Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உடல் தகனம்! ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி!!

25 மே, 2013 - 16:40 IST
எழுத்தின் அளவு:

 உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் காலமான பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன்(91 வயது) உடல் தகனம் செய்யப்பட்டது. டி.எம்.சவுந்தர்ராஜன், 1922, மார்ச், 24ல், மதுரையில் பிறந்தார்.சிறுவயதில் இருந்தே, இசை மீது அதிக நாட்டம் கொண்ட இவர், பிரபல வித்துவான் பூச்சி சீனிவாச அய்யங்காரின் மருமகன், காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம், முறையாக இசை பயின்றார். இசைப் பயிற்சிக்கு பின், பல்வேறு கச்சேரிகளில் பாடினார்.

கடந்த, 1946 ஆண்டு வெளிவந்த, "கிருஷ்ண விஜயம் என்ற படத்தில், "ராதே என்னை விட்டு ஓடாதே... என்பதே, திரையுலகில் அவர் பாடிய, முதல் பாடல். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், 10 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், சிவகுமார் போன்ற மூத்த தலைமுறை நடிகர்களுக்கும், ரஜினி, கமல், போன்ற இளைய தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் பாடியுள்ளார்.

கதாநாயகர்களுக்கு தகுந்தாற் போல் பாடியதால், நடிகர்களே நேரடியாக பாடுவது போல், உணர வைப்பார் என, போற்றப்பட்டார். "இசை சக்கரவர்த்தி "ஏழிசை மன்னர் "ஞானகலா பாரதி போன்ற விருதுகளை பெற்றுள்ளார். கடந்த, 2003ம் ஆண்டு, இவருடைய கலை சேவையை பாராட்டி, மத்திய அரசு, "பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

கடந்த, 10 நாட்களுக்கு முன், உடல் நலம் சரியில்லாமல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டி.எம்.எஸ்., கடந்த, 19ம் தேதி, வீட்டிற்கு திரும்பினார். பின், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று(மே 25ம் தேதி) உடல்நிலை மோசமானதால், காலமானார். இவருக்கு, சுமித்ரா என்ற மனைவியும், மல்லிகா என்ற மகளும், பால்ராஜ், செல்வகுமார் ஆகிய மகன்களும் உள்ளனர்.

கண்ணீர் அஞ்சலி: சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, சிவக்குமார், விஜயகாந்த், டி.ராஜேந்திரன், பாக்யராஜ், வடிவேலு, ராஜேஷ், மனோ, பி.சுசீலா, எம்.எஸ்.பாஸ்கர், சங்கர் கணேஷ், வாணி ஜெயராம், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல திரையுலகினரும், அழகிரி, ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

உடல் தகனம் :
திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய பின்னர் டி.எம்.சவுந்தரராஜனின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது. டி.எம்.எஸ். அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வாழ்க்கை வரலாறு

டி.எம்.சவுந்திரராஜன், 1922, மார்ச் 24ம் தேதி, மதுரையில் பிறந்தார். திரையுலக பின்னணி பாடலில் சிகரம் தொட்ட இவர், பக்திப் பாடலிலும் முத்திரை பதித்தார். 1946ம் ஆண்டு முதல், திரையுலகில், 60 ஆண்டு காலம் பணியாற்றினார். வயது முதிர்வின் காரணமாக ஓய்வெடுத்து வந்தார்.

சிறு வயதில் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றார். பல ஆண்டுகள் கச்சேரியில் பாடியவருக்கு, 1950ம் ஆண்டு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது. சுந்தரராவ் நட்கர்னியின் "கிருஷ்ண விஜயம் படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகதேடி என்ற பாடலை பாடினார். "தேவகி என்ற படத்தில் பாடி, நடிக்கவும் செய்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுக்கு இவர் பாடிய பாடல்கள், அழியாப் புகழ் பெற்றவை. 1950-90 வரை நடித்த முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் குரல் கொடுத்தார். தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும் பாடினார். இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தமிழ் செம்மொழி மாநாட்டு பாடலை பாடினார். இந்தியாவின் முன்னணி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப் பாடல்களையும் பாடினார். மத்திய அரசு இவருக்கு 2003ம் ஆண்டு "பத்ம ஸ்ரீ விருதளித்து கவுரவித்தது. தமிழக அரசின் "கலைமாமணி உட்பட பல விருதுகளை பெற்றார்.

பட்டங்கள் : இவரது திறமையை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் இவருக்கு ஏராளமான பட்டங்களை வழங்கின. பாடகர் திலகம், சிம்மக் குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், எழிலிசை மன்னர், குரல் அரசர் போன்றவை இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள்.


முதல்வர் ஜெயலலிதா இரங்கல்: ""தமிழக மக்களை தனது, சிம்மக் குரலால் கவர்ந்தவர் டி.எம்.எஸ்., என, முதல்வர் ஜெயலலிதா, டி.எம்.சவுந்திரராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை: "ராதே என்னை விட்டு போகதடி என்ற பாடலின் மூலம், தமிழ் திரையுலகில், அடியெடுத்து வைத்த டி.எம்.சவுந்திரராஜன், ரசிகர்களை வசிய வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ள சவுந்திரராஜன், தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் சில பாடல்களை பாடியுள்ளார்.

முருக பெருமான் மீதான, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை, சுடர்மிகு வடிவேலா போன்ற பல பாடல்களுக்கு, தானே இசையமைத்து, உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில், நீங்கா இடம் பிடித்தர்.

"அன்பை தேடி என்ற திரைப்படத்தில், "சத்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் என்றும் துவங்கும் பாடலிலும், "சூரிய காந்தி என்ற படத்தில், "ஓ... மேரி தில் ரூபா என்று துவங்கும் பாடலிலும், டி.எம்.எஸ்., உடன் இணைந்து, நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். தமிழக மக்களை தனது, சிம்மக் குரலால் கவர்ந்த டி.எம்.எஸ்., உடல் நலக் குறைவால், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து, ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். டி.எம்.எஸ்., மறைவு தமிழ் திரைப்பட துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. சவுந்திரராஜனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி: தமிழ் சினிமாவில், இரு துருவங்களாக விளங்கிய, எம்.ஜி.ஆர்., - சிவாஜி ஆகியோருக்கு, டி.எம்.எஸ்., குரல் பொருந்தியதைப் போல், வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தியதில்லை. இனிய குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, நடிகருக்கு ஏற்றாற்போல் குரலை மாற்றிப் பாடும் தன்மை ஆகியவை, அவருக்கு புகழை பெற்றுத் தந்தன. அவர் பாடிய, "சிந்தனை செய் மனமே, நான் பெற்ற செல்வம் முதலிய பாடல்கள், மறக்க முடியாதவை. டி.எம்.சவுந்தரராஜன் மறைந்த செய்தி கேட்டு, மிகவும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தாருக்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:
எம்.ஜி.ஆர்., - சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், எஸ்.எஸ். ஆர்., ரஜினி, கமல் என, அனைத்து பிரபலங்களுக்கும் பாடி, சரித்திரம் படைத்தவர் டி.எம்.எஸ்., நான் நடித்த பல படங்களில், எனக்காகவும் அவர் பாடியுள்ளார். தான் எந்த நடிகருக்காக பாடினாலும், அந்த நடிகரின் முகத்தை, தன் குரலால், ரசிகர்களின் மனத்திரையில் நிற்கவைக்கும் ஆற்றல் பெற்றவர். டி.எம்.சவுந்தரராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு, தே.மு.தி.க., சார்பில், ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவர்னர் ரோசையா: டி.எம்.சவுந்தரராஜனின் உணர்ச்சிபூர்வமான பக்தி பாடல்கள், நம்மை இறைநிலைக்கு கொண்டு செல்பவை. அவரது மறைவு, தமிழ் திரை துறை மற்றும் தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் ; என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம் தலைப்பில் உள்ள இந்த இரண்டு வரிகளே, டி.எம்.எஸ்., என தமிழ் இசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட டி.எம்.சவுந்தரராஜனின் திறமையை பறைசாற்றும். தமிழ் திரை இசை உலகில் இவர் ஏற்படுத்திய தாக்கம்; அவரது ஆண்மை குரலின் வலிமை; அது தந்த சுகந்தம்; அது ஏற்படுத்திய ஆனந்தம்... தனி சகாப்தம் என்றே சொல்ல வேண்டும். இவரது குரலில் காதல் கசிந்தது; சோகம் இழைந்தது; கோபம் குமுறியது; விரக்தி வெளிப்பட்டது; அன்பு குழைந்தது. ஆக, அனைத்து நவசரசங்களையும் வெளிப்படுத்திய பாடகர், இவர் ஒருவர் தான்.

மதுரையும் - டி.எம்.எஸ்ஸூம்

மதுரை : மதுரையில் பிறந்தவர் டி.எம்.சவுந்திரராஜன். அவரையும், மதுரையையும் பிரிக்க முடியாது. பின்னணி பாடகருக்கு, முதல்முறையாக ரசிகர் நற்பணி மன்றம் அமைத்து மதுரையில் தான். அதுவும் டி.எம்.எஸ்.,சிற்கு தான்! மதுரை தெற்குமாசிவீதி தெற்குகிருஷ்ணன் கோவிலை சேர்ந்த மீனாட்சி அய்யங்கார் - வெங்கிட அம்மாள் தம்பதிக்கு டி.எம்.சவுந்திரராஜன், பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி பாடல்களை பாடும் திறன் பெற்றார். மகனின் இசை ஞானத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த மீனாட்சி அய்யங்கார், இசை ஆர்வத்திற்கு அச்சாரம் போட்டார். சிறு வயதில் கோயில்கள், விழாக்களில் குரல் கொடுத்து வந்த டி.எம்.எஸ்., முதல் முறையாக 1946ல் வெளியான "கிருஷ்ண விஜயம் என்ற சினிமாவில், ""ராதை என்னை விட்டு ஓடாதடி, என்ற பாடலை பாடி ரசிகர்களின் உள்ளங்களை பரவசப்படுத்தினார். முதல் பாடலே சர்வதேச அளவில் பேச வைத்தது. அடுத்தடுத்து டி.எம்.எஸ்., பாடிய 15 ஆயிரம் பாடல்கள், இசை எனும் இமயமலைக்கு அதிபதியாக்கியது.

சென்னையில் வசித்து வந்தாலும். அவர், அடிக்கடி மதுரைக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டார். மதுரை நரசிம்மபுரத்தில் முதல்முறையாக 1980ல் "அகில இந்திய டி.எம்.எஸ்., தலைமை நற்பணி மன்றம் ஏற்படுத்தப்பட்டது. பின், இதே பகுதியில் 1986ல் "மதுரை நரசிம்மபுரம் பத்மஸ்ரீ டாக்டர் டி.எம்.எஸ். ரசிகர் மன்றம் உதயமானது. இச்சங்களின் தலைவர் எம்.பி.பாலன் கூறுகையில், ""பின்னணி பாடருக்கு முதல்முதலில் ரசிகர் நற்பணி மன்றம் வைத்தது நாங்கள் தான். இம்மன்றங்கள் மூலம் ஆண்டு தோறும் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறோம். டி.எம்.எஸ்ஸின் 91வது பிறந்த நாள் விழாவை மதுரையில் நடத்த இருந்தோம். அவர், உடல் நிலை சரியில்லாததால் முடியாமல் போனது, என்றார்.

சவுராஷ்டிரா பள்ளியில் "வாக்கிங் : தனலட்சுமி, சீனிவாசனை அடுத்து டி.எம்.எஸ்., பிறந்தார். இவரது இளைய சகோதரர் கிருஷ்ணமூர்த்தி, உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். மதுரையில் டி.எம்.எஸ்., இருக்கும்போது சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஏற்பாட்டில், கருணாநிதி தலைமையில், 2008ல் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சீனிவாசனின் பேரன் டி.எஸ்.ஆர்.மணிகண்டன், ""கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற தாத்தாவின் பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என தான் சொல்வேன். எங்கள் பரம்பரையில் மூத்த அவர் இறந்து விட்ட செய்தியை கேட்டதும் துவண்டு விட்டோம். எனினும், அவரது குரல் வாழ்ந்து கொண்டிருக்கிறது, என்றார்.

டி.எம்.எஸ்ஸின் கடைசி நிகழ்ச்சி ; டி.எம்.சவுந்திரராஜன் - சுமித்ரா தம்பதிக்கு டி.எம்.எஸ்.பால்ராஜ், டி.எம்.எஸ். செல்வக்குமார் என்ற மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். தந்தை உயிருடன் இருக்கும்போதே மகன் செந்தூரனுக்கு திருமணம் செய்ய வேண்டும், என பால்ராஜ் தீர்மானித்தார். இந்நிலையில் டி.எம்.எஸ்ஸூக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். சற்று உடல் நலம் தேறிய அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் செந்தூரான், விஜயலட்சுமி திருமணம் மே 22ல் நடந்தது. அதை டி.எம்.எஸ்., முன்நின்று நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

டி.எம்.எஸ் - சங்கீத மும்மூர்த்திகள் ; "சங்கீத மும்மூர்த்திகள் என தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்ஷிதர், ஷியாம சாஸ்திரிகள் ஆகியோர் அழைக்கப்படுவர். இவர்களின் பெயரின் ஆங்கில முதல்எழுத்து "டி "எம் "எஸ் என வரும். ""சங்கீத மும்மூர்த்திகளின் பெயர்களை எனது இன்ஷியலில் பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம், என டி.எம்.எஸ்., அடிக்கடி பெருமையாக கூறுவார்.

சவுராஷ்டிரா மொழியில் கடைசி பாடல் ; "வாலிபர்கள் சுற்றிய உலகம் என்ற சினிமா 2005ல் வெளியானது. இப்படத்தில் டி.எம்.சவுந்திரராஜனும், பி.சுசிலாவும் இணைந்து பாடினர். அதன் பின் சினிமாவில் டி.எம்.எஸ்., பாடவில்லை. எனினும், சவுராஷ்டிரா மொழியில் "கெட்டி விடோ (நிச்சயதார்த்தம்) எனும் தலைப்பில் ரசிகர் மன்றத் தலைவர் எம்.பி.பாலன் முயற்சியில் எடுக்கப்பட்ட படத்தில் டி.எம்.எஸ்., சவுராஷ்டிரா மொழியில் பாடினார். இதுவே, அவர் பாடிய கடைசிப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

காலத்தால் அழியாத டி.எம்.எஸ். அவர்களின் பாடல்கள் சில இதோ...

01. நான் ஆணையிட்டால்... (எங்க வீட்டு பிள்ளை)

02. ஆண்டவன் படச்சான்... (நிச்சய தாம்பூலம்)

03. ஆறு மனமே ஆறு... (ஆண்டவன் கட்டளை)

04. அச்சம் என்பது மட‌மையடா... (மன்னாதி மன்னன்)

05. அதோ அந்த பறவை போல... (ஆயிரத்தில் ஒருவன்)

06. அமைதியான நதியினிலே... (ஆண்டன் கட்டளை)

07. அன்பே வா அன்பே வா... (அன்பே வா)

08. அன்று வந்ததும் இதே நிலா... (பெரிய இடத்து பெண்)

09. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே... (உயர்ந்த மனிதன்)

10. அழகிய தமிழ் மகள்... (ரிக்ஷாக்காரன்)

11. சின்ன பயளே சின்ன பயளே... (அரசிளங்குமரி)

12. தெய்‌வமே தெய்வமே... (தெய்வமகன்)

13. ஏன் பிறந்தாய் மகனே... (பாகப்பிரிவினை)

14. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... (பணத்தோட்டம்)

15. எங்கே நிம்மதி... (புதிய பறவை)

16. இந்த புன்னகை என்ன விலை... (தெய்வத்தாய்)

17. இரண்டு மனம் வேண்டும்... (வசந்த மாளிகை)

18. இரவினில் ஆட்டம்... (நவராத்திரி)

19. காது கொடுத்து கேட்டேன்... (காவல்க்காரன்)

20. கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்... (வானம்பாடி)

21. கடவுள் ஏன் கல்லானார்... என் அண்ணன்)

22. கண் போன போக்கிலே... (பணம் படைத்தவன்)

23. கண்ணை நம்பாதே... (நினைத்ததை முடிப்பவன்)

24. காகிதத்தில் கப்பல் செய்து... (அன்புக்கரங்கள்)

25. மலர்களை போல் தங்கை... (பாசமலர்)

26. மலர்ந்து மலராத... (பாசமலர்)

27. நாளை நமதே... (நாளை நமதே)

28. நான் பேச நினைப்பதெல்லாம்... (பாலும் பழமும்)

29. நல்லவன் எனக்கு நானே நல்லவன்... (படித்தால் மட்டும் போதுமா)

30. நிலவை பார்த்து வானம் சொன்னது... (சவாலே சமாளி)

31. நிலவு ஒரு (உலகம் சுற்றும் வாலிபன்)

32. ஒளிமயமான எதிர்காலம்... (பச்சை விளக்கு)

33. ஓடும் மேங்களே... (ஆயிரத்தில் ஒருவன்)

34. ஒரு பெண்ணை பார்த்து... (தெய்வத்தாய்)

35. பால் இருக்கு பழம் இருக்கு... (பாவமன்னிப்பு)

36. பாரப்பா பழனியப்பா... (பெரியிடத்து பெண்)

37. பார் மகளே பார்... (பார் மகளே பார்)

38. பட்டிக்காடா பட்டண‌மா... (மாட்டுக்கார வேலன்)

39. பேசுவது கிளியா... (பணத்தோட்டம்)

40. பொன் எழில் பூத்தது புது வானில்... (படித்தால் மட்டும் போதுமா)

41. போனால் போகட்டும் போடா... (பாலும் பழமும்)

42. பூ மழை தூவி... (நினைத்ததை முடிப்பவன்)

43. போயும் போயும் மனிதனுக்கு... (தாயை காத்த தனயன்)

44. ராஜாவின் பார்வை... (அன்பே வா)

45. சட்டி சுட்டதாடா... (ஆலயமணி)

46. சிலர் சிரிப்பார்... (பாவ மன்னிப்பு)

47. சொல்லாதே யாரும் கேட்டால்... (சொர்க்கம்)

48. சோதனை மேல் சோதனை... (தங்கப்பதக்கம்)

49. தாய் மேல் ஆணை... (நான் ஆணையிட்டால்)

50. தம்பிக்கு ஒரு பாட்டு... (நான் ஏன் பிறந்தேன்)

51. கரைமேல் பிறக்க வைத்தாய்... (படகோட்டி)

52. தூங்காதே தம்பி தூங்காதே... (நாடோடி மன்னன்)

53. உலகம் பிறந்தது எனக்காக... (பாசம்)

54. உழைக்கும் கைகளே... (தனிப்பிறவி)

55. உன் கண்ணில் நீர் வழிந்தால்... (வியட்நாம் வீடு)

56. உன்னை பார்த்து இந்த உலகம்... (அடிமைப்பெண்)

57. வாழ்ந்து பார்க்க வேண்டும்... (சாந்தி)

58. யாரது யாரது தங்கமா... (என் கடமை)

59. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்... (மலைக்கள்ளன்)

60. ‌ஹலோ ஹலோ சுகமா... (என் கடமை)

61. அவள் பறந்து போனாளே... (பார் மகளே பார்)

62. செல்லக்கிளிகளாம்... (எங்க மாமா)

63. தேவனே என்னை பாருங்கள்... (ஞான ஒளி)

64. ஐம்பதிலும் ஆசை வரும்... (ரிஷிமூலம்)

65. அண்ணன் என்னடா... (பழனி)

66. அவள் பறந்து போனாலே... (பார் மகளே பார்)

67. ஒரு பக்கம் பாக்குற...  (மாட்டுக்கார வேலன்)

68. தர்மம் தலைகாக்கும்... (தர்மம் தலைகாக்கும்)

69. என்னை யாரென்று... (பாலும் பழமும்)

70. இப்படித்தான் இருக்க வேண்டும்.. (விவசாயி)

71. கடலோரம் வாங்கிய காற்று... (ரிக்ஷாக்காரன்)

72. கடவுள் செய்த... (நாடோடி)

73. காதல் ராஜ்ஜியம்... (மன்னவன் வந்தான்டி)

74. கட்டொடு குழலோடு ஆட... (பெரிய இடத்து பெண்)

75. காவேரி கரையிருக்கு... (தாயை காத்த தனயன்)

76. அவளுக்கு என்ன... (சர்வர் சுந்தரம்)

77. கேளம்மா சின்னம்மா... (கன்னித்தாய்)

78. குறுக்கு வழியில்... (மகாதேவி)

79. மன்னிக்க தெரியலையா... (தேடிவந்த மாப்பிள்ளை)

80. மாதவி பொன்... (இரு மலர்கள்)

81. மன்னிக்க வேண்டுகிறேன்... (இரு மலர்கள்)

82. முத்தை திரு... (அருணகிரிநாதர்)

83. நாளொரு மேடை...

84. நான் மலரோடு தனியாக... (இரு வல்லவர்கள்)

85. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்... (அன்பே வா)

86. நேரமிது நேரமிது... (ரிஷிமூலம்)

87. நிலவை பார்த்து வானம் சொன்னது (சவாளே சமாளி)

88. ஒரே பாடல்... (எங்கிருந்தோ வந்தான்)

89. ஒரு தாய்... (பணக்கார குடும்பம்)

90. ஒரு தரம்... (சுமதி என் சுந்தரி)

91. பாட்டுக்கு பாட்டெடுத்து... (படகோட்டி)

92. பாட்டும் நானே பாவமும் நானே... (திருவிளையாடல்)

93. படைத்தானே... (நிச்சய தாம்பூலம்)

94. பாலக்காட்டு பக்கத்திலே... (வியட்நாம் வீடு)

95. பொன்னை விரும்பும்... (ஆலயமணி)

96. செந்தமிழ் பாடும்... (வைர நெஞ்சம்)

97. சிவப்புக் கல்... (எல்லோரும் நல்லவர்களே)

98. தேடினேன் வந்தது... (இதய வீணை)

99. திருடாதே பாப்பா திருடாதே...

100. யாருக்காக யாருக்காக... (வசந்தமாளிகை)

அவரது பக்தி பாடல்கள் சி‌ல...

* அழ‌கென்ற சொல்லுக்கு முருகா...

* உள்ளம் உருகுதய்யா...

* கற்பனை என்றாலும்...

* முருகனை கூப்பிட்டு...

* சொல்லாத நாளில்லை...

* அன்று கேட்பவன்...

* எந்தன் குரலில்...

* கற்பனை என்றாலும்...

* மண்ணாலும் திருச்செந்தூரில்...

* உன்னை பாடும் மொழியின்றி...

* மருதமலைக்கு...

* திருச்செந்தூரின் கடலோரத்தில்...

தமிழ் சினிமாவிற்கு இனி இப்படியொரு பாடகர் கிடைப்பாரா...? என்பது சந்தேகம் தான். டி.எம்.எஸ். அவர்களின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகிற்கும் அவரது ரசிகர்களுக்கும் பேர் இழப்பு தான்...!! டி.எம்.எஸ். நம்மை விட்டு மறைந்தாலும் அவரது சிம்மக்குரல் இந்த உலகம் உள்ள வரை ஒலிக்கும் என்றால் அது மிகையல்ல!!

Advertisement
கருத்துகள் (114) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (114)

Kris Siva - Hong Kong,சீனா
28 மே, 2013 - 08:53 Report Abuse
Kris Siva great loss to Tamil Movie Industry... Rest his soul in peace
Rate this:
Narayanan Krishnamurthy - New Delhi,இந்தியா
27 மே, 2013 - 15:42 Report Abuse
Narayanan Krishnamurthy தமிழனுக்காக இறைவனால் தயாரித்து அனுப்பப்பட்ட சிங்ககுரலோன் TMS
Rate this:
Sivagangai K - puducherry,இந்தியா
27 மே, 2013 - 11:20 Report Abuse
Sivagangai K நான் வளரும்போதிளிருந்தே அவருடைய பாடலையே சுவாசித்து வளர்ந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அவரின் பாடல் எனக்கு உயிர். அவரின் ஆன்மா இறைவனிடம் செல்ல பிரார்த்திப்போம்.
Rate this:
Mani Kandan - madurai,இந்தியா
27 மே, 2013 - 08:29 Report Abuse
Mani Kandan தமிழுக்கு தாயும் தந்தையும் ஆக இருந்த ஆன்மா இறைவனடி சேர்ந்தது
Rate this:
ராம.ராசு - கரூர்,இந்தியா
27 மே, 2013 - 07:43 Report Abuse
ராம.ராசு "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" - திரைப்படத்தில் கதாநாயகனுக்காக மட்டும் இவர் பாடவில்லை. தனக்காக்கவும்தான். தமிழ் உள்ளளவும் டி.எம்.எஸ். என்ற எழுத்துக்கள் நின்று நிலைக்கும்.
Rate this:
மேலும் 109 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in