பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
துடிக்கும் இதயமும், இவர் பெயர் கேட்டால் நடிக்கும். கேமரா முன் முகம் சிவந்தால், எரிமலை கூட வெடிக்கும். அதனால் தான், ஏற்ற பாத்திரங்களுக்கே, அவரை பிடிக்கும். சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. பிற குழந்தைகளை போலவே, பிறந்ததும் அழுதது அக்குழந்தை; பின்னர் தான் தெரிந்தது, அது மறையும் போது, அனைவரும் இப்படித்தான் அழுவார்கள் என்பதை, அன்றே நடித்துக் காட்டியிருக்கிறது, அந்த குழந்தை. உடல், பொருள், ஆவி அத்தனையும், தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்த அந்த அதிசய பிறவிக்கு பெயர் "சிவாஜி. தன்னை படைத்த கடவுளுக்கே, தன் நடிப்பில் முகம் கொடுத்தவர். பராசக்தியில் தொடங்கி, படையப்பா வரை, இவரை மிஞ்ச எவரப்பா? இன்று அவரது 86வது பிறந்தநாள், இந்தநாளில் அவரைப்பற்றிய சில நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர் சில பிரபலங்கள். இதோ உங்களுக்காக...
விஜய் சேதுபதி
சிவாஜி பற்றி நான் சொல்லணும் என்றால், தமிழ் சினிமாவின் டிஸ்னரியே அவர் தான். டெக்னாலாஜி வளராத அந்தக்காலத்திலேயே இவரது நடிப்பை பார்த்து, இன்றைக்கும் நாம் பார்த்து பிரமிப்பு அடைகிறோம். பல புதுமைகளை படைத்து விட்டு சென்று விட்டார். சமீபத்தில், ''ராஜபாட் ரங்கதுரை'', ''தில்லானா மோனாம்மாள்'', ''கர்ணன்'' போன்ற அவருடைய படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. படத்தில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் நடித்து இருக்கிறது என்று சொல்லலாம். பிரமாண்ட நடிப்புக்கு சொந்தக்காரர் சிவாஜி, அவரைப்போல் இன்னொரு நடிகர் வர சான்ஸே இல்லை என்கிறார் விஜய் சேதுபதி.
டி.ஆர்.
நடிகர் திலகம் தனக்கென்று இலக்கணம் வகுத்தவர், நடிப்பில் வரலாற்றை படைத்தவர் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர், ரெஸ்ட் இல்லாத கலைஞர். குணச்சித்ர பாத்திரங்களில் தன்னை பிறவி கலைஞராக பிரதிபலித்த அற்புத நடிகர். என் வாழ்க்கையில் ''தங்கைக்கு ஓர் கீதம்'', ''என் தங்கை கல்யாணி'' போன்ற படங்கள் எடுக்க அவரின் ''பாசமலர்'' படமே காரணம். என் வாழ்க்கையில் மிகப்பெரிய படிப்பினை கொடுத்த படம் பாசமலர். அவருடைய ''முத்துக்கள் மூன்று'' படத்திற்கு இசையமைத்தேன். நான் எம்.ஜி.ஆரின் தீவிர வெறியன். ஆனால் சிவாஜியின் தீவிர ரசிகன் என்று அப்போது அவரிடமே சொன்னேன். மல்லிகையின் மனம் ரோஜாவுக்கு இருக்காது, ரோஜாவின் மனம் மல்லிகைக்கு இருக்காது. சிவாஜி என் கண்ணை விட்டு எப்போதும் அகலாதவர். ஒருவன் நடக்க ''ஆஹா மெல்ல நட மெல்ல நட...'' என்று அப்போதே கற்றுக்கொடுத்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றவர். சிவாஜிக்கு கர்ஜிக்கவும் தெரியும், கருணை காட்டவும் தெரியும். மொத்தத்தி்ல வீர தமிழர் சிவாஜி என்கிறார் டி.ஆர்.
கருணாகரன்
நான் படித்தது தஞ்சாவூர். நான் சூரக்கோட்டையை தாண்டும்போதெல்லாம், என் தாயார், இது தான் சிவாஜி வீடு என்று காண்பிப்பார். நான் திரைக்கு வருவேன் என்று நினைத்து பார்த்தது இல்லை. இந்த வயது ரசிகர்கள் என்றில்லாமல், எல்லா வயது ரசிகர்களையும் உட்கார வைத்தவர். மரியாதைக்குரிய பெரிய மனிதர். அவரை சந்திக்க முடியவில்லை என்று சங்கட்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பிரபு அவர்கள், என்னை பார்த்து நல்லா நடிக்கிறீங்க என்று பாராட்டினார். அதுவே எனக்கு சிவாஜியிடமிருந்து பாராட்டு கிடைத்தது போன்று இருந்தது என்றார் கருணாகரன்.
ஸ்ரீகாந்த்
நான் சமீபத்தில் தான் சினிமா பீல்டுக்கு வந்தேன், அதனால் அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது படங்களை பார்த்து என்னை ஒரு நடிகனாக மாற்றிக் கொண்டேன். நடிப்புன்னா சிவாஜி என்று சொல்கிறோம். தேவர் மகன் படத்தை பார்த்து அசந்து போய் உள்ளேன். சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள அவர் காட்டும் ஈடுபாடை பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். அதுக்கு தனி திறமை வேண்டும். ஸ்கிரீன் பிரசண்ட் அவரிடம் இருக்கு. அவர் ஒரு பிறவி நடிகர். அந்தமாதிரி நடிகர்கள் ஒருமுறை தான் பிறப்பார்கள். இன்று மட்டுமல்ல என்றுமே பேசக்கூடிய ஒரு நடிகர் சிவாஜி என்கிறார் ஸ்ரீகாந்த்.
விமல்
இன்னைக்கு மட்டுமல்ல, நடிப்புக்காக படைக்கப்பட்டவர் தான் சிவாஜி. அவரது ஒவ்வொரு படமும் இப்போது வரும் நடிகர்களுக்கு பெரிய உதாரணமாக இருக்கு. எனக்கு யார் கதை சொன்னாலும், சிவாஜியின் 10 படங்களின் ரெபரென்ஸ் கிடைக்கும். பட்டிதொட்டியெல்லாம் சிவாஜிக்கு ரசிகர்கள் உண்டு. தலைமுறை தாண்டி நிற்பவர் சிவாஜி. இந்தநாளில் அவரை பற்றி பேச பெருமைப்படுகிறேன் என்கிறார் விமல்
விதார்த்
நான் கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவன். கூத்துபட்டறைக்கு முன்பே, பராசக்தி படத்தில் சிவாஜி வைத்த ஹேர் ஸ்டலைத்தான் நானும் வைத்தேன். என் தாத்தா சிவாஜியின் தீவிர ரசிகர், பராசக்தி படத்தில் ஒரு பெரிய ரோலில் நடித்து இருந்தார். சிவாஜி, தேவகோட்டைக்கு வளாமஊர்மத்தேவரை பார்க்க வரும்போது நான் அவரை பார்த்துள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோது 3 முறை அவரை பார்த்துள்ளேன். அந்தநாள் இன்னும் என் கண்முன் நிற்கிறது. ஒரு நடிகர் என்று ஒருவரை முதல்முறையாக நான் பார்த்தது சிவாஜியைத்தான். இன்றும் என் குடும்பத்தோடு அவரது படங்களை பார்க்கிறேன். நடிகர்களுக்கே குருவாக இருந்தவர். இப்போதும் ஒரு நடிகன் உருவாகும் போது பராசக்தி படத்தின் டயலாக்கை உச்சரிக்காமல் இருந்தது கிடையாது. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது நமக்கு பெருமை என்கிறார் விதார்த்.