ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சதுரங்க வேட்டையின் மூலம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் நட்டி என்கிற நட்ராஜ். பக்கா சென்னை பையன் என்றாலும் இந்தியில் மோஸ்ட் வாண்டட் கேமராமேன். அமிதாப், கான்கள், கபூர்கள், அத்தனை ஒல்லி பெல்லி ஹீரோயின்களும் நட்ராஜின் நண்பர்கள். நட்ராஜ் தமிழ் படத்தில் நடித்தால் இந்திப் படங்கள் காத்திருக்கிறது. தமிழில் நான்கு படத்தில் வாங்கும் சம்பளம் அங்கு ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்தால் கிடைக்கும் ஆனாலும் நடிப்பே தவமாக கிடக்கிறார் நட்ராஜ்.
* ஒளிப்பதிவை விட்டுவிட்டு நடிக்க வந்துட்டீங்களே?
சின்ன வயசுல எனக்கு ரெண்டு ஆசை இருந்திச்சு. ஒண்ணு கிரிக்கெட் வீரரா வரணும், இல்லேண்ணா கேமரா மேனா வரணும். கிரிக்கெட் கதவு திறக்கல. ஒளிப்பதிவு கதவு திறந்தது. மும்பை பக்கம் சென்று டாக்குமெண்டரி படங்கள், குறும்படங்கள், விளம்பர படங்கள்னு வளர்ந்து சினிமாவுக்கு வந்தேன். இதுவரை இந்தியில் 17 படங்கள் பண்ணியாச்சு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஹாலிடே லேட்டஸ்டாக வேலை செய்த படம். ஒளிப்பதிவாளராக ஜெயிச்சாச்சு அடுத்த கட்டத்துக்கு நகரணும் இல்லையா அதுதான் நடிப்புக்கு வந்தேன். ஆனால் ஒளிப்பதிவை கைவிடவில்லை. நடிப்பும், ஒளிப்பதிவும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி.
* நடிகரா உங்க கேரியர் சரியாக அமையவில்லையே...?
நான் செலக்ட் பண்ணி நடிச்ச படங்கள் எல்லாமே நல்ல படங்கள்தான் ஆனா ஏனோ அது மக்கள்கிட்ட போய் சேரலை. நாளை, மிளகா, சக்கரவியூகம், முத்துக்கு முத்தாக படங்கள் எல்லாமே வெவ்வேறு விதங்களில் நல்ல படங்கள்தான். ஆனால் சதுரங்க வேட்டைதான் என்னை எல்லோருக்கும் அடையாளம் காட்டியிருக்கு. என்னை பொறுத்தவரை நடிப்பும் ஒரு வேட்டைதான். புலி வேட்டைக்குன்னு கிளம்புறப்போ சில நேரம் முயல்தான் கிடைக்கும். சில நேரம் இன்னிக்கு முயல் கிடைச்சா போதும்னு கிளம்புவோம் புலியே கிடைக்கும். அது மாதிரிதான் நடிப்பும் எப்போ என்ன கிடைக்கும். எந்த படத்துக்கு என்ன ரீச் கிடைக்கும்னு சொல்லவே முடியாது.
* சதுரங்க வேட்டை வாய்ப்பு எப்படி வந்தது?
இயக்குனர் வினோத் கதை சொன்னதும் பட்ஜெட் குறைவா நடிக்கிறதுக்கு யார் கரெக்டா இருப்பாங்கன்னு கேட்டிருக்கிறார். வினோத் என் பெயரை சொன்னதும். அவர் இந்தியில பிசியா இருப்பார் பேசுங்க கால்ஷீட் இருந்தா பண்ணிடலாமுன்னு சொல்லியிருக்கார். அப்பதான் நான் ஹாலிடே முடிச்சிட்டு ரெஸ்ட்ல இருந்தேன். உடனே படப்பிடிப்புக்கு கிளம்பியாச்சு. 40 நாள்ல படத்தையும் எடுத்து முடிச்சாச்சு.
* இந்தியில் நடிப்பீங்களா?
இந்தியில் நடிக்கணும்னா ஒண்ணு சிவப்பாக இருக்கணும், இல்லேன்னா பஞ்சாப் சிங்கா இருக்கணும் நான் ரெண்டுமே இல்லை. இந்தியில கேமராவுக்கு பின்னால, தமிழ்ல கேமராவுக்கு முன்னால இதுதான் பாலிசி.
* தமிழ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய மாட்டீங்களா?
ஏற்கெனவே சில படங்கள் பண்ணியிருக்கேன். அடுத்து சிம்புதேவன் இயக்குற விஜய் படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவு பண்றேன். இதற்கான லொக்கேஷன் தேர்வில் இருக்கிறேன். நடிக்கிறதுக்கு கதைகளும் கேட்டுகிட்டிருக்கேன். அமைந்தால் விஜய் படத்துக்கு பிறகு நடிப்பேன்.
* படம் இயக்குவீர்களா?
எல்லா ஒளிப்பதிவாளர்களுமே பாதி இயக்குனர்கள்தான். இயக்கும் ஐடியா இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இல்லை.
* கதம் கதம் படத்துல நடிக்கிறீங்க போல...?
கிட்டத்தட்ட அந்த படமும் முடிந்து விட்டது. நானும் நந்தாவும் இணைந்து நடிக்கிறோம். போலீஸ் கேரக்டர் நான் கெட்ட போலீசா இருந்து நல்ல போலீசா மாறுவேன். அவர் நல்ல போலீசா இருந்து கெட்ட போலீசா மாறுவார். இருவருக்கும் இடையில நடக்குற போராட்டம்தான் கதை.
* பேசாம ஒளிப்பதிவு செய்ய வேண்டியதுதானே எதுக்கு நடிக்க வருகிறார் என்ற விமர்சனம் இருக்கே---?
இத்தனை நாள் பேசாதவங்க இப்போ பேசுறாங்கன்னா நான் ஜெயிச்சிடேன்னு அர்த்தம். இயக்குனர்கள் நடிக்கலாம், நடிகர்கள் இயக்கலாம், படம் தயாரிக்கலாம். சினிமா என்பது பெரிய விளையாட்டு மைதானம் இதுல யார் யாருக்கு என்னென்ன விளையாடத் தெரியுமோ விளையாட வேண்டியதுதான். இவர் இந்த விளையாட்டைத்தான் விளையாடணும்னு யாரும் கட்டுப்படுத்த முடியாது.