திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்க, தெலுங்கு இசையமைப்பாளரான தமன் இசையமைக்க, தமிழ் நடிகரான விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'வாரிசு' படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரிசுடு' வெளியீட்டிற்கு தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு பொங்கல் மற்றும் தசரா நாட்களில் தெலுங்கு சினிமாவில் நேரடிப் படங்களின் வெளியீட்டிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அப்போது தெரிவித்திருந்தார். 2019ம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திரா, தெலங்கானாவில் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அப்போது தில் ராஜு தயாரித்திருந்த 'எப் 2' படம், பாலகிருஷ்ணா நடித்த 'என்டிஆர் கதாநாயகடு', ராம் சரண் தேஜா நடித்த 'வினய விதேய ராமா' ஆகிய தெலுங்குப் படங்களும் வெளியாகின.
ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படம் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியானால் தில் ராஜு தயாரித்த 'எப் 2' படத்திற்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருந்தது. பாலகிருஷ்ணா, ராம் சரண் படங்களுக்கு எளிதில் அதிக தியேட்டர்கள் கிடைத்தது. ஆனால், 'எப் 2' படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. எனவே, 'பேட்ட' படத்தை டப்பிங் செய்து வெளியிடுவதில் மறைமுகமாக தனது எதிர்ப்பைக் காட்டினார் தில் ராஜு. பொங்கல், தசரா நாட்களில் நேரடித் தெலுங்குப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசியிருந்தார். அப்போதே இது குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் தில் ராஜு தயாரித்து விஜய் நடித்துள்ள தமிழ்ப் படமான 'வாரிசு' படத்தை தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். 2023 பொங்கலுக்கு தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடித்துள்ள 'வீர சிம்மா ரெட்டி' ஆகிய நேரடி தெலுங்குப் படங்களும் வெளியாக உள்ளன.
தெலுங்கு சினிமாவின் முக்கிய வெளியீட்டு ஏரியாக்களான நிஜாம் மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய ஏரியாக்களில் தில் ராஜுவின் தனிப்பட்ட அதிகாரம் நிறைய உண்டு. எனவே, அந்த ஏரியாக்களில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களை அதிக அளவில் வெளியிட வாய்ப்பாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் 2019ல் தில் ராஜு பேசியதை தற்போது ஞாபகப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நேரடி தெலுங்குப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் காரணமாக 'வாரிசு' படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர், தெலுங்கு இயக்குனர், தெலுங்கு இசையமைப்பாளர் என்று கூட தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பார்க்கவில்லை. 'வாரிசு' படம் ஒரு தெலுங்கு டப்பிங் படம்தான் என்ற விதத்தில் மறைமுகமாகச் சொல்லும் விதமாக அந்த அறிக்கை உள்ளது. மேலும், அஜித் நடித்துள்ள 'துணிவு' படமும் தெலுங்கில் வெளியாவதற்கு இதனால் சிக்கல் உருவாகியுள்ளது.
இந்த விவகாரம் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் கடந்த சில வருடங்களில் தெலுங்கு டப்பிங் திரைப்படங்களான 'பாகுபலி 2, புஷ்பா, ஆர்ஆர்ஆர்,' ஆகிய படங்கள் தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக வெளியாகி அதிக வசூலையும் பெற்றது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பொங்கலுக்கு தங்கள் படங்கள் வெளியாக உள்ள நிலையில் சீனியர் ஹீரோக்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இது குறித்து என்ன சொல்லப் போகிறார்கள் என்பது குறித்து தெலுங்குத் திரையுலகினரும், தமிழ்த் திரையுலகினரும் காத்திருக்கிறார்கள்.