்கி பாயும் தோட்டாவில் நடித்து கொண்டிருக்கிறேன். கிடாரியை தாண்டி, மதயானை கூட்டத்தை தாண்டி, மிகப்பெரிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.
* சினிமாவின் பயணம் எதை நோக்கி செல்கிறது?
சினிமா பயணம் பொழுது போக்கை நோக்கி செல்கிறது. நல்ல இலக்கியவாதிகள், கதாசிரியர்கள் பணக்காரர்கள் மத்தியில் படம் எடுத்து விட முடியாது. நல்ல படங்களை விட, பொழுது போக்கு, பெரிய பட்ஜெட் படங்கள்தான் வெளி வருகிறது. நல்ல இலக்கிய தொடர்புடையவர்களின் படங்களும் வெளி வருவது அரிதாக நடக்கிறது.
* குற்றப்பரம்பரை இயக்குவது ?
இயக்குவது பாலா.
* எழுத்து சிரமங்களை தந்துள்ளதா?
பெண்ணுக்கும், பையனுக்கும் பருவம் வந்தால் திருமணம் செய்கிறோம். அதை தொடர்ந்து பெண்ணுக்கு ஏற்படும் பிரசவம் கடினம் தான். ஆனால், குழந்தையை வளர்ப்பது சுகம். அதுபோல் தான் எழுத்து. தமிழில் எழுத்தாளராக வாழ்வது கடினம்.குற்றபரம்பரை நாவல் எழுதும்போது, மதுரை பெருங்குடி தபால் அலுவலகத்தில் பணிபுரிந்தேன்.வாரத்தில் ஒரு நாள் கூட நான் வீட்டுக்கு வர முடிவதில்லை.தற்போது சந்தோஷப்படுவது எழுத்தால் தான்.
* எழுத்தின் நேர்மை என்பது என்ன?
நுாறு சதவீதம் ஒப்பு கொடுக்க வேண்டும், நியாயவாதியாக இருக்க வேண்டும். சக மனிதனின் பசியை நம் பசியாக நினைக்க வேண்டும். எதிலும் சமரசம் செய்யக்கூடாது. ஏகப்பட்ட நஷ்டங்கள் வந்தால், அதை தாங்கி நிற்க வேண்டும். நல்ல மனது இருந்தால், நல்ல இலக்கியம் பிறக்கும். துளி கறை இருந்தால் கூட எழுத்து கறைபட்டு விடும்.
* பேரன்பு, பெருங்கோபம் என்றால் என்ன?
ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட கீழ் நிலை மக்களின் மேல் பாசம் கொண்டவன். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் பெருங்கோபம் கொண்டவன்.
* நடிப்பு எப்படி வந்தது?
கதை எழுதி கொண்டே, அறிவொளி இயக்கம், த.மு.எ.சங்கத்தில் இருந்தபோது, வீதி நாடகங்களை எழுதி இயக்கி நடித்துள்ளேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் பனையேறி, மீனவர்கள், வறண்ட கருவை காட்டில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களை கலைஞர்களாக உருவாக்கி உள்ளேன். நான் படைத்த பாத்திரத்தில் உயிர் இருந்தது. பாத்திரத்தின் அசைவில் நான் இருந்தேன். இதனால் சினிமாவில் என்னால் எளிதாக ஊருடுவ முடிந்தது, என நினைக்கிறேன்.
* சினிமாவில் பிரவேசிக்கும் போதே உங்கள் கதையால் இரு இயக்குனர்கள் சண்டையிட்டு கொள்கிறார்களே?
இயக்குனர்களாக அவர்கள் பெரிய ஆட்கள். எழுத்தில் நான் பெரியவன். எழுத்து விற்பனை சரக்கல்ல. குற்றப்பரம்பரை கதையை பாலாவுக்கு கொடுத்துள்ளேன்.
* எழுத்து, நடிப்பு எது அடையாளப்படுத்துகிறது.
நடிப்பு தான் அடையாளப்படுத்தியது. நடிப்பில் கொண்டு வந்தது எழுத்து தான்.
* பாதித்தது?
முதலில் சிறுகதைகள் எழுதியபோது, உண்மையான பெயரை போட்டு எழுதி விட்டேன். அதன் விளைவு என்னை வருத்தப்பட வைத்ததுண்டு.
* புதிய எழுத்தாளன் நிலை?
இலக்கிய வாதியாக எழுதியவர்கள் 10 ஆண்டில் இல்லை என்றே கூறலாம். 70--80-களில் வந்த எழுத்தாளர்கள் தான் இன்றும் பேசப்படுகின்றனர். இன்றைய எழுத்தாளர்களிடம் சினிமா மோகம் வந்து விட்டது. புகழ் பொருளில் நாட்டம் போகிறதே தவிர, சமூகத்தில் இலக்கிய பாத்திரம் என்ன என்பது தெரியவில்லை.தற்போது நான் குருவாக இருந்தாலும், நல்ல சிஷ்யனை உருவாக்க முடியாது, என்றார்.
இவரை பாராட்ட: 96770 28003.