4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? |
இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை இயக்குநர் சிகரம் கே.பாலந்தருக்கும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷ்க்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது சரண்யா பொன்வண்ணனுக்கும் வழங்கினார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்.
மத்திய அரசால் ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டும் இந்த விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தலைமையில் விமரிசையாக நடந்தது. இதில் இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை, இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்கினார். மத்திய அரசால் வழங்கப்படும் இந்த விருதினை, தமிழ் சினிமாவில் இருந்து பெறும் இரண்டாவது நபர், பாலச்சந்தர் ஆவார். ஏற்கனவே, 1996ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இந்த விருதைப் பெற்றார். தமிழ் சினிமாவின் ஆலமரமாக விளங்குகிற பாலச்சந்தருக்கு, 2010ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமா தொழிலில் இருக்கும் பிரபல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் கலந்து கொண்ட விழாவில், பாலச்சந்தருக்கு இந்த விருதும், 10 லட்ச ரூபாய் காசோலையும், அவர் இந்திய சினிமாவிற்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டி வழங்கப்பட்டது. பாலச்சந்தருக்கு இந்த விருதினை பிரதிபா பாட்டீல் வழங்கியபோது, விழா நடந்த விக்ஜான் பவனில், கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் பிடித்தது.
தனுஷ், சரண்யா பொன்வண்ணனுக்கு விருது : இதே போல, 2010ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை, தமிழ்த் திரைப்படங்களான ஆடுகளம், தென்மேற்குப் பருவக்காற்று, எந்திரன் மூன்று படங்கள் வென்றன. ஆடுகளத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகராகவும், வெற்றிமாறன் சிறந்த இயக்குனராகவும், கிஷோர் சிறந்த எடிட்டராகவும் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை, தென்மேற்குப் பருவக் காற்றில் நடித்த சரண்யா பொன்வண்ணன் பெற்றார். சிறந்த துணை நடிகராக, மைனா படத்தில் நடித்த தம்பி ராமையாவும், துணை நடிகையாக நம்ம கிராமம் படத்தில் நடித்த சுகுமாரியும் விருது பெற்றனர். சிறந்த பாடலாசியருக்கான விருது, தென்மேற்குப் பருவக் காற்று படத்தில் பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்து பெற்றார். மேலும், தென்மேற்குப் பருவக்காற்று, சிறந்த தமிழ்ப் படமாகவும் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.
4 பேர் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் : "ஐ ஆம் கலாம்" என்ற படத்தில் நடித்த ஹர்ஸ் மேயர், "சாம்பியன்ஸ்" படத்தில் நடித்த சாந்தனு ரங்னேகர், மச்சிந்திரா கடேகர், ஆகியோரும், "பாபு பாண்ட் பாஜா" படத்தில் நடித்த விவேக் சாபுக்ஷ்வர் ஆகிய 4 சிறுவர்கள் இந்த ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளை பெற்றனர்.
ஜனாதிபதி வாழ்த்து : பின்னர் விழாவில் பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மாநிலப் படங்கள், முதல் முறையாக பல தேசிய விருதுகளைத் தட்டிச் செல்வது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக தெரிவித்தார்.
இந்தியாவில், அதிகமாக திரைப்படம் எடுக்கும் நகரம் மும்பை அல்ல; ஐதராபாத் ஆகும். இதில், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது என, விழாவில் பங்கேற்ற செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.