Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குழந்தைகள் விவகாரம் : சிக்கலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்?

11 அக், 2022 - 10:24 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-shivan-in-trouble

சென்னை : நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்ற விவகாரத்தில், சட்ட விதிகளையும் மீறியிருந்தால், நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ''உரிய விசாரணை நடத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ்வரனும், ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்ததோடு, இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். கடந்த ஜூன் 9ல் இவர்களின் திருமணம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நான்கு மாதத்தில், அதே 9ம் தேதியில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் அறிவித்தார்.



அதாவது, குழந்தை உருவானதை ஊர்ஜிதப்படுத்திய பிறகே திருமண தேதியை அறிவித்திருக்கின்றனர். மேலும், விக்னேஷ் சிவனின் பதிவில், 'குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஆகிவிட்டோம்' என்று மட்டுமே கூறியுள்ளார். ஆனால், குழந்தையை எப்படி பெற்றனர் என்ற விவரத்தை வெளியிடவில்லை.

வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றிருப்பர் எனக் கருதி, அவர்களுக்கு வாழ்த்து கூறப்பட்டு வருகிறது. இதற்கு முன் பாலிவுட் திரையுலகில் அமீர் கான், ப்ரீத்தி ஜிந்தா, ஷாருக் கான், சன்னி லியோன், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுள்ளனர். ஆனாலும், நயனின் வாடகை தாய் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாடகை தாய்மை எப்படி?
ஏதோ ஒரு காரணத்திற்காக கர்ப்பம் ஆக முடியாத, வயிற்றில் குழந்தையை சுமக்க இயலாத அல்லது சுமக்க விரும்பாத ஒரு பெண்ணிற்காக, மற்றொரு பெண் அதை செய்வதே வாடகை தாய்மை. ஒரு பெண்ணின் கருமுட்டையில், அவரது கணவரின் விந்தணு செலுத்தப்படும். பின் அந்த கரு, ஒரு வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தப்பட்டு, குழந்தையை சுமந்து இறுதியில் பெற்றெடுக்க வைப்பர்.



'விசாரணை நடத்தப்படும்'
சென்னையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: நயன்தாரா - விக்னேஷ் சிவன், தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது தொடர்பாக, மருத்துவ ஊரக பணிகள் இயக்குனரம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கருமுட்டை விவகாரம் தொடர்பாக, தற்போது தான், ஒரு வழிகாட்டுதல், முறையாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஜோடி கருமுட்டை செலுத்தி பெற்றனரா என தெரியவில்லை. அதனால், விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதனிடையே, குழந்தைகள் எட்டு மாதத்தில் பிறந்ததாகவும், அவை மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது.



சட்டம் என்ன சொல்கிறது?
* இந்தியா முழுதும் வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறும் விஷயத்தில், ஏராளமான முறைகேடு நடப்பதாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து, 2021ல் மத்திய அரசு, வாடகை தாய் ஒழுங்குபடுத்தும் சட்டத்தை கொண்டு வந்தது. அதில் உள்ள அம்சங்கள் குறித்து, வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கூறியதாவது: முதலில் வாடகை தாய் என்ற சொல் பிரயோகமே தவறு. 'பதிலி தாய்' என்பது தான் சரி.

* புதிய சட்டத்தின் படி, உடல் ரீதியில் குறைபாடு இருந்து குழந்தை பெற முடியாத தம்பதி மட்டுமே, பதிலி தாய் அமர்த்தி, குழந்தை பெற முடியும். அந்த தம்பதி முறையாக திருமணம் செய்து இருக்க வேண்டும்.

* பதிலி தாய் வாயிலாக, ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறி, குழந்தையை தத்தெடுத்திருக்கும் தம்பதியர், பதிலி தாய் அமர்த்தி, அவர் வாயிலாக குழந்தை பெற முடியாது.

* திருமணமாகி ஓராண்டுக்கு நேரடியாக உடல் உறவு கொண்டும், கருத்தரிக்காத நிலையில் இருக்கும் தம்பதி, அதற்கென உள்ள குழுவிடம் விண்ணப்பித்து, கருத்தரிக்க வாயிப்பில்லை என சான்றிதழ் பெற வேண்டும்.

* திருமணமாகி ஓராண்டுக்குள், பதிலி தாய் அமர்த்தி குழந்தை பெற முடியாது. பதிலி தாய் வாயிலாக குழந்தை பெற விரும்பும் தம்பதியரில், ஆண் 26 -- 55 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண் 25 - 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

* பதிலி தாயாக செயல்படும் பெண், தன் ஆயுட் காலத்தில் ஒரு முறை மட்டுமே இதை செய்யலாம். பணம் வாங்கி கொண்டு பதிலி தாயாக செயல்படக் கூடாது. தாமாக முன் வந்து தான், தம்பதியருக்கு உதவ வேண்டும்.

* ஒருவரை பதிலி தாயாக அமர்த்தி கொள்ளும் முன், பதிலி தாயாக செயல்படுவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அதன் பின், எழுத்துப்பூர்வமாக அவரது அனுமதி பெற வேண்டும். பதிலி தாயாக செயல்படுபவருக்கு 35ல் இருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

* பதிலி தாயை தேர்வு செய்த பின், இதற்கென சிறப்பு அனுமதி பெற்ற கருத்தரிப்பு மையங்களின் நேரடி கட்டுப்பாட்டில், அவரை இருக்கச் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அந்த மையம் வாயிலாகவே, பிரசவத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.



* பதிலி தாய் தவறிழைக்கும் பட்சத்தில், அவருக்கு பெரிய அளவில் தண்டனை ஏதும் இல்லை; அவரை பாதிக்கப்பட்டவராக அணுக வேண்டும்.

* பதிலி தாய் சட்டத்தை மீறும் தம்பதிக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். தொடர்ச்சியாக இந்த தவறையே செய்தால், 10 ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

* இந்த விவகாரத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகள் சட்டத்துக்கு புறம்பாக நடந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சட்டம் இப்படி தான் சொல்கிறது.

* நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளி நாட்டில் பதிலி தாய் அமர்த்தி கொண்டிருந்தால், இந்தியாவில் உள்ள பதிலி தாய் முறைப்படுத்தும் சட்டம், அவர்களை கட்டுப்படுத்துமா என தெரியவில்லை. அது குறித்து நீதிமன்றம் தான் முடிவு எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மற்றுமொரு பிரம்மாண்ட படத்தில் பிரபாஸ் ?மற்றுமொரு பிரம்மாண்ட படத்தில் ... காதலில் விழுந்த ராஷ்மிகா, காட்டிக் கொடுத்த கண்ணாடி காதலில் விழுந்த ராஷ்மிகா, காட்டிக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)