4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? |
"சன் பிக்சர்ஸ் சக்சேனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மேலும் சிலர், போலீஸ் வசம் சிக்கியுள்ளனர். அவர்களும் விரைவில் கைதாகலாம் என தெரிகிறது. சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, 46. சேலத்தைச் சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட சக்சேனா, புழல் சிறையில் தள்ளப்பட்டார்.
சக்சேனாவை, இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, சைதாப்பேட்டை கோர்ட் அனுமதி வழங்கியது.தொடர்ந்து, அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் உள்ள, உதவி கமிஷனர் அலுவலகம் மற்றும் கே.கே.நகர் போலீஸ் நிலையம் என, இரண்டு இடங்களிலும் விசாணை நடந்து வருகிறது.கமிஷனர் திரிபாதி உத்தரவை அடுத்து, தென்சென்னை இணை கமிஷனர் சண்முகராஜேஷ்வரன், தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் ஆகியோர், சக்சேனாவிடம் நேரடியாக விசாரித்தனர். சக்சேனாவிடம், செல்வராஜ் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், பணப்பரிமாற்றம் நடத்தப்பட்டது எப்படி, யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது, ஒப்பந்த விவரங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.
இதன் அடிப்படையில், சக்சேனாவின் சகாக்கள் சிலரை போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ஒருவர், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பி.ஆர்.ஓ.,வும், சக்சேனாவின் விரல் அசைவுக்கு பணியாற்றியவருமாகிய, தம்பிதுரை. அரசுப் பணியில் இருந்து விலகி, சக்சேனாவின் கட்டளைகளை அரங்கேற்றி வந்துள்ளார்.அடுத்தவர், ஆட்டோ டிரைவராக இருந்து, சக்சேனாவின் நம்பிக்கைக்குரியவராக மாறியவர். இவர், சக்சேனா மற்றும் சன் குழும நிர்வாகிகளின், கட்டளைகளை இம்மி பிசகாமல் நிறைவேற்றுபவர். வேளச்சேரி சித்தார்த் வீட்டில் நடந்த தாக்குதல், செக்கர்ஸ் ஓட்டல் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் இவர் பெயர் முக்கியமான இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில் உள்ளவர் சசி; சன் பிக்சர்ஸ் முன்னாள் ஆபீஸ் பாய். இவர், நம்பிக்கைக்குரியவராக ஆனதால், தற்போது, மிகுந்த வளத்துடன் உள்ளார்.
இவர்கள் மூவரும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முக்கியகர்த்தாவான சக்சேனாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருந்துள்ளனர்.தயாரிப்பாளர்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு படத்தை வாங்குவது, தரமறுத்தால் அந்த படத்தை வினியோகிக்க விடாமல் செய்வது, வினியோகஸ்தர்கள், திரைப்பட உரிமையாளர்களுடனான பண விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டால் அவர்களை வழிக்கு கொண்டுவருவது, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது என, பல்வேறு பணிகளை செய்து கொடுப்பது உள்ளிட்டவற்றில் இவர்கள் ஈடுபட்டதாக போலீசுக்கு தெரியவந்துள்ளது.
இவர்களுடன், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக பணியாற்றிய சிலரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சன் பிக்சர்சின் எந்தெந்த படங்களுக்காக யார் யாரை இவர்கள் மிரட்டினர், பண விவகாரங்களை எப்படி கையாண்டனர் என்பது குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அதே நேரத்தில், சக்சேனாவிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.இன்று மாலை, 4 மணிக்கு சக்சேனாவை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால், போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.சக்சேனாவுடன் சேர்ந்து விசாரிக்கப்பட்டு வருபவர்களில் சிலரை கைது செய்து சிறையில் தள்ளவும் போலீசார் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
வீட்டில் சோதனை!சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவிடம் இரண்டாவது நாளாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் கேள்விகளுக்கு, சன் "டிவி நிர்வாகத்தை சேர்ந்த சிலரது பெயரையும் சக்சேனா குறிப்பிட்டு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆளுங்கட்சி அதிகாரத்துடன் வலம் வந்த சக்சேனா, அதன் பெயரில் மிரட்டி பெற்ற ஆவணங்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்த முடிவெடுத்துள்ளனர். இதில், மேலும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -