மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடந்த இருபதாண்டுகளில் அட கடவுளே, கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட 17 மேடை நாடகங்கள், காவியாஞ்சலி உள்ளிட்ட சீரியல்கள், வெள்ளக்காரத்துரை உள்ளிட்ட சினிமாக்களில் திரைக்கதை வசனங்களை எழுதி நாடக, சினிமாத்துறையில் குறிப்பிடத்தக்க வசனகர்த்தாவாக திகழ்பவர் அரவிந்தன்.
தற்போது சந்தானம் நடிக்கும் படம் உள்ளிட்ட பல சினிமாக்களுக்கு கதை வசனம் எழுதி வருவதுடன், முக்கிய இயக்குனர்களின் கதை விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார். மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸின் சிறந்த கதாசிரியர், நாடக மாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றிருந்தாலும் கூட ஆர்ப்பாட்டம் இல்லாது நாடகங்கள், சினிமாக்களில் கதை வசனங்களை எழுதி தவிர்க்க முடியாதவராக வலம் வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து...
சென்னையிலிருந்து வாலாஜபேட்டை செல்லும் வழியிலுள்ள எழிச்சூர் தான் சொந்த ஊர். சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்து வளர்ந்தேன். சுற்றி தியேட்டர்கள், நாடக சபாக்கள் நிறைந்த பகுதி. அப்பா ஐகோர்ட் பணி என்பதால் நாடகங்கள், சினிமாக்களை காண அழைப்பு வரும். அவருடன் நாடகங்களை காண செல்வேன். 1970 காலகட்டத்தில் ஆர்.எஸ்.மனோகர் நாடகங்களை காணும் வாய்ப்பு ஏற்பட்டது. பிறகு எஸ்.வி.சேகர், கத்தாடி ராமமூர்த்தி, ஒய்.ஜி. மகேந்திராவின் பல நாடகங்களை பல முறை பார்த்தேன். இதனால் சிறிய வயதில் நாடக கலை மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது.
பட்டம் முடித்த கையுடன் அரசு பணி கிடைத்தாலும் கூட அதில் மனம் லயிக்கவில்லை. நாடகங்களை காண சென்ற வேளையில் எழுத்தாளர் காரைக்குடி நாராயணனின் அறிமுகம் கிடைத்தது. அவர் எழுதி மனோரமா, கே.ஆர்.விஜயா நடித்த பல நாடகங்களில் அவருடன் இணைந்து பணிபுரிந்தேன். அதில் கிடைத்த பெயரால் நாடகங்களில் உதவி இயக்குனரானேன். அந்த அறிமுகம் சத்ய சாய் கிரியேஷன்ஸ் போன்ற கம்பெனிகளின் நாடகங்களில் பணிபுரியும் வாய்ப்பை தந்தது.
நாடகங்களை காண வந்த சினிமா இயக்குனர்கள் கதை வசனங்களை கேட்டு என்னை விசாரித்தனர். அதன் மூலம் இயக்குனர் டி.பி.கஜேந்திரன் 'சீனா தனா 007' படத்தில் பணிபுரிய அழைத்தார். பிறகு எழில் இயக்கிய வெள்ளக்காரன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் கதை வசனம் எழுத வாய்ப்பு கிட்டியது.
நடிகர் பார்த்திபன் அழைப்பின் பேரில் ஒத்த செருப்பு, இரவின் நிழல் படங்களில் பணி புரிந்தேன். நாடக கலைஞர் ராது குடும்பத்தினர் எனக்கு நாடக மாமணி பட்டத்தை தந்தனர். நாதஸ்வரம் தொடரின் ஆயிரமாவது எபிசோடு லைவ்க்காக கின்னஸ் விருதும் கிடைத்தது. தமிழக அரசும் பொம்மலாட்டம் என்ற சீரியலுக்காக சிறந்த கதாசிரியர் விருது வழங்கியது.இந்த விருதுகள் தந்த ஊக்கம் பல நாடகங்களை எழுதத் துாண்டி வருகிறது. மக்களை சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்ற வேகத்தையும் தந்துள்ளது. நாடகம், சினிமாத்துறையில் தவிர்க்க முடியாத வசன கர்த்தாவாக மக்களை மகிழ்விக்கணும் என்பது தான் என் விருப்பம் என்றார்.