ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? |
தமிழ்த் திரையுலகமும், ரசிகர்களும் எப்போதுமே திறமைசாலிகளை முதலில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்கு 'அவள் அப்படித்தான்' படத்தின் இயக்குனர் மறைந்த ருத்ரையா அவர்கள் ஒரு சிறந்த உதாரணம். சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரையா, 70களின் ஆரம்பத்தில் அங்கு படிப்பை முடித்ததும் திரைப்படம் எடுப்பதற்கான முயற்சியில் இறங்கினார். யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் 'அவள் அப்படித்தான்' படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். அவருக்கு திரைப்படக் கல்லூரித் தோழர்களான நல்லுசாமி, ராஜேஷ்வர், வண்ணநிலவன் மற்றும் பாலசந்தரின் உதவியாளரான அனந்து ஆகியோர் உதவ முன்வந்தார்கள்.
நல்லுசாமி படத்தின் ஒளிப்பதிவையும், ராஜேஷ்வர் படத்தின் ஒன்லைனையும், அனந்து படத்தின் திரைக்கதையையும், பெரும்பாலான வசனங்களையும் எழுத, வண்ணநிலவன் மற்ற வசனங்களை எழுத, அப்போத வளர்ந்து வரும் இசையமைப்பாளரான இளையராஜாவின் இசையில் 'அவள் அப்படித்தான்' படம் ஆரம்பமானது. ருத்ரையாவின் திறமையைப் புரிந்து கொண்ட கமல்ஹாசன் அவரே முன்னின்று ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, இளையராஜா ஆகியோரை படத்தில் பணிபுரிய வைக்க காரணமாக அமைந்திருக்கிறார். அப்போது முன்னணியில் இருந்த ஸ்ரீப்ரியா படத்திற்காக மிகவும் குறைந்த சம்பளத்துடன் பணிபுரிய சம்மதித்திருக்கிறார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் எப்போதெல்லாம் ஃப்ரீயாக இருந்தார்களோ, அப்போதெல்லாம் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
கமல்ஹசான் வீடு, ஸ்ரீப்ரியா வீடு, தயாரிப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் மட்டுமே அதிக காட்சிகளை குறைந்த செலவில் கருப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். அப்போது இப்படத்தின் நட்சத்திரக் கூட்டணியான 'கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா' ஆகியோர் நடித்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதால் இப்படமும் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. படம் முடிந்து தியேட்டர்களில் திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் பயங்கரமாக ரகளை செய்திருக்கிறார்கள். படத்தை தியேட்டர்களை விட்டு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாம். படத்திற்கு மார்க் போடும் வாரப் பத்திரிகை கூட மிக மிகக் குறைவான மார்க்கையே பேட்டதாம். அதன் பின்தான் ஒரு ஆச்சரியமான விஷயம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தியத் திரையுலகின் மேதைகளுள் ஒருவரான மிருணாள் சென் சென்னைக்கு ஒரு வேலையாக வந்த போது, யதேச்சையாக 'அவள் அப்படித்தான்' படத்தைப் பார்த்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு அருமையான படத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்துடன் அவரே பத்திரிகையாளர்களை அழைத்து படத்தின் பெருமைகளையும், சிறப்பையும் பற்றிக் கூறியிருக்கிறார். அதன் பின்தான் பத்திரிகைகள் அவற்றைப் பற்றி பாராட்டி வெளியிட, பின்னர் படம் நல்ல வரவேற்புடன் ஓட ஆரம்பித்திருக்கிறது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய ஊர்களில் படம் 100 நாட்கள் ஓடியிருக்கிறது. ஒரு சிறந்த தமிழ் இயக்குனரின் திறமையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமல் எங்கிருந்தோ வந்த ஒருவர் கூறிய பிறகுதான் அவரைப் பற்றி தெரிந்து கொண்ட விஷயம் அன்று நடந்திருக்கிறது. அது இன்றும் தொடர்வதுதான் வருத்தத்துக்குரிய ஒரு விஷயம்.
ருத்ரையாவின் இரண்டாவது படமான 'கிராமத்து அத்தியாயம்' சரியாக ஓடவில்லை என்றாலும் 'ருத்ரையா தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத ஒரு அத்தியாயம்'தான் என்பதில் சந்தேகமில்லை.