லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
நான் படத்தில் மக்கா ஏல மக்கா ஏல, சலீம் படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே - உள்பட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் பிரியன். நதியின் போக்கை பாதைகள் தீர்மானிப்பது போல், பாடல்களின் போக்கை கதைகளே தீர்மானிக்கின்றன என்கிறார் அவர்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
* நீங்கள் இதுவரை எழுதியதில் உங்களுக்கு திருப்தி கொடுத்த பாடல்கள் பற்றி சொல்லுங்கள்!
மழைத்துளிகளில எந்த மழைத்துளி அழகு. எல்லாமும்தான் அழகு என்பது போல் ஒரு படைப்பாளனாய் உயிர்த்து எழுதுகிற அனைத்து பாடல்களுமே மனதுக்கு நெருக்கமான திருப்தி கொடுத்த பாடல்கள்தான். அந்த வகையில் நான் எழுதிய அனைத்து பாடல்களையுமே முழு ஈடுபாட்டுடன்தான் எழுதியிருக்கிறேன். அதனால் எனது எல்லா பாடல்களுமே எனக்கு பிடித்தமான திருப்தியான பாடல்கள்தான். அதேசமயம் பெரிய அளவில் வெற்றி பெற்று மக்களை சென்றடையும் பாடல்கள் மனதுக்கு இன்னும் பெரிய திருப்தியை கொடுக்கும்.
* ஹிட்டாகும் பாடல்கள் மட்டும்தான் தரமான பாடல்களா?
ஒரு பாடலின் வெற்றிக்கும், தரத்துக்கும் சம்பந்தமே இல்லை. அதேபோல் தரமோ அல்லது வெற்றியோ அது ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறுபடும். ஒருவருக்கு பிடித்தமானது இன்னொவருவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். மேலும், வெற்றியை சூழ்நிலை தீர்மானிக்கிறது. தரத்தை தனி மனித மனம் தீர்மானிக்கிறது. அதேசமயம் ஒரு பாடலாசிரியருக்கு அவர் எழுதுகிற எல்லா பாடல்களுமே ஹிட் பாடல்கள்தான். தரமான பாடல்கள்தான்.
* டியூனுக்கு பாடல் எழுதுவது, எழுதி டியூன் போடுவது எதை சிறந்ததாக கருதுகிறீர்கள்?
முத்தம் பெறுவதா, தருவதா எது இனிமை என்று கேட்டால் இரண்டுமே இனிமை என்றுதான் சொல்வேன். மெட்டுக்கு பாட்டெழுதுகையில் சந்த ஓசையில் இருந்து துவங்குகிறோம். ஆனால் நேரடியாக பாடல் எழுதும்போது மொழியசையிலிருந்து துவங்குகிறோம். இருப்பினும் என்னைப் பொறுத்தவரை மெட்டை உள்வாங்கி அதனுடைய ஏற்ற இறக்கத்தில் லயித்து அதற்கு வார்த்தை கோர்ப்பதில் அலாதி பிரியம்.
* சாதாரணமாக எந்த மாதிரியான சூழலுக்கு அதிக ஈடுபாட்டுடன் பாடல் எழுதுவீர்கள்?
சித்திரை ஒரு சுகம் என்றால், மார்கழி இன்னொரு சுகம். அந்த வகையில் ஒவ்வொரு மெட்டும், ஒவ்வொரு பாட்டு சூழ்நிலையும் பிறந்த குழந்தையின் முகத்தை முதன்முதலில் பார்ப்பதற்கு இணையானது. அதனால் புதுமை, ஆர்வம் என்பது ஒருபோதும் என்னிடம் குறையாது.
* இன்றைய பாடலாசிரியர்கள் சுதந்திரமாக இயங்க முடிகிறதா? இல்லை இயக்குனர், இசையமைப்பாளர்களின் குறுக்கீடு உள்ளதா?
கவிதை- கவிஞன் ஒருவனின் தனிமனிதப் படைப்பு. பாடல்- இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பலரது கூட்டு முயற்சி. அதனால் இதில் சுதந்திரம் என்று யாரும் முறுக்கிக்கொண்டு நின்றாலும் தவறு. இதை தனித்தனி படைப்பாளிதான் தீர்மானிக்க வேண்டும். மேலும், அப்படி அவர்கள் குறுக்கிடுவது படைப்பை இன்னும் பலப்படுத்தவே என்றால் அது நல்லதே. என்னைப்பொறுத்தவரை பாடலாசிரியர் தனது எல்லையில் சரியாக இருக்கும்பட்சத்தில் சுதந்திரம் என்பது உள்ளது.
* முன்பு மாதிரி இப்போது கருத்தாழமுள்ள பாடல்கள் வருவதில்லை என்றொரு குற்றச்சாட்டு உள்ளதே?
நதியின் போக்கை பாதைகள் தீர்மானிக்கின்றன. அதேபோல் பாடல்களின் போக்கை கதைகளே தீர்மானிக்கின்றன. சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம் என தமிழ் இலக்கியமே காலத்திற்கு ஏற்றவாறு பயணித்தபொழுது பாட்டு இலக்கியம் மட்டும் விதிவிலக்கா என்ன. மேலும் எம்ஜிஆருக்கு கொள்கைப்பாடல்களும், சிவாஜிகணேசனுக்கு தத்துவப்பாடல்களும் கதைக்களத்தை தாண்டி அந்த காலகட்டத்தில் தேவையாக இருந்தன. அதேபோல் இந்த காலத்து கதைகள் எப்படி பயணிக்கிறதோ அதற்கேற்ப இப்போதைய பாடல்களும் எழுதப்பட்டு வருகின்றன என்பதே எனது கருத்து.
* சமீபகாலமாக யார் வேண்டுமானாலும பாடல் எழுதலாம் என்றொரு நிலை உருவாகியிருக்கிறதே. இது ஆரோக்யமான விசயமா?
வானம் தனக்கே சொந்தமென பறவை நினைத்தால் அது பறவையின் தவறு. எங்கும், யாவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதுதான் வானின் நிலை, இன்றைக்கு யார் வேண்டுமானாலும் பாடல்கள் எழுதலாம் என வாய்ப்பு கிடைப்பது நிச்சயமாக நல்ல விசயமே. அதே சமயம் யார் எழுதுகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது படைப்பின் தனித்துவம். மொழி, இலக்கியம், பாட்டு அனுபவம், இசையார்வம், படைப்பாளுமை கொண்ட படைப்பாளிகள் வருவதே பாட்டு உலகிற்கு நல்லது.
* பாடல்களின் வெற்றிக்கு காரணமாக இருப்பது இசையா அல்லது பாடல் வரிகளா?
உயிரும் மெய்யும் தாய்மொழி தமிழுக்கும் ஒவ்வொரு பிறப்பிற்கும் அவசியம். இரண்டில் ஒன்று பிரிந்தால் நிலைக்காது. இன்னொன்று இசையின்றி பாடல் இனிக்காது என்பது நிச்சயம். அதேசமயம் இசை மட்டுமே உச்சரிக்க இனிக்காது. இரண்டுமே சரிசமம்.
* நீங்கள் புதிய பாடலாசிரியர்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறதே?
அம்மை அப்பன் வித்திடவில்லையெனில் அடுத்த தலைமுறையில்லை. ஆதிகால மனிதன் போல இந்த கால மனிதன் இல்லை. உடல் பரிமாற்றம் மட்டுமல்ல அறிவு பரிமாற்றமும் இல்லையெனில் மனிதர்களுக்கும், மரங்களுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது. தான் கொண்ட அறிவை மற்றவர்களுக்கு சுடரேற்றுதல் என்பது நம்மை நாம் நமக்கு பின் நிலைக்க வைக்கும் உன்னதம்.
ஊதுவத்தி செய்வது முதல் வானுர்தி செய்வது வரை இந்த உலகில் எதையெதையோ கற்றுக்கொள்ள வாய்ப்புகளும் படிப்புகளும் இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாய் திகழும் பாடல்களை கற்றுக்கொள்ள மட்டும் வாய்ப்புகள் இல்லாத நிலை இருந்தது. இந்த நிலையை மாற்ற வேண்டும், அடுத்த தலைமுறை பாடலாசிரியர்களை உருவாக்க வேண்டும் என்கிற எனது பேரார்வம், பெருங்கனவு பத்தாண்டு உழைப்பில் உருவானதுதான் புதிய பாடலாசிரியர்களை உருவாக்க நான் துவங்கிய தமிழ்த்திரைப்பாக்கூடம்.
ஒரு பாடலாசிரியனாய் பலநூறு பாடல்களை கடந்து இன்றும் வேகம் குறையாமல் படைத்துக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியை போல முதலாமாண்டை கடந்து இரண்டாமாண்டில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் தமிழ்த்திரைப்பாக்கூடத்தின் பயணம் நூறு மடங்கு மகிழ்ச்சியை தருகிறது என்கிறார்,பிரியன்.