மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
டி.ராஜேந்தர் எனும் அஷ்டாவதானியை உலகிற்கு அடையாளம் காட்டியது 'ஒருதலை ராகம் படம்'. ஆனால் அந்த படத்தை அவர் இதுவரை பார்க்கவில்லை என்பதுதான் காலத்தின் கோலம்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த டி.ராஜேந்தர் 'ஒருதலை ராகம்' கதையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மயிலாடுதுறை அருகில் உள்ள வடகரையில் உள்ள முஸ்லிம்கள் வெளிநாட்டில் சம்பாதித்து நல்ல வசதியோடு இருந்தார்கள். அவர்களில் ஒருவரான இப்ராஹிம் என்பவர் ராஜேந்தருக்கு தயாரிப்பாளராக கிடைத்தார். படம் தயாரிக்க ஒரு நிபந்தனை விதித்தார் இப்ராஹிம். “கதை, திரைக்கதை, வசனம், இசை எல்லாம் நீதான் படத்தை நான்தான் இயக்குவேன்” என்றார். முதல் பட வாய்ப்பு கிடைப்பதே பெரிது என்று அதற்கு ஒத்துக் கொண்டார் டி.ராஜேந்தர்.
படப்பிடிப்பு தொடங்கியது. தயாரிப்பாளர் இப்ராஹிம் இயக்கத் தொடங்கினார். ஆனால் சினிமா அனுபவம் இல்லாத அவரால் படத்தை இயக்க முடியவில்லை. உடனே டி.ராஜேந்தர் “அண்ணே நானே இயக்குகிறேன். உங்க பேரை வேணா போட்டுக்குங்க” என்றார். அதற்கு இப்ராஹிம் ஒத்துக் கொள்ள டி.ராஜேந்தரே படத்தை இயக்கி இசை அமைத்தார். படம் வெளிவந்தது. முதல் இரண்டு நாள் தியேட்டர்கள் காற்று வாங்கியது. அதன் பிறகு பாடல்கள் பரபரப்பாக ஹிட்டாக படமும் ஓடத் தொடங்கியது. படத்தின் விளம்பரங்களிலும், படத்தின் டைட்டிலிலும் இயக்கம் இ.எம்.இப்ராஹிம் என்று வந்தது. படப்பிடிப்பின்போது இப்ராஹிமிற்கும் டி.ராஜேந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தை முடித்து கொடுத்து விட்டு வெளியே வந்து விட்டார் டி.ராஜேந்தர்.
படம் வெளிவந்த முதல் நாள் படத்தை பார்க்க விரும்பினார் டி.ராஜேந்தர். அப்போது அவர் கையில் பணம் இல்லை. மூன்றாவது நாளில் நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றார். அலங்கார் தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற டி.ராஜேந்தர் கடைசி வரிசையில் அமர்ந்து படம் பார்த்தார். டைட்டில் கார்டு ஓடியது அவர் பெயர் சின்னதாக ஒரு ஓரத்தில் இருந்து. அவர் இயக்கிய படத்தை இன்னொருவர் இயக்கியதாக வந்தது. அதைக்கூட பொறுத்துக் கொண்டார். ஆனால் படத்துக்கு பின்னணி இசை யாரோ செய்திருந்தார்கள். இவர் இசைத்த பின்னணி இசை நீக்கப்பட்டிருந்தது.
கண்களில் கண்ணீர் மல்க தியேட்டரை விட்டு வெளியேறினார் டி.ராஜேந்தர். அன்றிலிருந்து இன்று வரை 'ஒரு தலை ராகம்' படத்தை டி.ராஜேந்தர் பார்க்கவில்லை. பார்க்ககூடாது என்பதை ஒரு விரதமாக கடைபிடிக்கிறார். “ஒரு தலை ராகம்” தான் இயக்கிய படம்தான் என்பதை நிரூபிக்க அதே பாணியில் ரயில் பயணங்களில் படத்தை இயக்கி காட்டினார். “என்ன இருந்தாலும் இன்று நான் சாப்பிடுகிற சோறு இப்ராஹிம் அண்ணன் கொடுத்தது” என்று நன்றியோடு குறிப்பிடுவார்.