Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2016 - திரையுலகில் சண்டைகளும்... சர்ச்சைகளும்...!

31 டிச, 2016 - 14:18 IST
எழுத்தின் அளவு:
2016-contraversy-in-tamil-cinema

2016 ஆம் ஆண்டை சற்றே பின்னோக்கி அசைபோட்டுப் பார்க்கும்போது சந்தோஷமான தருணங்கள் மட்டுமல்ல, திரையுலகில் நடந்த சர்ச்சைகளும், சண்டைகளும் கூட நினைவுக்கு வருகின்றன. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே பார்க்கலாம்....


சிம்பு - அனிரூத் - பீப் ஸாங்


2015 ஆம் ஆண்டில் டிசம்பரில் ஆரம்பித்த சிம்பு பாடிய பீப் ஸாங் என்கிற ஆபாச பாடல் விவகாரம் இந்த வருடத்திலும் தொடர்ந்தது. பல மாவட்டங்களில் வழக்கு தொடரப்பட்டு பூதாகரமாக வெடித்த இந்த விவகாரத்தில் சிம்பு இசை அமைப்பாளர் அனிரூத் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார் அனிரூத். பின்னர் 2016 துவக்கத்தில் அதாவது ஜனவரியில் ஊர் திரும்பிய அனிரூத், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் முன்பு ஆஜர் ஆனார். அனிரூத் ஆஜரான சில வாரங்கள் கழித்து பிப்ரவரியில் பீப் பாடல் விவகாரம் தொடர்பாக கோவை போலீசில் சிம்புவும் ஆஜரானார்.


ஆபாவணன் செக் மோசடி


ஊமைவிழிகள் உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஆபாவாணன் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்தன. குறிப்பாக வாடகைக்கு எடுத்த கார்களை விற்று மோசடி செய்தது, செக் மோசடி ஆகிய புகார்கள். செக் மோசடி புகார் காரணமாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


கலாபவன் மணி மரணத்தில் மர்மம்


ஏராளமான தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள கலாபவன் மணி கடந்த மார்ச் மாதம் 6- ஆம் தேதி திடீரென மரணம் அடைந்தார். அவருடைய பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மதுகுடித்தபோது மயங்கி விழுந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார் என்று சொல்லப்பட்டது. கலாபவன் மணியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் ஆல்கஹால் இருந்ததாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து மணியின் சகோதரர் தன்னுடைய அண்ணன் கொலை செய்யப்பட்டதாக சர்ச்சையைக் கிளப்பினார். மரணம் அடைந்த நடிகர் கலாபவன் மணியின் உடலில் விஷம் கலந்து இருப்பதாக பிரேதபரிசோதனையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் வேலை பார்த்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.


கபாலி பாடலில் சாதி வெறி


ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்படுத்திய படம் கபாலி. கலைப்புலி தாணு தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவான 'கபாலி' படத்தின் டீசர் வெளியான ஒரே நாளில் 50 லட்சம் முறை யூ-ட்யூபில் பார்க்கப்பட்ட சாதனையை படைத்தது. கபாலி டீசர் வெளியானதும் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் சாதிச் சண்டை தொடங்கியது. டீசரில் ரஜினி பேசும் ஒரு டயலாக் சாதி ரீதியிலான சர்ச்சைக்கு வித்திட்டது. கபாலி என்கிற பெயரே தலித்துகளை குறிப்பது தான் என ஒரு குரூப் கிளப்பி விட, அதெல்லாம் இல்லை என்று மற்றொரு குரூப் பிரச்னை செய்கிறது. சென்னையில் வாழும் தலித்கள்தான் கபாலி என்று பெயர் வைப்பார்கள். இது நாள் வரை கபாலி என்கிற பெயரை அடியாட்களுக்கும், அடிமைகளுக்கும் மட்டுமே திரைப்படங்களில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இயக்குனர் பா.ரஞ்சித் முதன்முறையாக ரஜினி போன்ற ஓர் ஆளுமைக்கு கபாலி என்கிற பெயரை வைத்து புதிய ட்ரெண்டை உருவாக்கிவிட்டார் என்று ஒரு குரூப் சலிக்காமல் ஸ்டேட்டஸ்களையும், ட்வீட்டுகளையும் தட்டிவிட்டது. போதாக்குறைக்கு கபாலி படத்தின் பாடல் வரிகளிலும் தலித்துக்கு ஆதரவான வார்த்தைகள் இருப்பதாக சர்ச்சைகள் வெடித்தன.


கபாலி வசூல் பிரச்சனை


கபாலி திரப்படம் உலகமெங்கும் 5000 திரை அரங்கில் வெளியானது. இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படமும் நிகழ்த்தாத வசூல் சாதனையை கபாலி படம் நிகழ்த்தியுள்ளது. பிரீமியர் ஷோ என அழைக்கப்படும் சிறப்பு காட்சியில் 1.4 மில்லியன் டாலர் வசூல் செய்து, இதற்கு முன் பிரீமியர் ஷோவில் சாதனை செய்த பாகுபலியின் வசூலை முறியடித்துள்ளது கபாலி என்று சொல்லப்பட்டது.


எல்லாத் தரப்பிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படம் என்பதால் 'கபாலி படம் பெரிய அளவில் லாபம் சம்பாதித்து கொடுத்திருப்பதாகத் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள் தரப்பிலோ பல ஏரியாக்களில் சுமார் 40% வரை நஷ்டம் என்று சச்சையைக்கிளப்பினார்கள். லிங்கா அளவுக்கு பிரச்சனை தீவரமடைவதற்கு முன்பே சாமர்த்தியமாக எதிர்ப்பாளர்களின் வாயை அடைத்துவிட்டனர்.


வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவு


எஸ்.ஆர்.எம். கல்வி நிலையத்தின் அதிபர் பச்சைமுத்துவின் பினாமி என்று சொல்லப்பட்டவர் வேந்தர் மூவீஸ் மதன். தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவானார் மதன். வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பில் பல திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் மதன் காணமல் போனதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காசிக்கு சென்று கங்கையில் சமாதி அடைகிறேன் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், காசி சென்று, பின்னர் அங்கிருந்து நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று அங்கு நிரந்தரமாக தங்குவதற்கு அவர் திட்டமிட்டிருக்கலாம் என்று தகவல்கள் பரவின. பல மாத தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு திருப்பூரில் உள்ள தன்னுடைய தோழி வீட்டில் பதுங்கியிருந்த மதனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.


மொட்ட சிவா, கெட்ட சிவா விவகாரம்


வேந்தர் மூவீஸ் மதன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த படம் மொட்ட சிவா கெட்ட சிவா. மதன் சிறைக்கு சென்றதால், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரியிடம் கைமாற்றப்பட்டது மொட்ட சிவா கெட்ட சிவா படம். படப்பிடிப்பு முடிவடைந்து படத்தை வெளியிட திட்டமிட்ட நேரத்தில் மதன் வாங்கிய கடனை சௌத்ரியிடம் கேட்டனர் கடன்காரர்கள். அதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே ராகவா லாரன்சும், ஆர்.பி.சவுத்ரியும் இணைந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் கொடுத்தனர். “நான் நடித்துள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் படப்பிடிப்பு முடிந்து திரையிடுவதற்கு தயார்நிலையில் உள்ளது. ஆனால், படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது. படம் வெளியாக உதவி செய்யும்படி போலீஸ் கமிஷனரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அவரும் உதவி செய்வதாக கூறினார்.


'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை வேந்தர் மூவிஸ் அதிபர் மதனும், 'சூப்பர் குட்ஸ்' படநிறுவன அதிபர் ஆர்.பி.சவுத்ரியும் இணைந்து தயாரித்தனர். பின்னர் வேறொரு பிரச்சினைக்காக மதன் சிறைக்கு போய்விட்டார். அதன்பிறகு ஆர்.பி.சவுத்ரி படத்தை தயாரித்துள்ளார். மதன் சிறைக்கு போய்விட்டதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கலை தீர்த்து வைக்கக்கோரி போலீஸ் உதவியை கேட்டுள்ளோம்'' பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது ராகவா லாரன்ஸ் சொன்னார். ஆர்.பி.சௌத்ரியோ மதன் தயாரித்த மொட்ட சிவா கெட்ட படம் வேறு. நாங்கள் தயாரித்த படம் வேறு. என்று அபாண்டமாக பொய் சொன்னார்.


அஜித் ரசிகர்களுடன் மோதிய ஜி.வி பிரகாஷ்குமார்


இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார்... நடிப்பு மீது உள்ள ஆசையினால்... ஹீரோவானார். தான் நடிக்கும் படங்களில் எல்லாம் ஏகத்துக்கும் மற்ற நடிகர்களையும் கலாய்ப்பதையே வழக்கமாக வைத்துள்ள ஜி.வி. பிரகாஷ்குமார், டிவிட்டரில் கன்னாபின்னா என்று ஏகத்துக்கும் ட்வீட் போடுவது வழக்கம். தீவிர விஜய் ரசிகர் என்று தன்னை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்பவர் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதனால் அவரை அஜித்தின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் செமத்தியாய் நக்கல் அடித்து வந்தனர். அதனால் கடுப்பான ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகர் அஜித்தை ஆமை என்று குறிப்பிட்டு கிண்டலடிப்பது போல ட்வீட் பண்ணினார். அஜித்தின் ரசிகர்கள் பொங்கி எழுந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு எதிராக ட்வீட்டில் அசிங்க அசிங்கமாக திட்ட ஆரம்பித்தனர். அவர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அஜித் பற்றிய தன்னுடைய ட்வீட்டையே நீக்கினார். இதேபோல், தனுஷையும் திட்டி ஒரு ட்வீட்டை போட்டுவிட்டு பிறகு டெலிட் செய்துவிட்டார்.


அஜித்திடம் வம்புக்கு போன சிம்பு


சிம்பு அஜித்தின் மிக பெரிய ரசிகர். தன்னுடைய படங்களில் கூட அஜித் பெயரை பயன்படுத்துவார். அதனாலேயே, அஜித்தின் ரசிகர்கள் பலர் சிம்புவின் ரசிகர்களாக மாறினர். சிம்பு தற்போது நடித்து வரும் டிரிபிள் ஏ படத்தில் அஜித் வசனமோ, பாடலோ...ஸ்டைலோ இருக்குமா? என்று மீடியா கேட்ட கேள்விக்கு, ”ட்ரிபிள் ஏ , அச்சம் என்பது மடமையடா படங்களில் நிச்சயமாக அஜித் பற்றி எதுவும் கிடையாது.” என்ற சிம்பு, “அஜித்தை யாருமே கண்டுகொள்ளதபோதே, அவரோட தோல்வி படத்தின் கட் அவுட் வச்சி 'தல' ன்னு கத்தி இருக்கேன். அவர் இப்போ வளர்ந்துட்டார்.அதனால் இப்போ எல்லோரும் அவங்க படங்களில் அஜித் பேரை யூஸ் பண்றாங்க. அதனால் இனி என் படங்களில் பண்ணமாட்டேன்” என திமிராக பதில் சொன்னார். ”இவரு என்னவோ தலயைவிட பெரிய ஸ்டார் போலவும், இவர் படத்தில் கட் அவுட் வச்சி கத்தினதாலதான் அஜித் வளர்ந்திட்ட மாதிரியும் பேசியிருக்காரு” என்று அஜித் ரசிகர்கள் கொந்தளித்து சிம்புவை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டனர். அதுமட்டுமல்ல அதுவரை சிம்புவுக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்த அஜித்தின் மானேஜர் இந்த பிரச்சனைக்குப் பிறகு சிம்புவுக்கு குட்பை சொல்லிவிட்டார்.


அமலாபால் விவாகரத்து சர்ச்சையில் தனுஷ்!


திரையுலகில் யார் விவாகரத்து ஆனாலும், பிரிந்தாலும் அதற்கு தனுஷ்தான் காரணம் என்பது போல மீம்கள் போட்டு சமூகவலைத்தளங்களில் அவரை கலாய்த்து தள்ளுகின்றனர். அமலா பால் - டைரக்டர் விஜய் விவாகரத்திலும் தனுஷ் பெயரில் சர்ச்சைகள் எழுந்தன. விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தெய்வமகள்' படத்தில் அமலாபால் நடித்தார். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அடுத்து 'தலைவா' படத்தில் நடிகர் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க வைத்தார். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தபோது இருவருக்கும் காதல் தீவிரமானது. திருமணம் செய்வதற்கு முன்பே அமலாபாலிடம் 'நீ கல்யாணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது' என்று விஜய் சொல்ல, அப்போது காதல் மோகத்தில் இருந்த அமலாபால் ஆனந்தமாக தலையாட்டினார். முதலில் 'நடிக்க மாட்டேன்' என்று வாக்குறுதி கொடுத்த அமலாபால், அதை மீறத் துவங்கினார். முதலில் மலையாளப் படத்தில் நடிக்கப்போனார் அமலாபால். அடுத்து 'பசங்க-2' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் பின்னர் தனுஷ் தயாரிப்பில் 'அம்மா கணக்கு' படத்தில் நடிக்கச் சென்றபோது பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அதன்பிறகு தனுஷ் உடன் விஐபி-2 படத்திலும் கமிட்டானதால் இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தனர். எனவேதான் இந்த விவகாரத்தில் தனுஷ் பெயர் அடிபட்டது.


ரஜினி மகள் சௌந்தர்யா விவாகரத்து


கோச்சடையான் படத்தின் இயக்குநரான சௌந்தர்யா, கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவரை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு வேத் என்ற ஆண் குழந்தை உள்ளது, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தனர். இவர்களை சேர்த்து வைக்க ரஜினிகாந்த் பெரும் முயற்சி எடுத்தார். சௌந்தர்யா உடன் சேர்ந்து வாழ அஸ்வின் சம்மதம் தெரிவித்தும், சௌந்தர்யா வேண்டாம் என்று மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி சௌந்தர்யா சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


பாரதிராஜா - பாலா மோதல்


குற்றப் பரம்பரை வரலாற்றை யார் படமாக்குவது என்ற போட்டியில் பாலாவுக்கும் பாரதிராஜாவுக்கும் மோதல் ஏற்பட்டது. “குற்றப்பரம்பரை என்பது நடந்த வரலாறு. இதை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். நான் மட்டும்தான் படமாக்கவேண்டும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. நான் எடுக்கும் குற்றப்பரம்பரை கதை வடிவிலானது. பாரதிராஜா எடுப்பது வரலாறு. இந்தப் பேச்சு வந்தவுடன் பாரதிராஜா இது என் கனவு படம், நீ எடுக்கக்கூடாது என்றார். நான் உங்க டைட்டிலை எடுக்கலை என்றேன். அதுக்கப்புறம், ஒரு பேட்டியில், “பாலா, என் எச்சிலை திங்க மாட்டான் என நம்புகிறேன்” என்று பேட்டி கொடுத்தார். ரொம்ப எரிச்சலானேன். வயசாகிவிட்டது; குழந்தை மாதிரி நெனச்சிக்குவோம்னு விட்டுட்டேன். இப்ப இந்த படத்துக்கு கதை எழுதற ரத்னகுமார்ங்கிறவன் கீழ்த்தரமா பேசியிருக்கான். இனிமேலும் பேசாம இருந்தா நல்லாருக்காது” என்று பாராதிராஜாவை கழுவி ஊற்றினார் பாலா. இப்படி இரண்டு இயக்குநர்களும் கட்டி உருண்ட குற்றப்பரம்பரை படத்தை பாலா பாரதிராஜா இருவருமே ட்ராப் பண்ஒவிட்டனர் என்பதுதான் காமெடி.


கமலை பிரிந்த கவுதமி


நடிகர் கமல்ஹாசனும், கவுதமியும் தாலிகட்டாத கணவன் மனைவியாக கடந்த 13 ஆண்டு காலமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவரை விட்டு பிரிவதாக நடிகை கவுதமி அறிவித்தார். கமல் கதமியின் இந்த பிரிவுக்கு ஸ்ருதிஹாசன் தான் என்று சொல்லப்பட்டது. கவுதமி பிரிவு குறித்து கமல் வாயை திறக்கவில்லை. ஆனால் கமல் அறிக்கை வெளியிட்டதாக வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவியது.


இந்நிலையில் நடிகர் கமல், கவுதமி பிரிவு குறித்து தான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்தார். "இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை” என்று தெரிவித்தார். கமலைவிட்டு பிரிந்த கவுதமி ற்போது தன் மகள் சுப்புலட்சுமியுடன் தனியாக வசித்து வருகிறார்.


கண்ணீர்விட்ட சிவகார்த்திகேயன்


ரெமோ படத்தை அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படம் தொடங்கப்பட்டபோது, ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ் சார்பில் சிவா ஆகியோர் தடையாக இருந்ததாக தகவல் வெளியானது. ரெமோ படத்தின் சக்சஸ்மீட்டில் இந்த விஷயமாக தன் உள்ளக்குமுறலை கொட்டினார் சிவகார்த்திகேயன். “ரெமோ படம் வெளியாகும் வரை பிரச்சினைதான். எவ்வளவு தான் பிரச்சினைக் கொடுப்பீர்கள். எவ்வளவு கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருகிறேன். சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து படம் எடுக்க வரவில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுக்க வருகிறோம். அதற்கு வேலை செய்ய விடுங்கள். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்னை வேலை செய்ய விடுங்கள். ” என்று சிவகார்த்திகேயன் கண்ணீர் சிந்தியபிறகும் பிரச்சனை முடியவில்லை. எனவே கடைசி முயற்சியாக போயஸ்கார்டனின் கதவை தட்டினார் சிவகார்த்திகேயன். சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தலையிட்டு சிவகார்த்திகேயனின் பிர்சசனைகளை தீர்த்து வைத்தார்.


குடும்பப் பஞ்சாயத்து டிவி நிகழ்ச்சியில் சண்டை


பிரபல தொலைக்காட்சியில் குஷ்பு நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் மாதவன் கலந்து கொண்டார், அப்போது குஷ்புவுக்கு மாதவன் முத்தம் கொடுத்தார். அது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இன்னொரு பக்கம் குடும்ப சண்டையை தீர்க்கும் நிஜங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவரது சட்டையை குஷ்பு பிடித்த சம்பவமும் சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக நடிகை ஸ்ரீபிரியா அடுத்தவர்கள் குடும்பத்துக்குள் மூக்கை நுழைக்கலாமா? நடிகைகளுக்கு எதற்கு இந்த வீண் வம்பு? குடும்ப சண்டைகளை தீர்க்க நீங்கள் யார் என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.


குஷ்பூவைப்போலவே இன்னொரு டிவியில் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனும் ஸ்ரீபிரியாவின் கருத்துக்கு பதில் அளித்தார். இந்த விவகாரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் ஓவராக ரியாக்ட் பண்ணியதை சகித்துக் கொள்ள முடியாமல் பலரும் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் சமூகவலைத்தளத்துக்கே குட்பை சொல்லி விட்டார் எஸ் ஆகிவிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்.


சரத்குமார் - ராதாரவி!


நடிகர் சங்கத்தில் ஊழல் செய்தனர் என சரத் - ராதாரவி இருவர் மீதும் விஷால் தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர். அதற்கு சரத்குமார் ராதாரவி இருவரும் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்பதால் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும்போதே, அவர்களை பொதுகுழுவின்போது நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கினர். இந்த விவகாரம் காரணமாக நடிகர் சங்க பொதுக்குழுவின்போது பெரும்மோதல் வெடித்தது.


சர்ச்சைக்குள்ளான கமல் உடைய அனுதாபம்!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தபோது திரையுலகமே துக்கத்தில் துவண்டுபோனது. ரஜினி தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். விஸ்வரூபம் பட விவகாரத்தில் ஜெயலலிதாவினால் பாதிக்கப்பட்ட சம்பவத்தை மறக்காமல் தன்னுடைய இரங்கல் பதிவில், சார்ந்தோருக்கு என் அனுதாபங்கள் என ட்விட் பண்ணினார் கமல். சுருக்கமாக அவர் வெளியிட்ட இரங்கல் ட்வீட் பெரும் சர்ச்சைக்குள்ளானது. என்னதான் ஜெயலலிதா மீது கடுப்பு இருந்தாலும் அதற்காக இப்படியா தன்னுடைய கசப்புணர்வை வெளிப்படுத்துவது என்ற விமர்சனம் கமல் மீது எழுந்தது.


இயக்குநர் சுராஜின் சர்ச்சை கருத்து


சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கத்தி சண்டை படம் வெளியானபோது, "கதாநாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது, தமன்னாவை கிளாமராக பார்க்கத்தான் விரும்புவார்கள். ரசிகர்கள் படம் பார்க்கும் போது சந்தோஷமடைய வேண்டும். ” என்று பேட்டியளித்தார் இயக்குநர் சுராஜ். இக்கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. "இயக்குநர் சுராஜ் நடிகைகள் பற்றி தெரிவித்த கருத்துகள் எனக்கு கடும் கோபமூட்டுகிறது. அவர் இதற்காக என்னிடம் மட்டுமல்ல திரைத்துறையில் பணியாற்றும் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். நம் நாட்டின் பெண்களைக் கேவலமாக பேசுவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. எனவே ஒரு தனிநபர் கூறிய இத்தகைய கருத்துகளை வைத்துக் கொண்டு திரைத்துறையே இப்படித்தான் என்று பொதுமைப் படுத்த வேண்டாம் என்று என் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று சுராஜ் கருத்துகளுக்கு தமன்னா கருத்து தெரிவித்தார். படத்தின் நாயகனான விஷால் கேட்டுக்கொண்டதால் மன்னிப்பு கோரினார் சுராஜ்.


Advertisement
2016-ல் ‛இன்னிசை' தந்த இசையமைப்பாளர்கள் யார்...?2016-ல் ‛இன்னிசை' தந்த ... 2017 எப்படி இருக்க போகிறது...? - மனம் திறக்கும் பிரபலங்கள்...! 2017 எப்படி இருக்க போகிறது...? - மனம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in