மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'அண்ணாமலை'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, ரேகா, வைஷ்ணவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம்.
இப்படத்திற்காக முதலில் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் இயக்குனர் வசந்த். ஆனால், திடீரென அவர் மாற்றப்பட்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியது இதுவே முதல் முறை. இந்தப் படத்திற்குப் பிறகும் இக் கூட்டணி இணைந்து 'வீரா, பாட்ஷா' ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தது.
ரஜினிகாந்த் படத்திற்கு தேவா இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டது அப்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் படத்தில் இடம் பெற்ற பாடல்களை சூப்பர் ஹிட்டாகவே கொடுத்தார் தேவா. ''வந்தேன்டா பால்காரன், அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ, வெற்றி நிச்சயம், ஒரு பெண் புறா, றெக்கை கட்டி பறக்குதடி,” என அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. அதற்குப் பிறகு தான் தேவா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.
ஏழை பால்காரரான ரஜினிகாந்த்தும், பணக்கார ஹோட்டல் முதலாளியான சரத்பாபும் சிறு வயது முதலே நண்பர்கள். ரஜினிகாந்திற்குச் சொந்தமான வீட்டை ஏமாற்றி அந்த இடத்தில் ஹோட்டல் ஒன்றைக் கட்டுகிறார் சரத்பாபுவின் அப்பா ராதாரவி. மேலும், ரஜினியும், சரத்தும் பிரிவதற்கான வேலைகளையும் செய்கிறார். நண்பனால் ஏமாற்றப்பட்ட ரஜினி, பின்னர் தனது முயற்சியில் பெரிய ஹோட்டல் முதலாளியாகிறார். அதற்குப் பிறகு அவர்களது குடும்ப வாரிசுகளாலும் மோதல் தொடர்கிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ரஜினிக்குப் பொருத்தமான ஹீரோயிசக் கதை, அம்மா சென்டிமென்ட், நட்பு, காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக இந்தப் படம் வெளிவந்து ரஜினி ரசிகர்களை முழுவதும் திருப்திப்படுத்தியது.
இந்தப் படத்தில்தான் ரஜினிகாந்த் பெயர் வரும் போது 'சூப்பர் ஸ்டார்' என்ற கிராபிக்ஸ் கார்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்று வரையும் தொடர்கிறது.
25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்ட படம். 'பாட்ஷா' படம் வரும் வரை 'அண்ணாமலை' படம்தான் தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்தது.
'பாட்ஷா' படத்திற்குப் பிறகு இன்றும் ரஜினி ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் படமாக 'அண்ணாமலை' படம் இருக்கிறது.
ரஜினி - சுரேஷ் கிருஷ்ணா சந்திப்பு
இதனிடையே அண்ணாமலை படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. அப்போது அண்ணாமலை படம் குறித்த மலரும் நினைவுகளையும் இருவரும் பகிர்ந்து கொண்டனர். ரஜினியை சுரேஷ் கிருஷ்ணா சந்தித்த போட்டோ வைரலாகி, ரசிகர்களும் அண்ணாமலை படத்தை கொண்டாடினர்.