மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் ஏற்கெனவே வேல ராமூர்த்தி, பவா செல்லத்துரை, மு.ராமசாமி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் நடித்து வருகிறார்கள். இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் எழுத்தாளரும், வசனகர்த்தாவும், பாடலாசிரியருமான பிருந்தா சாரதி.
லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுமான இவர் அதன் பிறகு தித்திக்குதே, பையா, வேட்டை உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார், பல படங்களில் பாடல் எழுதியுள்ளார். பறவையின் நிழல், ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம். எண்ணும் எழுத்தும் என்கிற கவிதை நூல்களை எழுதியுள்ளார். இந்த நிலையில் தற்போது லிங்குசாமி இயக்கி உள்ள தி வாரியர் படத்தில் டாக்டராக நடித்து நடிகராக அறிமுகமாகி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இயக்குனர் என். லிங்குசாமியின் 'வாரியர்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படம் வரும் வரை அச்செய்தியை வெளிப்படுத்தாமலேயே வைத்திருந்தேன். திரையரங்குகளில் 'வாரியர்' படம் பார்த்த முகநூல் நண்பர்கள் பலரும் வாட்ஸ் ஆப், மெசஞ்சர் மூலம் வாழ்த்துக்களை அனுப்பி வருகின்றனர். அனைவருக்கும் நன்றி.
எனக்குள் ஒரு நடிகனைப் பார்த்த இயக்குனர் நண்பர் லிங்குசாமிக்கு என் பிரத்யேக நன்றி. தயக்கத்துடன்தான் நடிக்கத் துவங்கினேன். நடிகருக்கான திரைத்தோற்றம் நன்றாக இருக்கிறது என்று நாயகன் ராம் கூறியது நம்பிக்கை அளித்தது. வில்லனாக நடித்த ஆதி அவருடன் நடித்த காட்சியில் சில டிப்ஸ்களைக் கொடுத்தார்.
பொதுவாகக் காட்சிகளைப் படமாக்கும் முன் ஒரு வசனகர்த்தாவாக நான் போய் நடிகர்களுக்குக் காட்சிகளை விளக்கி வசன உச்சரிப்பு கூறி பயிற்சி அளிப்பது வழக்கம். ஆனால் நானே ஒரு நடிகனாக கேமரா முன் நின்றதும் வார்த்தைகள் சரளமாக வராமல் தந்தி அடித்தன. இணை, உதவி இயக்குநர்கள் அனைவருமே நண்பர்கள். கிண்டலடித்துக்கொண்டே உற்சாகத்தையும் கொடுத்தார்கள். நண்பரே இயக்குனர் என்பதால் டென்ஷன் ஆகாமல் இருந்தார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடித்தேன்.
முதல் ஷாட் நடித்து முடித்ததும் கட் சொல்லிவிட்டு 'குட்' என்று கைகொடுத்தார் லிங்குசாமி . அது நண்பராகவா? இயக்குனராகவா? என்று தெரியவில்லை. 'உண்மையிலேயே நல்லா பண்றீங்க'... என்றார். நம்பிக்கை வந்தது. இப்படியாக ஒரு நடிகன் எனக்குள் இருந்து பிறந்திருக்கிறான்.
தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 'வணங்கான்' திரைப்படத்திலும், ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் 'பீச்' படத்திலும் நடித்து வருகிறேன். இது ஒரு புதிய பாதை.... புதிய பயணம்... வேறொரு மனிதனாக வாழும் அனுபவம் நன்றாகத்தான் இருக்கிறது. கூடு விட்டுக் கூடு பாயும் அனுபவம் இது.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் ஒரு மருத்துவராக நடித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை ஒரு நாடகமேடை நாம் அதன் பாத்திரங்கள்' என்ற ஷேக்ஸ்பியர் வாசகத்தை இன்று நினைத்துப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.