சின்ன பட்ஜெட் பட விழாக்களை தவிர்க்கும் யுவன்ஷங்கர்ராஜா!
11 ஜூலை, 2014 - 14:58 IST
தான் நடிக்கும் படங்களின் எந்த விழாக்களுக்கும் வருவதே இல்லை என்ற கொள்கையை அஜீத்தும், நயன்தாராவும் தீவிரமாக கடைபிடித்து வருகிறார்கள். அதையடுத்து த்ரிஷா காஜல்அகர்வால், ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளும் தாங்கள் நடிக்கும் படங்களின் விழாக்களை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபகாலமாக தாங்கள் இசையமைக்கும் படங்களின் ஆடியோ விழாக்களை எந்த இசையமைப்பாளர்களும் தவிர்ப்பதில்லை. ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ்ஜெயராஜ், டி.இமான், விஜய்ஆண்டனி, அனிருத் என்று அனைவருமே தாங்கள் எந்த ஊரில் இருந்தாலும் தாங்கள் இசையமைத்துள்ள படங்களின் ஆடியோ விழாக்களில் தவறாமல் ஆஜராகி விடுகிறார்கள்.
ஆனால், இதற்கு முன்பெல்லாம் தனது படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அவசியம் வந்த யுவன் ஷங்கர் ராஜாவை சமீபகாலமாக அவர் இசையமைக்கும் பட விழாக்களிலேயே காணமுடிவதில்லை. தங்கமீன்கள், தில்லுமுல்லு, வடகறி உள்ளிட்ட படங்களுக்கு வராதவர், அஜீத் நடித்த ஆரம்பம், கார்த்தி நடித்த பிரியாணி பட விழாக்களுக்கு வந்திருந்தார்.
அதேபோல் நேற்று சென்னையில் நடைபெற்ற திருடன் போலீஸ் பட விழாவுக்கும் வரவில்லை. தற்போது சூர்யா நடித்துள்ள அஞ்சான் படத்தின் இசைக்கோர்ப்பு பணிக்காக அவர் மும்பையில் இருப்பதால் இந்த விழாவுக்கு விழாவின் நாயகனான யுவன் ஷங்கர் ராஜா வரவில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தான் இசையமைத்த படங்களின் ஆடியோ விழாக்களுக்கு சென்னைக்கு வரும்போது, மும்பையில் இருந்து இவரால் சென்னைக்கு வர முடியவில்லையா? என்று விழாவுக்கு வந்தவர்கள் சிலர் முணுமுணுத்தபடி சென்றனர்.