'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
“பாதாள பைரவி”, “குணசுந்தரி”, “மாயா பஜார்”, “எங்க வீட்டுப் பிள்ளை”, “நம் நாடு” என வெள்ளித்திரையில் சாதனை படைத்து, மின்னிய பல திரைக்காவியங்களைத் தந்த “விஜயா புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் “மிஸ்ஸியம்மா”. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான இந்த “மிஸ்ஸியம்மா” திரைப்படத்தின் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் நடிகை பி பானுமதி.
தமிழில் நாயகனாக நடிகர் ஜெமினிகணேசனும், தெலுங்கில் நாயகனாக நடிகர் என் டி ராமாராவும் நடித்திருந்தனர். “விஜயா புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பில் பி பானுமதி நடித்த “சொர்க்க சீமா” திரைப்படம் பார்த்ததிலிருந்து நான் உங்கள் பரம ரசிகன் என்றும், பி பானுமதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றியும் அவரிடம் சிலாகித்து சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்த நடிகர் ஜெமினிகணேசனுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. திடீரென சில காட்சிகள் மட்டுமே நடித்திருந்த நிலையில், நடிகை பி பானுமதி தொடர்ந்து படத்தில் நடிக்க முடியாமல் போன காரணத்தால் ஜெமினிகணேசனால் அதை அவரிடம் சொல்ல முடியாமலும் போனது.
பின்னர் பி பானுமதி ஏற்று நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தில் நடிகை சாவித்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டு, தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் ஜமுனா, எஸ் வி ரங்காராவ், கே சாரங்கபாணி, கே ஏ தங்கவேலு, நம்பியார், ஏ கருணாநிதி என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருந்த இத்திரைப்படத்தை ஒரு முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக்கியிருந்தார் படத்தின் இயக்குநர் எல் வி பிரசாத்.
ஆரம்பத்தில் இந்தக் கதையை படமாக எடுக்க வேண்டும் என வாங்கி வைத்திருந்தவர் “ஜெமினி ஸ்டூடியோ” அதிபர் எஸ் எஸ் வாசன். இது பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லாததால் கதையை “விஜயா புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பாளரான பி நாகிரெட்டியிடம் கொடுத்துவிட்டார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்ததைக் கண்ட ஏ வி எம் ஸ்டூடியோ அதிபர் ஏ வி மெய்யப்ப செட்டியார், இந்த ப்ரூவ்ட் சப்ஜெக்ட்டை நம்பிக்கையுடன் வாங்கி, “மிஸ் மேரி” என்ற பெயரில் ஹிந்தியில் தயாரித்திருந்தார். ஹிந்தியிலும் நடிகர் ஜெமினிகணேசனே நாயகனாக நடித்திருந்தார். நாயகியாக நடிகை மீனாகுமாரி நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முத்தான வெற்றியை பதிவு செய்ய தவறவில்லை இந்த “மிஸ்ஸியம்மா” திரைப்படம்.