Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நெகிழ வைக்கும் 'அம்மா'க்கள்

08 மே, 2016 - 12:09 IST
எழுத்தின் அளவு:
mothers-day-special

தமிழ் சினிமாவையும் அம்மாவையும் பிரிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை எந்த காலத்திற்கும் பொருத்தமாக இருப்பது அம்மா சென்டிமென்ட் மட்டுமே. அந்தக் காலத்து அம்மாக்கள் 'அழ' வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தக் காலத்திய அம்மாக்கள் மகனின் காதலுக்கு உதவும் அம்மாக்களாக மாறியிருக்கிறார்கள்.

அது ஏனோ தெரியவில்லை, அம்மா என்றாலே அவர்களை நாயகர்களின் அம்மாவாகத்தான் அதிகம் காட்டுகிறார்கள். நாயகிகளின் அம்மாக்களுக்கு தமிழ் சினிமாவில் அதிக முக்கியத்துவம் ஏனோ இடம் பெறவில்லை.


ஒரு காலத்தில் முன்னணி நாயகிகளாக இருப்பவர்கள் கொஞ்சம் வயதான பிறகு 'அம்மா' கதாபாத்திரங்களுக்கு பிரமோஷன் செய்யப்பட்டு விடுகிறார்கள். இருந்தாலும் எல்லா அம்மாக்களுமே புகழின் உச்சிக்குப் போவதில்லை. ஒரு சிலர் மட்டுமே ஏதோ நம் சொந்த அம்மாவைப் பார்ப்பது போலவே திரையிலும் தெரிகிறார்கள். அப்படிப்பட்ட அம்மா நடிகைகள் எத்தனை நாயகர்களுக்கு அம்மாவாக மாறி மாறி நடித்தாலும் நமக்கும் மட்டும் நம் அம்மாவாகவே தெரிகிறார்கள்.


தமிழ் சினிமாவில் தற்போது சில அம்மா நடிகைகள் நன்றாகவே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். முன்னணி நாயகிகளை விட இவர்களுக்கு அதிகப் படங்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அப்படி நம்மை நெகிழ வைக்கும் சில அம்மாக்கள் யார் யார் என்று பார்ப்போம்.


சரண்யா பொன்வண்ணன்


இன்றைய தேதியில் இன்றைய அனைத்து முன்னணி நாயகர்களுக்கும் அம்மாவாக நடித்தவர், நடித்து வருபவர் சரண்யா பொன்வண்ணன். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்று தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர். நாயகியாக நடித்த போது கிடைக்காத விருது அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது கிடைத்தது பெருமைதான். இப்போதைக்கு இவரை விட்டால் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் இயல்பாக நடிக்க வேறு யாருமே இல்லை என தாராளமாகச் சொல்லலாம். இரண்டு நாளைக்கு முன்பு வந்த '24' படம் வரை அம்மா என்றால் சரண்யா என்று திரையுலக இயக்குனர்கள் தானாகவே யோசிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.


நதியா


80களில் நதியா நடித்த படங்களைப் பார்ப்பதற்கென்று இளைஞர்கள் கூட்டம் மட்டுமல்ல பெண்கள் கூட்டமும் அதிகமாக அலை மோதியது. அவருடைய தலையில் என்ன 'க்ளிப்' போட்டிருக்கிறார் என்பதில் இருந்து காலில் என்ன செருப்பு அணிந்திருக்கிறார் என்பது வரை பார்த்து பார்த்து பெண்கள் அவரைத் தொடர்ந்து காலம் ஒன்று இருந்தது. திருமணத்திற்குப் பின் நடிப்பை விட்டு ஒதுங்கியவர் மீண்டும் 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படம் மூலம் அழகான அம்மாவாக தமிழுக்கு வந்தார். தற்போது தமிழில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் அம்மாவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.


கோவை சரளா


90களிலும், 2000களிலும் நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பறந்த கோவை சரளா, அப்படியே குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அடிக்கடி அம்மா கதாபாத்திரத்தில் நடித்தாலும் 'காஞ்சனா' படம்தான் அவருடைய அம்மா கதாபாத்திரத்தை அதிகம் பேச வைத்தது. அந்தப் படத்தில் கூட நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் 'கொம்பன்' படத்தில் கிராமத்து அம்மாவாக, தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என நிரூபித்தார். இன்றும் தொடர்ந்து பல படங்களில் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


ரேணுகா


நாயகியாக அறிமுகமானாலும் ஏனோ சினிமா இவருக்குப் பெரிதாகக் கை கொடுக்கவில்லை. சின்னத் திரை பக்கம் சென்றவர் அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். அவ்வப்போது பெரிய திரை பக்கம் வந்தாலும் இவரை தமிழ்த் திரையுலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 'அயன்' படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடுத்தரக் குடும்பத்து அம்மா பாசத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார். சமீபத்தில் வெளிவந்த 'வெற்றிவேல்' படம் வரை இவருடைய அம்மா நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டிருக்கிறது.


ராதிகா


70களின் இறுதியில் நாயகியாக அறிமுகமாகி 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தவர் ராதிகா. அதன் பின் குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கும் தன்னை மாற்றிக் கொண்டார். அம்மா கதாபாத்திரங்களிலும் இயல்பாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். 'சூர்யவம்சம்' படத்திலேயே அம்மா கதாபாத்திரத்தில் தனி முத்திரையைப் பதித்தவர் சமீபத்தில் வெளிவந்த 'தெறி', கடந்த வருடம் வெளிவந்த 'தங்க மகன், நானும் ரௌடிதான்' ஆகிய படங்களிலும் அம்மா கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணன்


தமிழ் சினிமாவில் நேரடியாகவே அம்மா கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் இவர். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்டவர். தொடர்ந்து பல படங்களில் அம்மாவாக தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். மற்ற அம்மா நடிகைகள் நாயகியாகவே, நகைச்சுவை நடிகையாகவோ அறிமுகமாகி அம்மா கதாபாத்திரத்தில் அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், இவர் அம்மா கதாபாத்திரத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நல்ல பெயரைப் பெற்றவர்.


இவர்கள் தவிர, துளசி, அம்பிகா, ஊர்வசி, சுமித்ரா என இன்னும் பலரையும் சொல்லலாம். நாயகிகளாக இருந்து அம்மாக்களாக பதவி உயர்பு பெற்ற இவர்களைத் தவிர இன்னும் நேரடியாக அம்மாவாக அறிமுகமான நடிகைகளும் இருக்கிறார்கள்.


தமிழ் சினிமாவில் அம்மா சென்டிமென்ட் எப்போதுமே வெற்றி பெறக் கூடிய ஒரு சென்டிமென்ட்டாகவே உள்ளது. காலங்கள் எவ்வளவு மாறினாலும் அம்மா சென்டிமென்ட் மீது ரசிகர்கள் வைத்துள்ள பாசமும், நேசமும் என்றுமே மாறாது. அது சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படம் வரையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் 'எவர் கிரீன்' சென்டிமென்ட் என்றால் அது அம்மா சென்டிமென்ட் மட்டுமே.


Advertisement
22-ல் மூன்று மட்டுமே வெற்றி : 2016 - ஏப்ரல் மாத படங்கள் ஓர் பார்வை!22-ல் மூன்று மட்டுமே வெற்றி : 2016 - ஏப்ரல் ... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் - கீர்த்தி சுரேஷ் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் - ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in