தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் |
தமிழ் சினிமாவும் காதலும் இரண்டறக் கலந்த ஒன்று. காதல் இல்லாத திரைப்படங்கள் இல்லை, திரைப்படங்களில் காதல் இல்லாமலும் வருவதில்லை. அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை நிஜ வாழ்க்கையில் காதல் எப்படி மாறுகிறதோ அதை திரைப்படங்கள் அப்படியே பிரதிபலித்து வருகின்றன. சமயங்களில் நிஜ வாழ்க்கையில் உள்ளதை விட திரையில் உருவாக்கப்படும் கற்பனைக் காதல் ஆச்சரியப்படவும் வைக்கின்றன.
திரைப்படங்களைப் பார்த்துத்தான் காதலிப்பவர்கள் பெருகுகிறார்கள் என்றும், இல்லையில்லை நிஜ வாழ்க்கையில் உள்ள காதலைத்தான் படமாக எடுக்கிறோம் என்று திரைப்படக் கலைஞர்களும் சொல்லி வருகிறார்கள். பெரும்பாலான காதல் திரைப்படங்கள் அந்தந்த படைப்பாளிகளின் அனுபவங்களாகவும், அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களின் அனுபவங்களாகவும்தான் எடுக்கப்படுகின்றன.
காதல் என்பது உணர்வு சார்ந்த விஷயம்
திரைப்படங்களில் காதலை எப்படியெல்லாம் சொன்னார்கள், சொல்லி வருகிறார்கள் என்று பார்த்தால் வியப்பாகவும், மலைப்பாகவும் இருக்கும். காதல் என்பது உணர்வு சார்ந்த விஷயம். மனதும் மனதும் பேசிக் கொள்வதுதான் காதல், அது மூளையின் யோசனைகளைப் பொறுத்தெல்லாம் வராது என்று கூட சொல்வார்கள். காதலை கதாபாத்திரங்களின் மூலம் உருவகப்படுத்தி அதை ரசிகர்களும் உணரும் விதத்தில் திரையில் வடிப்பது சாதாரண விஷயமில்லை.
எத்தனையோ காதல் திரைப்படங்கள் காதலைச் சரியாகச் சொல்லாததால் தோல்விப் படங்களாக அமைந்திருக்கின்றன. ஒரு காதல் படத்தின் வெற்றிக்கு அந்தக் காதல் கதை மட்டும் பெரிதல்ல, அந்த காதல் உணர்வை கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்தும் நடிகர், நடிகைகளும் முக்கியமானவர்கள். அவர்கள் அந்த உணர்வை அழகாக வெளிப்படுத்தினால் மட்டுமே ரசிக்க முடியும். 'கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி' என்று இன்று பேசிக் கொள்கிறார்களே, அந்தக் 'கெமிஸ்ட்ரி' எல்லாருக்கும் வந்து விடாது. அது எந்த காதல் ஜோடியிடம் அழகாக வெளிப்படுகிறதோ அவர்கள்தான் வெற்றிகரமான ஜோடியாகவும் திரையில் வலம் வர ஆரம்பிக்கிறார்கள்.
''தேவதாஸ்''
தமிழ் சினிமாவில் காதல் என்று ஆரம்பித்தால் இன்றல்ல நேற்றல்ல அன்றிலிருந்தே ஒரே ஒரு படம்தான் முதலில் எல்லாருக்கும் ஞாபகம் வரும், அது 'தேவதாஸ்' திரைப்படம். ஒரு காதல் வெற்றிப் படம் ஞாபகத்திற்கு வருவதை விட ஒரு காதல் தோல்விப் படம் ஞாபகம் வருவதற்கு ஒரே காரணம், அந்தக் காதலில் இருந்த தீவிரம். இன்றும் இந்தப் பெயரை உச்சரிக்காத காதலர்கள் இல்லை. நாட்டில் இன்னமும் காதலில் தோல்வியடைந்த எத்தனையோ 'தேவதாஸ்'கள் உலவிக் கொண்டுதானிருக்கிறார்கள். இந்தப் படம் வெளிவந்த 1953ம் ஆண்டில் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றும் எத்தனையோ காதல் படங்கள் வந்தாலும் இந்த 'தேவதாஸ்' பெயரை மறக்கச் செய்ய முடியவில்லை.
ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு காதல் திரைப்படங்கள் மறக்க முடியாத காதல் படங்களாக ரசிகர்கள் மனதில் இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம், பக்கங்கள் போதாது. ஜாதி, மதம், அந்தஸ்து, ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், என எந்த பாகுபாடும் இல்லாமல் சினிமாவில் நாம் பார்த்த எத்தனையோ காதல்கள் இன்றும் மறக்க முடியாதவை.
கல்யாண பரிசு
ஒரு சில இயக்குனர்கள் சிறப்பான காதல் படங்களைக் கொடுத்து இன்றும் அவர்களின் காதல் படங்களால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆக்ஷன் இயக்குனர், சென்டிமென்ட் இயக்குனர், பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் போது 'காதல் இயக்குனர்கள்' என்று சிலரையும் குறிப்பிடலாம். அந்தக் காலத்தில் இப்படி ஒரு காதலா என ஆச்சரியப்பட வைத்தவர்களில் இயக்குனர் ஸ்ரீதர் ஒருவர். அவருடைய 'கல்யாண பரிசு' படமும் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படமும் இன்று அறுபது வயதைக் கடந்தவர்கள் மட்டும் ரசிக்க வேண்டிய படம் மட்டும் அல்ல, அனைவரும் ரசிக்க வேண்டிய ஒரு படம். 1959ல் வெளிவந்த 'கல்யாண பரிசு' படம் ஒரு வித்தியாசமான காதலைச் சொன்ன படம். தங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் ஜெமினி கணேசனை அக்கா, தங்கையான விஜயகுமாரி, சரோஜா தேவி காதலிக்கிறார்கள். அக்காவிற்காக தங்கை காதலை விட்டுத் தருகிறாள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
காதல் என்பது வெற்றி பெறுவதிலும், தோல்வியுறுவதிலும் மட்டும் இருப்பதில்லை, அது தியாகம் செய்வதிலும் கூட இருக்கிறது என்று காதலைத் தியாகம் செய்த பலர் சொல்வார்கள். இன்றும் அந்தக் காதல் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 'கல்யாண பரிசு' படம் அப்படிப்பட்ட ஒரு தியாகக் காதலைச் சொல்லி மக்கள் மனதில் இடம் பிடித்த ஒரு படமாக விளங்கியது.
நெஞ்சில் ஓர் ஆலயம்
அதே ஸ்ரீதர் இயக்கத்தில் 1962ல் வெளிவந்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படம் காதலை ஒரு தெய்வீகமான விஷயமாகக் காட்டியது. காதலர்களான கல்யாண்குமார், தேவிகா சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து விடுகிறார்கள். கணவன் முத்துராமனுக்கு ஏற்பட்ட நேயாயால் மரணத்துடன் போராட வேண்டிய சூழ்நிலை. முன்னார் காதலரான கல்யாண்குமாரின் மருத்துவமனையிலேயே கணவனை சேர்க்கும் தேவிகாவும், கல்யாண் குமாரும் சந்திக்க நேருகிறது. அதன் பின் நடக்கும் உணர்வுப் போராட்டங்கள்தான் இந்தப் படத்தின் கதை. ஒரே ஒரு மருத்துவமனை அரங்கிற்குள் படமாக்கப்பட்ட இப்படத்தின் வெற்றி இன்றுவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.
அன்பே வா
காதல் திரைப்படங்களுக்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்தக் காதலை சரியாக வெளிப்படுத்தும் நடிகர்களும் முக்கியம். அந்தக் காலக்கட்டங்களில் வளர்ந்து வரும் நடிகர்கள் அல்லது புதுமுக நடிகர்கள் நடிக்கும் காதல் படங்கள்தான் அதிகம் வெற்றி பெற்றன. ஆனால், முன்னணியில் இருந்த நடிகர்களும் சமயம் கிடைக்கும் போது நடித்த காதல் படங்களாலும் ரசிகர்களைக் கவர்ந்தார்கள். அப்படி எம்ஜிஆர் நடித்த ஒரு காதல் திரைப்படம்தான் 'அன்பே வா'. இன்றைய பல சுவாரசியமான காதல் படங்களுக்கு இந்தப் படத்தையும் முன்னோடியான ஒரு படமாகச் சொல்லலாம். இன்று கூட இந்தப் படத்தை ரீமேக் செய்து எடுத்தால் கூட இந்தக் காலத்திற்கும் பொருத்தமான கதையாக இருக்கும். மோதலில் உருவாகும் காதலில் கூட ஒரு சுவாரசியம் உண்டு என்பதை புரிய வைத்த படம் இது.
முதல் மரியாதை
எம்ஜிஆர் நடித்த காதல் படங்களில் அதிகம் பேசப்பட்ட படம் இது என்றால் சிவாஜி நடித்த படங்களில் அதிகம் பேசப்பட்ட படம் 'முதல் மரியாதை'. சிவாஜிகணேசன் எத்தனையோ காதல் படங்களில் நடித்திருந்தாலும் 1985ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள், ஆனால் அதற்கு வயதும் ஒரு தடையல்ல என்று சொன்ன படம். இது காதலா, கள்ளக் காதலா என்று கூட யோசிக்க வைக்கும்படியான ஒரு கதை, ஆனால், அதை படத்தில் இயக்குனர் நியாயப்படுத்தி சொல்லியிருந்த விதம்தான் படத்திற்குக் கிடைத்த வெற்றிக்குக் காரணம்.
அந்த 7 நாட்கள்
காதலைப் பற்றிச் சொல்லும் போது இன்னுமொரு படத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. பாரதிராஜாவின் சீடரான பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'அந்த 7 நாட்கள்' படம்தான் அது. 1981ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அதன் சென்டிமென்ட்டான முடிவில் உயர்ந்து நின்றது. காதல் என்பது இருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒரு மனைவிக்கு அவன் கணவன்தான் முக்கியம் பழைய காதலை மறப்பதும் தவறில்லை என்பதை உணர்த்திய படம். தமிழ் சினிமாவில் உள்ள சென்டிமென்ட்டுகளில் இந்தப் படத்தில் இடம் பெற்ற 'தாலி' சென்டிமென்ட் அதன் பின் எத்தனையோ படங்களில் பல்வேறு விதமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இளமை ஊஞ்சலாடுகிறது
70களில் மனதைத் தொடும் வித்த்தில் அதிகமான காதல் படங்கள் வரவில்லை என்றாலும் காதலை மையமாகக் கொண்ட பல படங்கள் 70களின் முடிவில் வர ஆரம்பித்தது. அவற்றில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா இணைந்து நடிக்க ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' படம் குறிப்பிட வேண்டிய படமாக அமைந்தது. காதலை பல்வேறு வடிவங்களில் ரசிக்கும்படியாகவும், வெற்றிப் படமாகவும் கொடுத்த இயக்குனர் ஸ்ரீதரால் காதல் படத்திற்குப் படம் வாழ்ந்து கொண்டுதானிருந்தது.
அலைகள் ஓய்வதில்லை
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 'அலைகள் ஓய்வதில்லை' படம் காதல் என்பது மதத்தைப் பொறுத்தது அல்ல, மனதைப் பொறுத்தது என்று சொல்லியது. புதுமுக நடிகர்கள் நடித்த ஒரு காதல் படத்திற்கு தமிழக ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மிகப் பெரியது. கார்த்தி, ராதா இருவரின் நடிப்பால் இன்றும் சிறந்த காதல் படங்களில் இந்தப் படமும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
'ஒருதலை ராகம்'
காதல் என்பது இருமனம் இணைந்து காதலிப்பது மட்டுமா ஒரு மனம் ஒருதலையாகக் காதலித்தாலும் அது காதல்தான் என்று டி.ராஜேந்தரின் படைப்பில் வெளிவந்த 'ஒருதலை ராகம்' படம் சொன்னது. அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியே ஒருதலையாகக் காதலித்தவர்களால் கிடைத்ததுதான் என்று கூடச் சொல்லலாம். இந்த ஒருதலைக் காதலின் வரிசையில் முரளி, ஹீரா நடித்த 'இதயம்' திரைப்படமும் பின்னாளில் சேர்ந்தது.
பூவே உனக்காக
80களின் இறுதியில் தமிழ் சினிமாவில் மேலும் அறிமுகமான சில புதிய இயக்குனர்களால் வித்தியாசமான காதல் படங்கள் வர ஆரம்பித்தன. அவற்றில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த 'பூவே உனக்காக' திரைப்படம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு படம். அன்றைய இளைஞர்களின் மனதைப் பிரதிபலிக்கும் படமாக அமைந்தது. தன்னால் ஒருதலையாகக் காதலிக்கப்பட்ட பெண், தன்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நாயகன் முயற்சி எடுத்து அவளது காதலைச் சேர்த்து வைக்கும் படமாக விளங்கியது. விஜய், சங்கீதா நடித்த இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வசனம் உண்மையான காதலுக்கு எக்காலத்திற்கும் பொருத்தமன வசனமாக இருக்கும்.
காதல் கோட்டை
90களில் 'காதல்' தான் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தது. 'காதல் கோட்டை' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'காதல்' எனத் தொடங்கும் எத்தனை எத்தனை படங்கள் வெளிவந்தது. பார்க்காமலே காதலா, அது எப்படி முடியும், இன்று இந்தப் படம் வெளிவந்த போது பேசினார்கள். ஆம், காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டதுதானே தவிர அது உருவம் சம்பந்தப்பட்டு வருவது அல்ல என்று உன்னதமாகப் புரிய வைத்த படம். அஜித், தேவயானி இருவரின் காதலை 'காவியக் காதல்' என்று தாரளமாகச் சொல்லலாம்.
சேது
அப்படிப்பட்ட காவியக் காதலால் மேலும் உருக வைத்த படம் ஒன்று வந்தது, அது பாலா இயக்கத்தில் முதன் முதலாக வெளிவந்த 'சேது' திரைப்படம். ஒரு பெண் மீது கொண்ட காதலால் பித்தனான ஒருவனின் கதை. இன்றும் அந்தக் கிளைமாக்ஸ் காட்சியைக் கண்டு உருகாதவர்கள் யாருமில்லை. இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு மிகச் சிறந்த இயக்குனரும், இவரைப் போல் வேறு யாரால் நடிக்க முடியும் இன்றும் பிரமிக்க வைக்கும் விக்ரமும் கிடைத்தார்கள். இப்படத்திற்கு முன் விக்ரம் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
சிறந்த இயக்குனர்களாக இன்று அறியப்படும் பல இயக்குனர்களும் காதல் படங்களில் தேர்ந்தவர்கள்தான் என்பதை பல படங்கள் புரிய வைத்துள்ளன. மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர், சேரன் என்று பலர் அவரவர் இயக்கிய பல படங்களில் காதலை கையாண்ட விதம் ரசிகர்களை நிறையவே கவர்ந்தது.
சேரன் இயக்கத்தில் வெளிவந்த 'பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப்' ஆகிய படங்களில் இடம் பெற்ற காதலும், அந்தப் படங்களுக்கான முடிவும் இன்றும் பேசப்படக் கூடியவை.
பாலசந்தர் படங்களில் இருக்கும் காதலில் நிறையவே மெச்சூரிட்டி காணப்படும். அவர் அணுகிய காதல் கதைகளைப் போன்று வேறு யாராவது அணுகியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். இவர் இயக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் எந்தப் படத்தில் சொல்லப்பட்ட காதல், வித்தியாசமான காதல், ஏன் அப்படிச் சொல்லியிருந்தார் என்று மிகப் பெரிய விவாதத்தையே நடத்தலாம்.
'காதல்'
'காதல்' என்று சொல்லிவிட்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. உருகி உருகி சொல்லப்பட்ட ஒரு காதல் கதை. கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து அதிர்ந்து தியேட்டரை விட்டு எழுந்திருக்க முடியாமல், அப்படியே பல பேர் உறைந்து உட்கார்ந்ததுதான் இந்தப் படத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. காதல் என்பது கைகோர்ப்பது மட்டுமில்லை, கைவிடுவதுமில்லை, என்ன ஆனாலும், கடைசி வரை வைத்திருந்து காப்பாற்றுவதுதான் என்பதை எத்தனை பேர் இன்று கடைபிடிப்பார்கள் என்பது ஆச்சரியம்தான்.
விண்ணைத் தாண்டி வருவாயா
இன்றைய இளம் ரசிகர்கள் சமீபத்தில் அதிகம் ரசித்த காதல் படமாக சிம்பு, த்ரிஷா நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் அமைந்தது. காதலை உணர்வு பூர்வமாகவும், ஸ்டைலிஷாகவும் சொன்ன இந்தப் படத்தின் பாதிப்பு இன்றைய இளைஞர்களிடம் அதிகமாகவே உள்ளது.
இன்னும் பல இயக்குனர்கள், பல படைப்பாளிகள், காதல் பற்றிய அவர்களது அனுபவங்களையும், ரசித்த விஷயங்களையும் இந்த செல்லுலாய்டில் சிற்பிகளாய் வடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
காதல் என்பது காதலர்களை வாழ வைக்கிறதோ இல்லையோ, தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.