Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

வெள்ளித்திரையின் விடிவெள்ளிகள்! - மகளிர் தின ஸ்பெஷல்

08 மார், 2017 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Women-directors-in-Cinema---Womens-day-special

இன்பத்தை கருவாக்கினால் பெண்... உலகத்தில் மனிதனை உருவாக்கினால் பெண்... விண்ணவருக்கும், மண்ணவருக்கும் விலையற்ற செல்வம் பெண்... என பெண்களை பற்றி கவிஞர்கள் வர்ணிக்காத வார்த்தைகள் கிடையாது. நீரின்றி அமையாது உலகு போன்று பெண்ணின்றும் அமையாது உலகு. இன்று சர்வதேச மகளிர் தினம்... இந்நாளில் திரைத்துறையில் பெண் இயக்குநர்களின் பங்கு எப்படி இருக்கிறது என்பதை பற்றிய சிறப்பு கட்டுரை இது...
அன்று முதல் இன்று வரை பெண் இயக்குநர்கள்


1936ஆம் ஆண்டில், டி.பி.ராஜலட்சுமி என்பவர் முதல் தமிழ் படத்தை இயக்கிய பிறகு, தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளி உருவானது. அதன் பின்னர் நடிகை பானுமதி, சாவித்ரி ஆகியோரும் தமிழ், தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களை இயக்கினார்கள். அதன் பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு பெண் இயக்குநர்கள் இல்லாத காலகட்டத்தில் தான் நடிகை சுஹாசினி இந்திரா திரைப்படத்தை இயக்கினார்.


2002ஆம் ஆண்டு மித்ர மை பிரண்ட் என்னும் ஆங்கில படத்தின் மூலம் நடிகை ரேவதி தனது இயக்குநர் பயணத்தை தொடங்கி, முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதில் பணியாற்றிய பிரியா, கண்ட நாள் முதல், 'கண்ணா மூச்சி ஏனடா' படங்களையும், சுதா கொங்கரா பிரசாத், 'துரோகி', 'இறுதிச்சுற்று' ஆகிய படங்களையும் இயக்கி முத்திரை பதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீபிரியா, நந்தினி, லட்சுமி ராமகிருஷ்ணன், மதுமிதா, கீது மோகன் தாஸ், கிருத்திகா உதயநிதி, ஐஷ்வர்யா தனுஷ், பூவரசம் பூப்பி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், அஞ்சனா, கீதாஞ்சலி செல்வராகவன் என திறமையான பெண் இயக்குநர்கள் தற்போது தமிழ் சினிமாவிற்கு வரத்தொடங்கியுள்ளனர்.


புதிய கோணங்களில் படைப்புகளை வழங்கும் பெண் இயக்குநர்கள்


கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது தமிழ் சினிமாவின் கதை சொல்லல், மேக்கிங், எடுத்துக் கொள்ளும் கதைக்களம், எளிய மனிதர்களை பிரதிபலித்தல், யதார்த்த படைப்புகள் என மாறியுள்ள நிலையில், பெண் இயக்குநர்களின் சினிமாக்கள் மேலும் தனித்துவத்துடன் வர தொடங்கியுள்ளன. லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆரோகணம், அம்மணி போன்ற திரைப்படங்கள் பெண்களின் தெரியாத பக்கங்களை பதிவு செய்வது போல் உருவாக்கப்பட்டிருந்தன.


காதல், புரிதல் குறித்த பக்கங்களை பதிவு செய்த கண்ட நாள் முதல், பெண்ணின் உணர்வுகளை பதிவு செய்யும் வல்லமை தாராயோ, குழந்தைகளின் பால்ய கால மகிழ்ச்சிகளை பதிவு செய்யும் பூவரசம் பீப்பீ என்று புதிய கோணங்களில் படைப்புகளை பெண் இயக்குநர்கள் வழங்க தொடங்கியுள்ளனர். ஆண்கள் எடுக்க தயங்கும் சப்ஜெக்ட்களைக்கூட பெண் இயக்குநர்கள் எடுத்து அதில் வெற்றியும் பெறுகின்றனர்.


ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால் நடித்த துரோகி திரைப்படத்தை சுதா இயக்கினார். நல்ல விமர்சனத்தை துரோகி திரைப்படம் பெற்றது. அதை தொடர்ந்து சுதா இயக்கிய இறுதிச்சுற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. திரில்லர் பாணியில் அஞ்சனா இயக்கிய வெப்பம் திரைப்படமும் பாஸிடிவ் விமர்சனங்களை பெற்றது. இப்படி புதிய கோணத்தில் திரைப்படங்களை பெண் இயக்குநர்கள் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவை கடந்து மலையாளம், இந்தி திரைத்துறைகளிலும் கூட தரமான திரைப்படங்களை தரும் பெண் இயக்குநர்கள், உலக சினிமாவிற்கே சவால் விடும் வகையில் தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.


பெண் இயக்குநர்களின் முன் உள்ள சவால்கள்


எல்லாத் துறைகளுமே சவாலானது தான் என்றாலும் சினிமா துறையில் சவால்கள் பல வடிவங்களில் வருகின்றன. முதலாவதாக சினிமாவில் மிகப்பெரிய குழுவை கையாள வேண்டிய பொறுப்பு இயக்குநருக்கு உள்ளது. 'கேப்டன் ஆப் தி ஷிப்' எனப்படும் இயக்குநர் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டும். இப்படி அனைவரையும் ஒரு சேர வேலை வாங்குவது மிகப்பெரிய சவால் தான். காரணம் பெண் என்பதால் குழுவில் உள்ள மற்றவர்கள் அலட்சியப்படுத்த நேரிடும். அதனால் இந்த சவாலை கடந்துவருவது அவசியம்.


அடுத்ததாக பாலியல் சார்ந்த அத்துமீறல்களை, பெண் என்பதால் மற்றவர்களின் வித்தியாசமான அணுகுமுறைகளை எதிர்கொள்வது சவாலான ஒன்று. சினிமாவில் நேரம் பார்த்து வேலை செய்ய முடியாது. எப்போது வேலை இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு ஏற்றாற் போல் பெர்சனல் வாழ்க்கையை பேலன்ஸ் செய்யவேண்டியது முக்கியமானது.தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி ஓகே வாங்குவது என்பதே ஒரு கலை தான். அதிலும் பெண் இயக்குநர்களின் படம் என்றால் கமர்ஷியலாக இருக்குமா, வசூல் கொடுக்குமா என்ற பார்வையில் கதை கேட்பார்கள் என்பதால், தயாரிப்பாளர்களை தேடும் பணியும் பெரும் சவாலாக அமைகிறது. அதன் பின்னர் படப்பிடிப்பு தளத்தில், படத்தின் மேக்கிங்கில் என்று பல்வேறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கதையில் சமரசம் செய்ய வேண்டிய சூழல், உடன் வேலை பார்க்கும் சக கலைஞர்களின் விமர்சனம், இலவச அறிவுரை என்று ஒவ்வொரு தருணமும் சவாலானது தான்.


பாலிவுட் - கோலிவுட் சினிமா


சமீபகாலமாக பாலிவுட் சினிமாவில் பெண் இயக்குனர்களின் பங்களிப்பு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. முதல் பெண் இயக்குநர் பாத்திமா பேகமில் தொடங்கி, அபர்ணா சென், தனுஜா சந்தரா, தீபா மேத்தா, மீரா நாயர், கிரண் ராவ், பாரா கான், கௌரி ஷிண்டே, சோனாலி போஸ், சோயா அக்தர் என்று பட்டியல் நீளுகிறது. கோலிவுட் உடன் ஒப்பிடும் போது பாலிவுட்டில் லைப் ஸ்டைல் திரைப்படங்கள் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படங்களும், உறவுச் சிக்கலை எடுத்துரைக்கும் படங்களும் வந்து கொண்டு இருக்கின்றன.


தென் இந்திய திரைத்துறையை ஒப்பிடும் போது, பாலிவுட் சினிமா முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தை கொண்டது. பெண் படைப்பாளிகளின் திறமையை வெளிக்கொணரும் தளங்கள் இந்தி சினிமாவில் அதிகம். தீபா மேத்தாவின் வாட்டர், மீரா நாயரின் மான்சூன் வெட்டிங், சலாம் பாம்பே, அனுஷா ரிஸ்வி இயக்கிய பீப்லி லைவ், கிரண் ராவ் இயக்கிய தோபி கட், கீது மோகன் தாஸின் லையர்ஸ் டைஸ், கௌரி ஷிண்டேவின் இங்லிஷ் விங்லிஷ்... இப்படி பல்வேறு கதைக்களத்தில் தரமான படைப்புகள் பாலிவுட்டில் சாத்தியப்படுகிறது.


பின்புலம் உடைய பெண் இயக்குநர்கள் பாலிவுட்டில் இருக்கிறார்கள் என்றாலும் தங்களுடைய நிலையான படைப்புகளால் தான அவர்களால் நிலை பெற முடிகிறது. கோலிவுட்டிலும் அதுபோன்ற தரமான சினிமாக்களை இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம். அதற்கான தளத்தையும், வாய்ப்புகளையும் பெண் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களது படைப்புகள் மூலம் மாற்றத்தை விதைக்க வேண்டும்.


வருங்கால சினிமாவில் பெண் இயக்குநர்கள்


சமகாலத்தில் இந்திய சினிமாவின் பயணம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. வித்தியாசமான கதை கருக்களுடன் யதார்த்த படைப்புகள் களம்காண தொடங்கியிருக்கின்றன. ஆரம்ப காலத்துடன் ஒப்பிடும் போது ரொம்பவே மாறியிருக்கும் சினிமா துறையில், பெண்களுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கமர்ஷியல் படங்களை விடுத்து யதார்த்த சினிமாவை மக்கள் விரும்பிப் பார்க்க தொடங்கியுள்ள இந்த காலத்தில், வாழ்வியல் சார்ந்து திரைப்படங்களை இயக்கும் பெண் இயக்குநர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறை என்ற தயக்கத்தை விடுத்து, முழு ஈடுபாடு உள்ள பெண்கள் களத்தில் இறங்கினால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.


நர்மதா பத்மநாபன்


கனவுகள் எல்லோருக்கும் உண்டு. பெருங்கனவுகள் அரிதானவர்களுக்கு உரியதாகிறது. எல்லா கால்களும் ஒரு திசையில் ஓடிக் கொண்டிருக்க, யாருமே அல்லது ஒருசிலர் மட்டுமே செல்லத் துணிந்த பாதையின் பக்கமாக பாத அடிகளைத் திருப்புவதில் தொடங்குகிறது, பெருங்கனவை நோக்கிய நெடிய பயணம். சிக்கலானது, பிரச்சனைகள் சூழ்ந்தது, வலியைத் தரக் கூடியது, விழுந்தால் அடி பலமாகப் படக் கூடியது, எனினும் அந்த ரிஸ்க்கை ரசித்து தடைகளை அடித்து நொறுக்க தயாராவார்கள். சினிமாத் துறையில் டைரக்ஷன் பணியென்பது அத்தகைய சவாலை உள்ளடக்கியது. ஒரு படத்தில் சில நூறு பேரை கையாள வேண்டியிருக்கும். அத்தனை பேரையும் சமாளிக்கக் கூடிய டீம் பிளேயராக இருக்க வேண்டும். அதனாலேயே டைரக்ஷன் பீல்டில் பெண்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இடம் பிடித்துள்ளனர். கேன் பிலிம் பெஸ்டிவலின் முன்னாள் ஜூரி தலைவர் கேன் கேம்பியன், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வரும் 1800 படங்களில் 7 சதவீத படங்கள் மட்டுமே பெண் இயக்குநர்களால் எடுக்கப்பட்டவை என்ற புள்ளிவிவரத்தை தெரிவிக்கிறார். ஆனால் பல கிலோ மீட்டர் பயணம் என்பது ஓரடியில்தான் தொடங்குகிறது! டைரக்ஷனிலும் ஒரு சில பெண்களாலேயே ஆரம்பத்தில் தடம் பதிக்க முடிந்தது. ஆனால் இன்று, உலக அளவிலும், இந்திய அளவிலும் அதிகளவில் பெண்கள் வரதொடங்கியுள்ளனர். சவால்கள் அதிகம் கொண்ட டைரக்ஷன் பீல்டில் முத்திரை பதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணும் முக்கியமானவரே! இந்த பெண்கள் தினத்தில் அவர்களை வாழ்த்துவோம்!


ரோகிணி


“சினிமாவில் வரும் கதைகள் பெரும்பாலும் ஆக்ஷன் - சாகசம் நிறைந்ததாகவே இருந்தன. இதுபோன்ற படங்களைப் பெண்களால் எடுக்க முடியுமா என்ற சந்தேகம், தயாரிப்பாளர்களுக்கு இருந்தது உண்மை. இப்போது மக்கள் யதார்த்த சினிமாவை விரும்பும் காலகட்டத்துக்கு வந்துள்ளனர். எனவே பெண் இயக்குநர்களும் அதிகரித்துள்ளனர். இதில் பெரும்பாலும் சினிமா குடும்பத்திலிருந்து வந்த பெண்களாகவே இருக்கின்றனர். வெற்றி பெற்ற ஆண் இயக்குநர்களில் பெரும்பாலானோர், சினிமா மீது உள்ள காதலால் தேடி அலைந்து சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்றவர்களே. அதேபோல் பெண் இயக்குநர்களும் சாதாரண கிராமங்களிலிருந்தும் வர வேண்டும். அப்போதுதான் யாதார்த்த சினிமாவுக்கு பல வர்ணங்கள் கிடைக்கும்” என்கிறார் 'அப்பாவின் மீசை' படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரோகிணி.


சுதா கொங்கரா


“மற்ற எல்லாத் துறைகளையும் போலவே சினிமாவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண் இயக்குனர்களின் வருகையை நடிகைகள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். பெரும்பாலும் ஆண் தொழில்நுட்பக் கலைஞர்களே நிறைந்துள்ள இத்துறையில், கேப்டன் ஆப் ஷிப்பாக ஒரு பெண் இருப்பது நிச்சயம் ஹீரோயின்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. திறமையை மட்டுமே நம்பும், ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் அதிகரித்து வருகின்றனர்”, என்கிறார் இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா.


உஷா கிருஷ்ணன்


“சினிமாவில் தற்போது பெண் இயக்குநர்களின் வருகை அதிகரித்திருப்பதற்கு விஷுவல் கம்யூனிகேஷன், மீடியா ஸ்டடீஸ் போன்ற கல்வியும் ஒரு காரணம். படிக்கும்போதே கதைகளை உருவாக்குதல், நாடகங்களை இயக்குதல், கேமராவைக் கையாளுதல், குறும்படங்கள் இயக்குதல் ஆகியவற்றை கற்றுக் கொள்வதால் பெண்களுக்கான தடைகள் அங்கே இல்லாமல் போகிறது” என்கிறார் ராஜா மந்திரி படத்தின் இயக்குனர் உஷா கிருஷ்ணன்.


Advertisement
திரைத்துறையில் சாதிப்பது சவால் நிறைந்ததே - மகளிர் தின ஸ்பெஷல்!திரைத்துறையில் சாதிப்பது சவால் ... எஸ்பிபி., சர்ச்சை : இளையராஜா செய்தது சரியே....! எஸ்பிபி., சர்ச்சை : இளையராஜா செய்தது ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in