ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
இந்தியாவின் டாப் 5 ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். 11 தேசிய விருதுகளால் தன் கேமராவை அலங்கரித்தவர். இந்த பெருமைக்கான எந்த அடையாளமும் இல்லாமல் அமைதியாக இருப்பவர். ஸ்லைஸ் சிகரெட்டும், கொஞ்சம் தனிமையும்தான் பிடித் விஷயங்கள். உலகம் முழுவதும் ஓடி ஓடி உழைத்தவர் இப்போது மகன் மனைவிக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே சென்னையில் நிரந்தர வாசம். சூர்யாவின் அஞ்சான் இப்போது இவரது கேமராவுக்குள் சேகரமாகிக் கொண்டிருக்கிறது. சொந்தமாக தயாரித்து இயக்கிய இனம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. சமீபத்திய அங்கீகாரம் பத்மஸ்ரீ விருது. அவரது சிறப்பு பேட்டி இதோ...
* பத்மஸ்ரீ விருதை எப்படி பார்க்குறீங்க?
விருதுகளை எப்பவும் நான் மனசுக்குள்ளேயும், தலைக்கு மேலயும் ஏத்திக்கிறதில்ல. நம்ம வேலைய அங்கீகரிக்கிறாங்கன்னு அந்த நிமிஷத்துல ஒரு தேங்ஸ் சொல்லிட்டு அடுத்த வேலைய பார்க்க போயிடுவேன். பத்மஸ்ரீ விருது அறிவிச்சப்போ நான் செல்போன்லகூட தொடர்பு கொள்ள முடியாத ஒரு இடத்துல இருந்தேன். ரெண்டு நாள் கழிச்சு பார்த்தப்பதான் என் போனில் மெசேஸ் பாக்சும் நிரம்பி இருந்திச்சு. மிஸ்டு கால்கள் நிறைய இருந்தது. அப்புறம் எல்லோருக்கும் போன் பண்ணி நானே பேசினேன். என்கூட பிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சவங்ககூட பேசினாங்க. பல பேருடைய நட்பை புதுப்பிக்க இந்த விருது உதவியா இருந்திச்சு.
* துப்பாக்கி, அஞ்சான்னு பெரிய ஹீரோக்களின் கமர்ஷியல் படங்களா பார்த்து பண்றீங்களே?
நான் டைரக்ட் பண்ற படங்கள் வேற ஒரு களமாக இருந்தாலும் எனக்கு ஆக்ஷன் படங்கள்னா ரொம்ப பிடிக்கும். ஹீரோ ஓடிவந்து பத்து பேரை அடிச்சு பறக்க விடும்போது விசிலடித்து படம் பார்க்குற ஆள் நான். அதுதான் அந்த மாதிரி படங்களை விரும்பி பண்றேன். அப்புறம் நிறைய சம்பளம் கொடுக்கிற படத்துல நடிச்சாத்தேனே இனம், மல்லி மாதிரி சொந்தமாக படம் எடுக்க முடியும்.
* திடீர்னு இலங்கை பிரச்னை கையில் எடுத்திட்டீங்களே?
ஒரு சின்ன திருத்தம் இலங்கை பிரச்னையை கையில எடுக்கவில்லை. போருக்கு பின்னால் மனிதர்களின் குறிப்பாக குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்ங்றது தான் இனம். படத்துக்காக ஈழத் தமிழர்களை எடுத்துக்கிட்டேன். இது எல்லா நாட்டின் யுத்தங்களுக்கும் பொருந்தும். அதோட நம்ம கண்ணு முன்னால நடந்த ஒரு விஷயத்தை நம் சொந்தங்களோட விஷயத்தை நாம சொல்லாம வேறு யார் சொல்வாங்க.
* டிஜிட்டல் சினிமா வேகமாக வளர்ந்துட்டிருக்கே?
விஞ்ஞான வளர்ச்சியில எல்லா துறையிலும் மாற்றம் வந்திருக்கிற மாதிரி சினிமாவில் வந்திருக்கிற மாற்றம் டிஜிட்டல் சினிமா. இந்த மாற்றம் நாம போடுற சட்டை மாதிரிதான். உடம்பும், ஆன்மாவும் மாதிரி உணர்வும் படைப்பும் இருக்கும். அதுக்குமேல டிஜிட்டல், கிராபிக்ஸ், டால்பி ஆடியோ மாதிரி விதவிதமான சட்டை மாட்டிக்கலாம்.
* அஞ்சான்ல புதுசா ஏதாவது...?
நிறைய பண்றேன் படத்தை பார்த்துட்டு ஆடியன்ஸ்தான் சொல்லணும். படத்தோட கதை எனக்கு தெரியும். ஆனாலும் நான் சொல்ல மாட்டேன். சூர்யா இதுல வேற மாதிரி இருப்பார். சூர்யாவும், அஜீத்தும் கேமராமேன் ஆர்ட்டிஸ்ட். நாம எப்படி எதிர்பார்க்குறமோ அந்த மாதிரி வந்து கேமரா முன்னாடி நிப்பாங்க.
* டிஜிட்டல் கேமரா வருகையால் கேமராமேன்கள் வருகையும் அதிகரிச்சிருக்கே இதை எப்படி பார்க்குறீங்க?
நல்ல விஷயம்தான். கிரவுண்டுல இறங்குற சான்ஸ் எல்லாருக்கும் கிடைச்சாத்தானே திறமையானவங்கள அடையாளம் கண்டு கொள்ள முடியும். அடிப்படை திறமை இல்லேன்னா கல்யாண வீடியோ கூட எடுக்க முடியாது. நல்ல திறமையில்லேன்னா சினிமால ஜெயிக்க முடியாது. இதை புதுசா வர்றவங்க புரிஞ்சுக்கணும். சினிமால கேமராமேன் எப்பவுமே அப்டேட்டா இருக்கணும். தினமும் புதுசா ஒரு டெக்னாலஜி, புதுசா ஒரு கேமரா வந்துக்கிட்டிருக்கு. அதை பாலோவ் பண்ணனும். எல்லாற்றுக்கும் மேலாக சமூத்தை கேமரா வழியாக பார்க்குற கிரியேட்டிவ் வேணும்.
* இந்திப் படங்கள் பக்கம் போகாம ஒதுங்கிட்டீங்களே?
இந்திப் படத்தோட ஒர்க்கிங் ஸ்டைல் எனக்கு பிடிக்கல. நான் எந்த ஒரு விஷயத்தையும் ரசிச்சு ரசிச்சு பண்றவன். இந்தியில அதுக்கான சான்ஸ் இல்லை. அதோட என் குடும்பம் சென்னையில் இருக்கு. அவர்களோட நிறைய நேரம் செலவு பண்ண தமிழ் படங்கள்தான் வசதியா இருக்கு.
* இனி படம் இயக்குவீங்களா?
கண்டிப்பா என்கிட்ட நிறைய ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. அடுத்து பக்காவா ஒரு கமர்ஷியல் படம் பண்ணலாமுன்னு இருக்கேன்.
இவ்வாறு அவர் கூறினார்.