மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
"சினிமா நடிகனாகியிருக்காவிட்டால் கிரிமினல் வக்கீலாகி பல குற்றவாளிகளை நிரபராதியாக்கி நடமாட விட்டிருப்பேன்" என்பார் உலக நாயகன் கமல். அந்த விபத்து நடக்காமல் பார்த்துக் கொண்ட இயற்கைக்கு நன்றி.
புகழ்பெற்ற வக்கீல் பரமக்குடி சீனிவாசருக்கு, தன் மகன் கமல் தன்னைப்போல சிறந்த வக்கீலாக வேண்டும் என்கிற கனவுதான் இருந்திருக்கும். ஆனால் ஒரு விபத்தாக களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க சினிமாவே வாழ்க்கையாகிப்போனது கமலுக்கு.
"பிரபுவும், ராம்குமாரும் தவழ்ந்ததை விட சிவாஜி மடியில் அதிகம் தவழ்ந்தது நான்தான்" என்பார். அது உண்மைதான் தவழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அந்த மாபெரும் நடிப்பு பல்கலைகழகத்திலிலிருந்து பல பட்டங்களை பெற்று வந்தவர் கமல்.
குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய கமலுக்கு ஆரம்ப காலத்தில் நடிப்பின் மீது பெரிய ஈர்ப்பு இல்லை. ஒரு டெக்னீஷியனாக வரவே விரும்பினார். இதற்காக தங்கப்பன் மாஸ்டரிடம் நடனம் கற்றார். அவர் பணியாற்றிய படங்களில் துணை நடன இயக்குனராக பணியாற்றினார்.
"குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தபோதே நடிப்பதை விட சினிமாவில் நடிக்கும் மற்ற வேலைகளைத்தான் கமல் உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பார்" என்கிறார் அவரை தோளில் தூக்கிச் சுமந்த வெள்ளுடை வேந்தர் எஸ்.பி.முத்துராமன். "டேய் கமல் நீ ஒரு சகலகலா வல்லவனா வருவடா என்று அன்று சொன்ன எஸ்.பி.முத்துராமன்தான், பிற்காலத்தில் அதே கமலை வைத்து சகலகலாவல்லவன் என்ற வெள்ளி விழா படத்தைக் கொடுத்தார். அவர் சொன்ன அதே ஏவிஎம் வளாகத்தில்.
ஒரு நடன இயக்குனராக, இயக்குனராக, கேமராமேனாக வர விரும்பியவரை மாற்றியவர்கள் இரண்டு பேர் ஒருவர் எஸ்.பி.முத்துராமன் என்றால், இன்னொருவர் ஆர்.சி.சக்தி. நடனம், இயக்கம் என்று கமல் அலைந்து கொண்டிருந்தபோது கமலின் சொந்த ஊரான பரமக்குடியை சேர்ந்த ஆர்.சி.சக்தி அவரது தோழராக இருந்தார். இருவரும் சென்னை நகர தெருங்களை சுற்றி சுற்றி வந்தார்கள். உலக சினிமா பற்றி பேசினார்கள். அப்போது சக்தி "நான் படம் எடுத்தால் அதில் நீதான் ஹீரோ" என்றார். "நானா... ஹீரோவா... சும்மா ஜோக் அடிக்காதீங்கண்ணே..." என்றார் கமல்
சொன்னபடியே அவர் உணர்ச்சிகள் படம் எடுத்தபோது கமலஹாசனை ஹீரோவாக்கினார். 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசி 11 ரூபாய் அட்வான்சாக கொடுத்தார் ஆர்.சி.சக்தி. ஹீரோவா நடிக்க கமல் பெற்ற முதல் சம்பளம் வெறும் 11 ரூபாய்.
உணர்ச்சிகள் படம் எடுக்க ஸ்டூடியோவுக்கு வாடகை கொடுக்க முடியாமல் கமல் வீட்டிலேயே படப்பிடிப்பு நடந்தது. அப்போது சிலர் "நல்ல கதையா இருக்கு ஆனா ஒல்லிபிச்சான் மாதிரி அசிங்கமா இருக்கிற இந்த பையன வச்சு பண்றியே, ஜெய்சங்கர், ஜெமினி கணேசனை வச்ச பண்ணலாமே" என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் சக்தி கமல்தான் ஹீரோ என்பதை அடித்து சொல்லிவிட்டார்.
உணர்ச்சிகள் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே கமலை அழைத்த கே.பாலச்சந்தர். "என்னடா கமல் ஹீரோவாயிட்டியாம் என் படத்துல சின்ன ரோல் இருக்கு பண்ணுவியா?" என்று கிண்டலாக கேட்டபடியே அரங்கேற்றம் படத்தில் பிரமிளாவின் தம்பி கேரக்டர் கொடுத்தார்.
படம் எடுக்க பணம் இல்லாமல் உணர்ச்சிகள் படம் பாதியிலேயே நின்றது. இதற்கிடையில் கமல் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், பருவ காலம், குமாஸ்தாவின் மகள், நான் அவனில்லை, அன்பு தங்கை, என கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இதற்கிடையில் கமலை மலையாள பட உலகம் வாரி அணைத்துக் கொண்டது. அங்குதான் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார். படம் கன்னியாகுமாரி, அடுத்த படம் விஷ்ணு விஜயம், இரண்டு படங்கள் அங்கு ஹீரோவாக நடித்ததும், தான் நடித்து பாதியில் நின்ற உணர்ச்சிகள் படத்தை மலையாளத்தில் எடுக்க ஒரு தயாரிப்பாளரை ஏற்பாடு செய்து அந்த படத்தின் மலையாள உரிமைக்கான பணத்தை சக்தியிடம் கொடுத்து உணர்ச்சிகள் படத்தை முடிக்கச் சொன்னார். உணர்ச்சிகள் படம் ராசலீலா என்ற பெயரில் மலையாளத்தில் தயாரானது. அதில் கமலஹாசன் ஹீரோ. அங்கு சக்கைபோடு போட்ட படம் தமிழ்நாட்டிலும் ரிலீசாகி 100 நாள் ஓடியது. அதன் பிறகே உணர்ச்சிகள் படம் வெளிவந்தது.
உலக நாயகன் ஒரு படத்தின் நாயகனாக உருவானது இப்படித்தான். அதன் பிறகு உலக நாயகனின் நடிப்பு ஓட்டம் எவராலும் எட்டி பிடிக்க முடியாததாக இருந்தது. அதை சின்னதாக ரீவைண்டிங் செய்து பார்க்கலாம்...
கருப்பு வெள்ளை படங்களில் கேரக்டர் ரோலிலும், கதையின் நாயகனாகவும் நடித்து வந்த கமலை மன்மதலீலை படம் கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது. இத்தனைக்கும் அவர் அதில் நெகட்டிவ் ரோல் பண்ணியிருந்தார்.
சூப்பர் நடிகராக வளர்ந்த பிறகும் கமல் தன்னை ஒரு சப்பாணியாக்கிக் கொண்டு அரை நிர்வாணமாக நடித்த 16 வயதினிலே படம்தான் கமலின் சினிமா சரித்திரத்தை மாற்றி எழுதியது. அன்றைக்கு அறிமுக இயக்குனராக இருந்த பாரதிராஜாவின் கதையையும், திறமையும் நம்பி கோவணாண்டியாக நின்ற துணிச்சல் இந்திய துணைக் கண்டத்தில் எந்த நடிகனுக்கும் கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். தமிழ் சினிமா சரித்திரத்தில் இன்றும் நம்பர் ஒண் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பது 16 வயதினிலேதான்.
சட்டம் என் கையில் பக்கா கமர்ஷில் ஹீரோ படம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கமல் ரொம்ப ஜாலியாக நடித்த படம். 16 வயதினிலேவில் கிராமத்து சப்பாணியாக இருந்த கமல், அதே பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அல்ட்ராமார்ன் ஹீரோவாக நடித்தார். சிகப்பு ரோஜாக்களை அடிச்சிக்கிற திகில் படம் இதுவரை வரவில்லை.
கல்யாணராமன்தான் கமலின் முதல் வித்தியாசமான முயற்சி. தெற்றுப்பல் கோழையாக துணிச்சலுடன் நடித்தார். வெள்ளிவிழா கண்ட படம் அது. ராஜபார்வையில் பார்வையற்றவராக நடித்ததுடன். ராஜ் கமல் பிக்சர்ஸ்சை தொடங்கி தயாரித்த முதல் படமும் அதுதான்.
1981ல் முதல் இந்தி பிரவேசம். ஏக் துஜே கேலியே. தென்னிந்திய இயக்குனரும், நடிகரும் இணைந்து கொடுத்து ஒரு வருடம் ஓடிய படம். அதற்கு பிறகு சாகர், சனம் தேரி கசம் படமும் சரித்திர சாதனை படைத்து.
மூன்றாம் பிறை முதல் தேசிய விருதுதை பெற்றுக் கொடுத்தது. நாயகன் அடுத்த விருதை பெற்றுக் கொடுத்தது. வாழ்வே மாயம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்றவை காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள் ஆனது.
இந்திப் படங்கள்கூட ஹாலிவுட் பாணியில் படம் தயாரிக்க யோசித்துக் கொண்டிருந்தபோது துணிச்சலாக விக்ரமை தயாரித்து, நடித்தார் கமல், இன்றைய ஆக்ஷன் பிரமாண்ட படங்களுக்கு முன்னோடி விக்ரம். இன்றைய துறுதுறு இளைஞர்களின் யூத்புல் கதையை சத்யாவில் தொடங்கி வைத்துவிட்டார் கமல்,
புன்னகை மன்னனில் சார்லி சாப்ளினை பிரதிபலித்தார், அபூர்வ சகோதரர்களில் குள்ள மனிதனாக நடித்தார், அவ்வை சண்முகியில் பெண்ணாக மாறினார். குணாவில் மனநிலை பிரண்டவராக நடித்தார், இந்தியனில் தாத்தாவாக நடித்தார், ஹே ராமில் கோட்சேவாக துணிச்சலுடன் நடித்தார், மைக்கேல் மதன காமராஜனில் 5 வேடங்களில் நடித்தார், தசாவதாரத்தில் பத்து வேடங்களில் நடித்தார்.
இன்றைக்கு எடுக்கிற அத்தனை படங்களும் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்பே மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை டிஜிட்டலில் எடுத்தவர் கமல்.
இறுதியாக என்னவாக வேண்டும் என்று சினிமாவுக்கு வந்தாரோ அதே இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தார். விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் என கமல் அடுத்தடுத்து பரிமாறப்போகும் விருந்து நிறைய இருக்கிறது.
இந்திய அரசின் பத்மபூஷன், பல்கலைகழகங்களின் டாக்டரேட் உள்பட பல விருதுகள் கமலின் மார்பை அலங்கரித்திருக்கிறது.
தன் சக நடிகன், போட்டியாளன் என்பதையெல்லாம் மறந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 20 படங்களுக்கு மேல் இணைந்து நடித்து ஒரு கட்டத்தில் அவருக்கென்று தனி பாதையை காட்டிவிட்டு இன்றளவும் தோள்கொடுக்கும் தோழனாக இருக்கும் உன்னத குணம் வேறு எவருக்கும் வாய்த்திராதது.
கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துகொண்டிருந்த ரசிகர் கூட்டத்தை நற்பணி இயக்கமாக மாற்றி சமுதாயத் தொண்டுக்கு திருப்பி விட்ட ஒரு சமூக கலைஞன் கமல்.
சினிமா தொழில்நுட்பத்தில் புதிதாக என்ன வந்தாலும் அதனை தானே பரிசோதித்து பார்த்து அறிமுகபடுத்திய அட்வான்ஸ்டு கலைஞன் கமல்.
"கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன்" என நாத்திகத்துக்கே புது விளக்கம் கொடுத்த தத்துவஞானி இந்த கலைஞன்.
தன்னை பெருமைபடுத்திய காதல் இளவரசன் பட்டத்தை இன்னொரு இளம் நடிகனுக்கு தாரை வார்த்து கொடுத்த தயாளன்.
வேற்று சமூகத்தைச் சேர்ந்த ஆர்.சி.சக்தியை தன் தந்தைக்கு கொள்ளி வைக்கச் சொல்லி சகோரனாக்கிக் கொண்ட சமத்துவ கலைஞன்.
சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவுக்கே கொடுத்த உத்தம கலைஞன். இன்றைக்கும் கமலின் கணக்கு வழக்குகளை கூட்டி கழித்து பார்த்தால் கடனில்தான் அவர் இருப்பார் என்பார்கள். இத்தனைக்கும் அவர் கோடிக் கணக்கில் சம்பளம் பெறுகிறவர்தான்.
தன் கனவு படமான மருத நாயகத்தை எடுக்க முடியாமல் போனதும், தான் எதுசெய்தாலும் அதற்கு இடையூறு செய்யும் சில அமைப்புகளும், சில அரசும் கமலுக்கு வருத்தத்தை தந்திருக்கலாம். ஆனால் அதுதான் அவருக்கு பலம். அவரது அரசியல் பார்வையும், சமூக பார்வையும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருக்கும். ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவருக்காக சினிமா உலகம் உண்ணாவிரதம் இருந்தபோது அதனை தவிர்த்தவர். இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது "நம் மூக்கிற்கு கீழே நடக்கும் ஹிட்லர் ஆட்சியை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறோம்" என்று முதல் குரல் கொடுத்தது சமீபத்திய உதாரணம்.
உலக நாயகனுக்கு அகவை அறுபது. ஆனால் அவரது மனதுக்கும், உடம்புக்கும் என்றும் பதினாருதான். இன்னும் பல நூற்றாண்டுகள் வரலாம், சினிமா அப்போதும் இருக்கும். பல மாற்றங்களை சந்தித்திருக்கும். ஆனால் கமல் என்ற தனி மனிதனின், ஒரு உன்னத கலைஞனின் சாதனையை எந்த காலத்திலும், எவராலும் முறியடித்திருக்கவே முடியாது என்பது மட்டும் உறுதி. அப்படிப்பட்ட மகத்தான கலைஞன் வாழும் காலத்திலேயே நாம் வாழ்வதுதான் நமக்கான பெருமை.
உலக நாயகனின் கலைத்தொண்டு மென்மேலும் வளரட்டும்...!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல்! வாசகர்களாகிய நீங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை சொல்லலாம்!!