மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஒரு ஹீரோவின் அடையாளம்... அவருக்கான கதாபாத்திரம்; அந்த கதாபாத்திரத்தின் அடையாளம்... அதன் 'கெட்டப்;' அந்த 'கெட்டப்'பின் அடையாளம்... அதற்கு 'கெத்து' ஏற்றும் உடைகள்! ஆக, ஒரு ஹீரோவின் கம்பீரத்திற்கான முக்கிய பொறுப்பை சுமப்பது ஆடை வடிவமைப்பு. இந்த சவாலான துறையில், தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் சத்யா. கடந்த 2010ம் ஆண்டு, தமிழ் சினிமா உலகில் நுழைந்த இவர், 'ராஜா ராணி, மான் கராத்தே, சண்டமாருதம்' உள்ளிட்ட 22 படங்களில், பணியாற்றி இருக்கிறார். சிவகார்த்திகேயன், அர்ஜூன், சரத்குமார், சசிகுமார் உள்ளிட்ட பிரபலங்களின் ஸ்டைலை, 'ஸ்பெஷலாக' காட்டிய பெருமை இவருக்குண்டு! பிரசாத் ஸ்டுடியோவில் பிஸியாக இருந்த மனிதரை சந்தித்து பேசிய போது...
சத்யாவின் சினிமா பிரவேசம்...?
ராமநாதபுரம், தேவிபட்டினம் தான் சொந்த ஊர். சின்ன வயசுல இருந்தே, சினிமா மேல ஆர்வம் ஜாஸ்தி! பள்ளிப் படிப்பு முடிச்சதும், கோவையில 'ஆடை வடிவமைப்பு' படிச்சு முடிச்சேன்; அப்படியே, சினிமாவுக்கு வந்துட்டேன்!
'மான் கராத்தே' சிவகார்த்திகேயனின் பளிச் 'லுக்' பற்றி...?
மஞ்சள், பச்சை, நீலம், பர்ப்பிள் - இந்த நாலு கலரை மட்டும் தான், சிவகார்த்திகேயனுக்கு பயன்படுத்தணும்னு ஒளிப்பதிவாளர் சுகுமாரும், கலை இயக்குனர் ராஜமோகனும் சொல்லிட்டாங்க. இதுக்குன்னு வித்தியாசமா நாங்க எதுவும் செய்யலை. ஆனா, அந்த நாலு கலரும் சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே நல்லா இருந்தது. 'மான் கராத்தே' எனக்கு இந்தளவுக்கு அடையாளம் கொடுக்கும்னு நான் நினைக்கவே இல்லை!
'பிரம்மன்' படத்துல சசிகுமாரை ஸ்டைலா மாத்துனது நீங்கதானே?
நான் ஒண்ணு சொன்னா நம்புவீங்களா... நிஜத்துல, சசிகுமார் அண்ணா மாதிரி ஸ்டைலான ஒருத்தரை பார்க்கவே முடியாது. எப்பவும் டி-சர்ட், ஜீன்ஸ்னு மார்டனாத் தான் இருப்பாரு. 'பிரம்மன்' படத்துல, அவரோட லுக், ஸ்டைலுக்கு ரொம்பவே மெனக்கெட்டு வேலை பார்த்தோம். ஆனா, அவரை கிராமத்து ஆளாகவே பார்த்து பழகின ரசிகர்கள், அதை ஏத்துக்கலை; அவ்வளவு தான்!
தமிழ் சினிமாவில், ஆடை வடிவமைப்பு துறையின் நிலை?
ஆடை வடிவமைப்பு துறையை பொறுத்தவரைக்கும், இங்கே பெண்களோட ஆதிக்கம் அதிகம். அதுவுமில்லாம, முக்கால்வாசி பேர், ஏதாவது ஒரு சினிமா பிரபலத்தோட உறவினரா இருக்காங்க; அனுபவமில்லாம, வெறும் பேருக்காக மட்டும் வேலை பண்ணிட்டிருக்காங்க! இந்த நிலைமை மாறணும்; திறமையையும், அனுபவத்தையும் மதிச்சு வாய்ப்பு கொடுக்கப்படணும்; அப்படி ஒரு நிலைமை வந்தா, தமிழ் சினிமா இன்னும் பிரகாசமா இருக்கும்!
சமீபத்துல ரசிச்ச படங்கள்?
இயக்குனர் பாலாவோட, 'பரதேசி;' அந்த காலத்துல ஆடைகள் எப்படி இருந்ததுன்னு தெரியாது; ஆனா, அதுக்கு முறையா ஆய்வு செஞ்சு, ரொம்ப பொருத்தமா பண்ணியிருந்தாங்க பூர்ணிமா!
சரி... உங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாராட்டு?
நான் 'சண்டமாருதம்' பட ஷூட்டிங்ல இருந்தேன். அப்போ, சிவகார்த்திகேயன் போன் பண்ணி, 'உங்களை ஒரு முக்கியமான ஆள் பாராட்டினார்'னு சொன்னாரு. 'யாரு?'னு கேட்டதுக்கு, அஜித் சார் வாய்ஸ்ல பேசிக் காட்டினாரு. எனக்கு இன்ப அதிர்ச்சி! 'மான் கராத்தே' படத்துல நான் நல்லா பண்ணியிருக்கேன்னு, அவர்கிட்ட அஜித் சார் பாராட்டியிருக்காரு!
அடுத்தது?
'ரஜினி முருகன்' படத்துல சிவகார்த்திகேயனுக்கு செம லோக்கல் கதாபாத்திரம்; அதுல, அவருக்கு கொஞ்சம் 'மாஸ் லுக்' கொடுத்திருக்கேன். 'ரோமியோ ஜூலியட்' படத்துல 'ஜெயம்' ரவியை மூணுவிதமான கெட்டப்புல காட்டியிருக்கேன். அப்புறம், அட்லி இயக்குற விஜய் படத்துல, எமி ஜாக்ஸன் ஹீரோயின்; அவங்களுக்கு நான்தான் ஸ்டைலிஸ்ட்!