வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! | நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்! | ‛மெய்யழகன்' குறித்து நெகிழ்ந்து பேசிய நானி! | பல விஷயங்களில் மனம் மாறிய நடிகை | 1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர் | மதுரைகாரங்க பாசம்; சந்தோஷத்தில் சரண்யா | வித்தியாசம் இருந்தால் நிலைத்து நிற்கலாம்! சொல்கிறார் இல்லத்தரசிகளின் பிரியமான 'சுஜிதா' | நேருக்கு நேர் மோதும் கமல், சிம்பு! | மே 1 வெளியீடுகள்: எந்த ஆங்கிலப் பெயர் படத்திற்கு வரவேற்பு ? | ‛யாதும் அறியான்' பர்ஸ்ட் லுக் வெளியீடு |
சிவாஜியை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் ஏசி திருலோகசந்தர் காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருலோகசந்தர், சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜூன் 15ம் தேதி) காலமானார்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை பூர்வீகமாக கொண்டவர் ஏசி திருலோகசந்தர். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சினிமா துறைக்கு வந்தவர், 1962ம் ஆண்டு ‛வீரத்திருமகன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து நானும் ஒரு பெண், ராமு, தெய்வமகன், அதேகண்கள், அன்பே வா, பாரத விலாஸ், டாக்டர் சிவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் சுமார் 65 படங்களை இயக்கியுள்ளார் திருலோகசந்தர். மேலும் 20 படங்களுக்கும், கதையும், நிறைய சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
சிவாஜியின் ஆஸ்தான இயக்குநர் : சிவாஜியின் ஆஸ்தான இயக்குநராக திருலோகசந்தர் தான் இருந்துள்ளார். சிவாஜியை வைத்து முதன்முதலில் ‛தங்கை என்ற படத்தை இயக்கினார் திருலோகசந்தர். அப்போது ஆரம்பமான இவர்களது கூட்டணி தொடர்ந்து என் தம்பி, இரு மலர்கள், தெய்வமகன், எங்க மாமா, பாரத விலாஸ், டாக்டர் சிவா, அவன்தான் மனிதன், என்னை போல் ஒருவன், பைலட் பிரேம்நாத், விஸ்வரூபம், லாரி டிரைவர் ராஜாகண்ணு, அன்புள்ள அப்பா வரை தொடர்ந்தது. சுமார் 25 படங்கள் இவர்களது கூட்டணியில் வெளிவந்துள்ளது. இதில் அநேக படங்களும் வெற்றி பெற்றுள்ளது.
ஏவிஎம்.,ற்கும் ஆஸ்தானமானவர் : திருலோகசந்தரின் அநேக படங்கள் அப்போதைய தயாரிப்பில் பிரபலமாக இருந்த ஏவிஎம்., பேனரில் தான் அதிகம் வந்தது. வீரத்திருமகன் படத்தில் ஆரம்பமான ஏவிஎம்., திருலோகசந்தர் கூட்டணி தொடர்ந்து ராமு, நானும் ஒரு பெண், அதே கரங்கள் என நீண்டது. கடைசியாக சிவாஜியை வைத்து ‛அன்புள்ள அப்பா என்ற படத்தை இயக்கினார். இப்படம் 1987-ம் ஆண்டு வெளிவந்தது.
எம்ஜிஆருக்கு ஒரு படம் மட்டுமே... : சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய ஏசி திருலோகசந்தர், எம்.ஜி.ஆர்.,-ஐ வைத்து அன்பே வா என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் தான் இயக்கினார்.
ரஜினிக்கும் ஒரு படம் : எம்ஜிஆர்., சிவாஜி தவிர்த்து நடிகர் ரஜினிகாந்த்தை வைத்தும் ‛வணக்கத்திற்குரிய காதலியே என்ற ஒரு படத்தை இயக்கியுள்ளார் திருலோகசந்தர்.
ஆஸ்கருக்கு சென்ற முதல் தமிழ்படம் : சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். அப்படிப்பட்ட ஆஸ்கர் விருதுக்கு தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலில் சென்ற படம் திருலோகசந்தர் இயக்கிய ‛தெய்வமகன் தான். இப்படத்தில் சிவாஜி மூன்று விதமான வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ஆனால் இப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை, இருந்தாலும் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது அப்போது ஹைலைட்டாக பேசப்பட்டது.
விருதுகள் : திருலோகசந்தர், தமிழக அரசின் கலைமாமணி விருது, 5முறை பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். திரைப்பட கல்லூரியின் தலைவராகவும், சிறந்த படங்களை தேர்வு செய்யும் தேர்வு குழு தலைவராகவும் இருந்துள்ளார்.
திருலோகசந்தருக்கு பாரதி என்ற மனைவியும், ராஜ், பிரேம் என்ற 2 மகன்களும், மல்லிகேஸ்வரி என்ற 1 மகளும் உள்ளனர். இவர்களில் மனைவி பாரதி, மகன் பிரேம் ஆகியோர் இறந்துவிட்டனர். திருலோகசந்தரின் உடல் அஞ்சலிக்காக சென்னை ஈசிஆர்., ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையினர் அஞ்சலி : திருலோகசந்தர் உடலுக்கு ஏவி.எம்.சரவணன், இயக்குநர் எஸ்பி.முத்துராமன், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, நடிகை கே.ஆர்.விஜயா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம் : பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மாலை சுமார் 5மணியளவில், சென்னை பெசன்ட நகரில் உள்ள மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
வீடியோ லிங்க் : http://www.dinamalar.com/video_main.asp?news_id=60140&cat=32