விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், 50 படங்களுக்கு டைரக்டராகவும், சுமார் 400 படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ள மணிவண்ணன், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று(ஜூன் 15ம் தேதி) அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது.
கோவை மாவட்டம் சூலூரில் 1954-ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி பிறந்தவர் மணிவண்ணன். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சினிமா துறைக்கு வந்தார். ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் நடித்தவர், பின்பு பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பாரதிராஜாவின் நிழல்கள், டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தார். தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, வாழ்க்கை சக்கரம், மூன்றாவது கண், தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை உள்ளிட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சமீபத்தில் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., என்ற படத்தை இயக்கினார்.
இயக்குனராக மட்டுமல்லாமல் காமெடி, வில்லன், அப்பா கேரக்டர் உள்ளிட்ட பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, சுந்தர்.சி, சீமான், செல்வபாரதி, இ.ராமதாஸ் ஆகியோர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா மட்டுமல்லாது அரசியல் மற்றும் சமூகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆரம்பத்தில் மதிமுக கட்சியில் இருந்தவர் பின்பு டைரக்டர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்த மணிவண்ணனுக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினார். இரவு மருத்துவர்கள் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். காலையில் வெகுநேரமாகியும் மணிவண்ணன் எழுந்திருக்கவில்லை. சந்தேகமடைந்த அவரது மனைவி அருகில் சென்று பார்த்துள்ளார். ஆனால் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ஜோதி என்ற மகளும், ரகு என்ற மகனும் உள்ளனர்.
மணிவண்ணனின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அவரது உடலுக்கு இளையராஜா, விஜய், பாலா, விக்ரமன், சீமான், சுந்தர்.சி,
அமீர், ராம், டி.பி.கஜேந்திரன், பிரமிடு நடராஜன், பாக்யராஜ், அவரது மகன்
சாந்தனு, கவுண்டமணி, ஷக்தி, பொன்வண்ணன், அவரது மனைவி சரண்யா, மிர்ச்சி
சிவா, செந்தில், குமரிமுத்து, சினேகன், ராமகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ்,
குஷ்பு, இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன் சுப்பையா, சிவக்குமார்,
சரத்குமார், ராதிகா, ரேகா உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்களும், அரசியல்
பிரமுகர்கள் விஜயகாந்த், திருமாவளவன், சுபவீர பாண்டியன் உள்ளிட்ட
ஏராளமானபேர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மணிவண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் விக்ரமன், நான் இங்கு இயக்குனராக இருப்பது காரணமே மணிவண்ணன் தான். அவர் என்னுடைய குருநாதர். நான் சினிமாவிற்கு வந்தபோது முதன்முதலாக உதவி இயக்குனராக சேர்ந்தது மணிவண்ணன் அவர்களிடம் தான். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு தான் என்று கூறினார்.
உடல் தகனம் : பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு போரூரில் உள்ள மின்மயானத்தில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது. ஒரு நல்ல டைரக்டர், நடிகர், சமூக பொறுப்பாளர், தமிழ் உணர்வாளரின் சகாப்தம் முடிந்துவிட்டது. மணிவண்ணனின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் தான்...!!