ஒருபடத்தை ரீ-மேக் செய்வது எல்லாம் சுத்த போர் என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். ஹாலிவுட் நிறுவனமாக ஃபாக்ஸ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து முதன்முறையாக தயாரிப்பாளராக ஏ.ஆர்.முருகதாஸ் அவதரித்திருக்கும் படம் தான் "எங்கேயும் எப்போதும்". தன்னுடைய உதவியாளர் சரவணன் இயக்கிய இப்படம் வருகிற 16ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுசம்பந்தமான கடைசிகட்ட பிரஸ்மீட் கூட்டம் நடந்தது. இதில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், டைரக்டர் சரவணன், நடிகர்கள் ஜெய், சர்வானந்த், நடிகை அஞ்சலி, இசையமைப்பாளர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் பேசும் போது, "எங்கேயும் எப்போதும்" படம், வேகத்தினால் ஏற்படும் விபத்து பற்றிய கதையம்சம் கொண்டது. ஒரு சில நிமிட ஆவசரத்தால் ஏற்படும் விபத்து, சிலரை வாழ்நாள் முழுவதும் பாதிக்கிறது. எனவே நிதானத்தையும், சாலை விதிகளையும் சரியாக கடைபிடித்தால், மனித விதியையும் வெல்லலாம் எனும் கருத்தை உள்ளடக்கிய படம் இது. கடந்தவாரம் இந்தபடம் வந்தால் கூட, சமீபத்தில் நிகழ்ந்த விபத்தை தடுத்திருக்கலாம். அப்படியொரு மெசேஜை உள்ளடக்கிய படம் தான் "எங்கேயும் எப்போதும்". எனது உதவியாளர் சரவணன், இந்தபடத்தின் கதைப்பற்றி சொன்னவுடன், நானே தயாரிப்பாளராகிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், என்று பேசிய முருகதாசிடம், ஆறு ஹிட் படங்களை கொடுத்த நீங்கள், அதில் சிலவற்றை இந்தியிலும் ரீ-மேக் செய்துள்ளீர்கள், அதேபோல் இந்தபடத்தையும் இந்தியில் ரீ-மேக் செய்வீர்களா என்று கேட்க, உடனே முருகதாஸ், ரீ-மேக் எல்லாம் சுத்த போர், ஒருவேளை அமீர்கான் போன்று யாராவது ஒருவர் எப்போதாவது, ஏதாவது ஒரு படத்தை ரீ-மேக் செய்யுங்கள் என்று கேட்டால், நான் செய்யலாம். ஆனால் எங்கேயும் எப்போதும் படத்தை ரீ-மேக் செய்ய சொல்லி யார் கேட்டால், என் உதவியாளர் சரவணனை இயக்க சொல்லிவிடுவேன். நான் வேண்டுமானால் தயாரிப்பாளராக இருப்பேன் என்றார்.